தோழமைக்கு...

எதிர்பாராத வேளையில்
எனக்குக் கிடைத்த
உன் நட்பால்
இன்றும் உணர்கின்றேன்
அன்பின் வலிமையை!

சந்தித்து
ஆண்டுகள்
ஆன போதிலும்
இன்றும் கேட்கின்றேன்
உன்
இதயத்தின் ஒலிகளை...

உன்
மொழிகளைக் கேளாத
செவிகளும் வியக்கின்றன
என் இதயத்துள் ஒலிக்கும்
உன்
மொழிகளைக் கண்டு.

இன்னமும்
கர்ணனையே
உயர் நண்பனென்று
போற்றும்
அறிவிலிகளைக் கண்டு
மெளனமாய்
சிவந்து போகின்றன
என்
விழிகளும் இன்று.

பாலையில்
நான் காய்ந்த போது
சோலையைக் காட்டிய
நீ
சோலையில் நான்
சுகிக்கும்போது
தொலைவில்தான்
நிற்கின்றாய்

அன்பென்பதை
அறிந்திடாத
எனக்குக் கூட
அதன் ஆற்றலையும்
புரிய வைத்த
உன்னால்தான்
இன்னமும்
என்
பேனாமுனைகள்
ஈரத்தைக் கசிகின்றன.

திசை தெரியா
அலைகடலுள்
என்னை
மீட்டெடுத்த
தோணி
நீ!

மொழி தெரியா
முட்டாள் என்னை
மொழிஞனாக்கிய
சிற்பி
நீ!

கலையறியா
காட்டான்
என்னை
கலைஞனாக்கிய
கலைமகள்
நீ!

முத்து
பிறப்பது
அதிசயமில்லை
கண்டெடுப்பதுதான்.
என்னைக்
கண்டெடுத்தது
நீயேதான்!

உன்னால்
பிறந்த
என் மொழிகள்
இன்று
உனக்காகவே
அர்ப்பணம் ஆகின்றன!

என்றென்றும்
நாம்
தொடர்ந்திடத்தான்
இன்றும்
வேண்டுகின்றேன்
இறையை நான்

- மு.கந்தசாமி நாகராஜன் -

Related Articles

இன்டர்நெட் காதல்

முதுமை

சாவோடிவை போகும்!

நிலுவை

தத்துவம்

இலவு காத்த கிளியாக....!

எம்மவர் மட்டும் எங்கே...?

ஓ... இதுதான் காதலா !

வயல் வெளி

கேணல் கிட்டு