பெருநிலம்...

கனவுச் சாம்பல் படர்ந்த மனிதர்கள்
இறந்தபடியே திரிகிறார்கள்...
உயிரைத் தேடும் ஆர்வமின்றி
தேய்ந்த உடல்களை அலையவிட்டபடி
தினமும் அவர்கள் வாழ முனைகிறார்கள்...
இறந்தபடியே வாழ்வது இப்போ
அவர்களுக்கு வசதியாயிற்று..!

மீண்டும் உயிரைச் சுமக்கும் எண்ணமேதும்
இப்போதைக்கில்லை....
உயிர்கள் அவர்களுக்கு மிகவும் பாரமாயிற்று..
அவற்றின் காவுதல்கள் பெரும் அபாயமாயிற்று..!
அவை பற்றிப் பேசுவதும் விவாதிப்பதும் கூட
கடும் பயங்கரவாதமாயிற்று..!
மௌனத்தை இறுகப்பற்றியபடி
இறந்தபடியே நடப்பது வசதியாகப் போயிற்று...!

இறந்தபடியே வாழும் மனிதர்களின் இனப்பெருக்கம்
வரலாற்றைத் தொலைத்தபடி சிதறிச் செல்கிறது...
சிதைந்த கனவுகளும் நசிந்த நினைவுகளுமாய்
பாரெங்கும் பரவி நீள்கிறது!
மெல்லத் தலை நீட்டிப் பேச விரும்புவோரை..
அவ்வப்போது அமைதிப்படுத்தி மௌனம் போதிக்க
ஆயிரம் புத்தர்களும் பத்தாயிரம் புனிதர்களும்!

கனவுச் சாம்பலின் வாசனையில்
பேருலகம் களிப்பெய்துகிறது....
அழகிழந்த நகரங்கள் அவர்களின்
கேலிக் கவிதைகளாகின்றன...!
சாம்பல் மேடுகள் கவர்ச்சி மிக்க
கதைக் களங்களாகின்றன....!

பட்டிமன்றம் செய்வதற்கும்
பரிசில்கள் பெறுவதற்கும்
புதையுண்ட பெருநிலங்கள்
புனைக் களங்கள் ஆகின்றன...!
காலம் காலமாய் மௌனிகளாய் இருந்தவர்கள்
கானமிசைக்கப் புறப்பட்டு விட்டார்கள்!

வாழ்வும் வளமும் மிக்க பெருநிலமொன்று
வாயும் கண்ணும் இழந்து
சாவின் வலிகளைக் கயிறுகளாக்கி
 இறந்தபடியே வாழும் மனிதர்களை
விழுந்து விடாமல் இழுத்துச் செல்கிறது...!

இந்து சமுத்திரத்தின் இரத்தப் புகாரில்
ஏராளம் பிணந்தின்னிகள் இன்னமும் நீச்சலடித்தபடி...!
நீச்சலின் வீச்சினைப்  போற்றிப் பாடிட
நீள் வரிசையில் நிறை வித்தகர்கள்....!

பெருநிலத்தின் பேரும் புகழும்
புதை குழியுள் உரமாகும்...
வலு நிறைந்த வாழ்வுகள் அங்கு விதைகளாகும்...
வலிகளினாலான கயிறுகள் வடங்கள் ஆகும்...
நீச்சலடிப்புகளை நிறுத்தும் நங்கூரங்களுமாகும்..
பெருநிலம் மீண்டும் துளிர் விடும்.....!


-சந்திரா இரவீந்திரன்
(Quelle : கீற்று28-08-2010 )

comments

Related Articles

இன்டர்நெட் காதல்

முதுமை

சாவோடிவை போகும்!

நிலுவை

தத்துவம்

இலவு காத்த கிளியாக....!

எம்மவர் மட்டும் எங்கே...?

ஓ... இதுதான் காதலா !

வயல் வெளி

கேணல் கிட்டு