- வந்தாலும் வந்ததிந்த நாகரிகந்தான்
- வாத்து மந்தை பெருத்ததடா எங்கள் நாட்டிலே
- எந்தஇடம் போனாலும் கீ கீ, குவா குவா!
- என்னஎன்று திரும்பிப் பார்த்தால் கைத்தொலைபேசி! (01)
- வழியோரம் பேசுகிறார் கைத்தொலைபேசி!
- வண்டியிலே முணுமுணுப்பார் கைத்தொலைபேசி!
- குளியலைறையில் சளப்புகிறார் கைத்தொலைபேசி!
- கூடத்திலே படுத்துக்கொண்டும் கைத்தொலைபேசி! (02)
- தெருக்குப்பை அள்ளுபவர் வேலை நடுவில்
- சிரித்துப் பேசிக் குழைவது பார் கைத் தொலைபேசி!
- சறுக்குமரம் சறுக்கிக் கொண்டே பள்ளிச்சிறுமி
- தந்தையிடம் பொம்மை கேட்பாள் கைத்தொலைபேசி! (03)
- பழம்விற்கும் பாட்டி கையில் கைத்தொலைபேசி!
- பாம்பாட்டி கூடைக்குள்ளும் கைத்தொலைபேசி!
- குழந்தைக்குப் பால்கொடுத்துக் கொண்டோர் சின்னக்குறத்தி
- கூச்சமுடன் பேசுகிறார் கைத்தொலைபேசி! (04)
- பாதிமுகம் மழிக்கையிலே முடிதிருத்துநர்
- பதைத்து வெளியே ஓடுகிறார் கைத்தொலைபேசி!
- காதலியை முதலிரவில் தழுவப் போகையிலே
- காதிலே கோள்சொல்லுதடா கைத்தொலைபேசி! (05)
- மாலை கட்டிச் சாமிக்குப் பூசை செய்கையில்
- மடிக்குள்ளிருந்து அழைக்குதடா கைத்தொலைபேசி!
- தாலி கட்டும் வேளையிலே குறுக்கில் புகுந்து
- தடுக்குதடா திருமணத்தைக் கைத்தொலைபேசி! (06)
- தொலைக்காட்சிக் கதையிலெல்லாம் கைத்தொலைபேசி!
- சுற்றிச்சுற்றி வருகுதடா கைத்தொலைபேசி!
- தலைக்கு வந்த தண்டனையைக் கடைசி நொடியில்
- தப்பிக்கச் செய்யுதடா கைத்தொலைபேசி! (07)
- பிச்சைக்காரருக்கு ஒருஉருவா கொடுத்து நடந்தேன்;
- பின்னிருந்து கூப்பிட்டது காதில் விழவே
- அச்சமுடன் திரும்பிப் பார்த்தேன்; கூப்பிடவில்லை!
- ஆருடனோ பேசுகிறார் கைத்தொலைபேசி! (08)
- பேருந்தில் ஏறிக்கொஞ்சம் கண்ணை மூடினேன்
- பின்னிருந்து குடைந்ததடா கைத்தொலைபேசி!
- வேறிருக்கை மாற்றிக் கொண்டேன், நண்பர் சிரித்தார்
- விழித்துப் பார்த்தால் அங்கேயும் கைத்தொலைபேசி! (09)
- நாய்எதையோ கவ்விக்கொண்டு பாய்ந்திடக் கண்டேன்
- நான் விரட்டி அதைப் பிடித்தேன் கைத்தொலைபேசி!
- வாயிருந்தும், காதிருந்தும் கைத்தொலைபேசி!
- வைத்திலாதார் எத்தனைப்பேர் நாட்டில் இருப்பார்? (10)
- ஆய்வாளர் ஒருவர்தமை அணுகிக்கேட்கிறேன்,
- அவர்சிரித்தே ஏளனமாய் என்னைப் பார்க்கிறார்
- 'ஓய், என்ன விளையாட்டா, கைத்தொலைபேசி!'
- உமைத்தவிர எவர்க்கும் அதுஉயிர்த் தொலைபேசி! (11)
- அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்து
- ஆண்டவனின் திருப்பிறவி, கைத்தொலைபேசி!
- எங்கெங்கும் படையலிட்டுப் பூசை செய்யுங்கள்;
- எண்ணியதை நிறைவேற்றும் கைத்தொலைபேசி! (12)
கவிஞர் தங்கப்பா அவர்கள் கைத்தொலைபேசி பற்றி மிக அழகாக நுணுக்கமான பார்வையுடன் இக்கவிதையைப் படைத்துள்ளார். மிகஎளிய மக்களும் அதனைப் பயன்படுத்துவதனை மிகஅழகாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார். குப்பை அள்ளுபவர், பழம் விற்கும் பாட்டி, பாம்பாட்டி, முடிதிருத்துநர், பூசாரி, பிச்சைக்காரர் முதலிய எல்லோரும் இதனைப் பயன்படுத்துகின்றனர் எனப் பாடி இருப்பது, சாமான்யரும் இந்த அறிவியல் விந்தைக்கருவியை அனுபவித்து மகிழுகின்றனர் எனச் சமத்துவப் பார்வையைக் கூறுகின்றது. ஆனாலும், இந்த நாகரிகம் பயனற்ற முறையில், கண்ட கண்ட இடங்களில் எல்லாம் தேவை இல்லாது பயன்படுத்தப்படுவதையும் குறிப்பாகச்சுட்டுவது சிறப்பு! பாதிமுகத்தை மழித்துக்கொண்டிருக்கும் போது திடீரென முடிதிருத்துபவர் ஓடுவதைக் காட்டுவது நல்ல நகைச்சுவை! பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் கூடக் கைத்தொலைபேசி வைத்துள்ளான் என்று கவிஞர் சுட்டுவது அதனைக் கிண்டல் செய்கின்றாரா? அவனுக்கும் இந்த வசதி கிடைத்துவிட்டதே என்று மகிழ்வடைகின்றாரா? கவிஞரைத்தான் கேட்கவேண்டும்! பொதுவில் நம் அனைவரிடமும் உள்ள ஓர் அற்புதச்சிறுகருவியைப்பற்றிச் சுவைபட இவ்வளவு அழகான, சுவையானகவிதையைத் தந்த தங்கப்பா மனதில் தங்கும் தங்கக் கவிதை தந்துள்ளார்! நான் சுவைத்த அக்கவிதையை அனைவரும் சுவைக்க வேண்டாமா?
சான்று:
சிந்தனையாளன் - பொங்கல் சிறப்புமலர் 2007, திருவள்ளுவராண்டு 2038, பக்கம்:159-160