இசை ஏன் இளைய சமுதாயத்தைக் கூடுதலாகக் கவர்கிறது!
ஒரு மனிதனின் மூளையில் அவன் இளமைப் பருவத்தில் கேட்டு, ரசித்து அவனுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் கொடுத்த இசைகளும், பாடல்களும் எந்தக் காலத்திலும் அழியாமல் பதியப்பட்டிருக்கும். எந்த வயதிலும் அவன் அதை நினைவு கூரக்கூடியதாக இருக்கும்.
இளைய தலைமுறையினர் எப்பொழுதும் சினிமாப்பாடல்களுடனேயே உழலும் பொழுது அவர்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று பெரியவர்கள் அலுத்துக் கொள்ளுகிறார்கள்;.
ஆனால் இசையினால் உடலிலும் மனதிலும் மிகச்சந்தோஷமான எழுச்கியும் கிளர்ச்சியும் பெரியவர்களை விட இளைஞர்களுக்குத்தான் கூடுதலாகத் தோன்றுகிறது. இதுவே இளையவர்கள் பெரியவர்களைவிடக் கூடுதலாகப் பாடல்களைக் கேட்பதற்கும் இசை வாத்தியங்களை விரும்பி ரசிப்பதற்கும் காரணமாகின்றது.
ஆனால் பழைய பாடல்களோ கர்நாடக இசைகளோ இவர்களைப் பெரிதும் கவர்வதில்லை. ஏனெனில் பருவ வயதில் இவர்களிடம் கூடிய ஹோர்மோன்கள் சுரக்கப் படுவதால் இசைக்கருவிகளின் அதீதமான சத்தங்களும் அடிகளும் நிரம்பிய புதிய பாடல்கள் இவர்களை மிகவும் கவர்கின்றன. சத்தமான இசைகள் இவர்களினுள் ஊடுருவி இவர்களின் இதயத்துடிப்பை அதிகமாக்கி மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கின்றன. இதனால்தான் பாட்டுக் கேட்க முடியா விட்டால் எதையோ இழந்தது போல் சோர்ந்து போய் விடுகிறார்கள்.
இந்த வயதில் அவர்களுக்கு இருக்கும் அதிகமான படிப்பு இன்னும் விளையாட்டு வேலை பணநெருக்கடி தேவைகள்.... என்று சேர்ந்து ஒரு இறுக்கமான சூழ்நிலையில் அமுக்கப் பட்டுக் கொண்டு வாழும் இளைய தலைமுறையினருக்கு இந்த இசைகள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றன. இதுவே இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானின் இசை போன்றவை இளைய தலைமுறையை வெகுவாகக் கவரக் காரணமாயிருக்கின்றன.
இளைய தலைமுறையினரின் புதிய பாடல் ரசனையை வைத்து அவர்களின் இசை ரசனை சரியில்லையென்று பெரியவர்கள் நினைப்பது மிகவும் தவறு.
ஏனெனில் புதிய பாடல்களிலும் சரி பழைய பாடல்களிலும் சரி நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.
திலீபன் செல்வகுமாரன்
யேர்மனி
பிரசுரம் - இளங்காற்று மார்ச்-1997