நான் ஒரு பெண்

வீணை என்று
சொல்லாதே என்னை
நீ மீட்டுகையில் நாத மிசைக்கவும்
மீட்டாதிருக்கையில் மௌனிக்கவும்
நான் ஒன்றும் ஜடமில்லை

கிளி மொழியாள் என்று
சொல்லாதே என்னை
நீ சொன்னதைச் சொல்லவும்
சொல்லாதிருக்கையில்
தனிமைச் சிறையில் வாடவும்
நான் ஒன்றும் பட்சி இல்லை

பூ என்று
சொல்லாதே என்னை
தேவைப்பட்டால் சூடவும்
வாடி விட்டால் எறியவும்
நான் ஒன்றும்
எந்த வண்டுக்குமாய்
இதழ் விரிக்கும் மலரில்லை

பாவை என்று
சொல்லாதே என்னை
நுள்ளியும் கிள்ளியும் நீ விளையாடவும்
அலுப்புத் தட்டினால் தள்ளி எறியவும்
நான் ஒன்றும்
வாய் பேசாப் பொம்மையில்லை

மீட்டத் தெரியாதவனிடம்
அகப்பட்ட வீணையாகவோ
பேசத் தெரியாதவன் வீட்டு
கூட்டுக் கிளியாகவோ
சூடி எறியும் பூவாகவோ
கிள்ளி விளையாடி
அள்ளி உறவாடி
பின் தள்ளி எறியும்
பாவைப் பிள்ளையாகவோ
எண்ணாதே என்னை

சொல்லாலும் செயலாலும்
அன்போடு தொடுகின்ற
மென் உறவுக்காய் ஏங்குகின்ற
உன் போல மனம் கொண்ட
பெண் என்று மட்டும்
எண்ணு என்னை
அது போதும் எனக்கு.

சந்திரவதனா
யேர்மனி
May - 2000


பிரசுரம் - ஈழமுரசு(4-10 மே - 2000)
ஒலிபரப்பு - ஐபிசி - நிலாமுற்றம்( 8.5.2000)
ஒலிபரப்பு - ஐபிசி - நங்கையர் நாழிகை (2001)

Related Articles

இன்டர்நெட் காதல்

முதுமை

சாவோடிவை போகும்!

நிலுவை

தத்துவம்

இலவு காத்த கிளியாக....!

எம்மவர் மட்டும் எங்கே...?

ஓ... இதுதான் காதலா !

வயல் வெளி

கேணல் கிட்டு