மெல்லக் கொல்கின்ற நோய்

பருவம் வந்துள்ளே
பாதையினைத் திறந்து விட
பாவாடை இதழ் மூடி
பட படப்பில் தேனூறி
இடையாடிக் கொண்டிருக்கும்
இளைய பூ ஒன்றுக்கு
உடையுள்ளே நுளைந்து
உறிஞ்சித் தேன் குடித்து
மூழ்கி அதிலாடி
முடியும் வரை உறவாடி
காதல் செய்தபடி
கரு வண்டும்..

மூங்கிலதன்
நீளுடம்பில் நிறைந்திருக்கும்
நெடுங்காதல் இசையுணர்ந்த
காற்று அதன் மீது மோதும் அனு தினமும்
மோத அதனுள்ளே
பொங்கி எழும் காதலிசை
போக வழி தேடி ஓடும்
பொறுக்காமல்
இதயச் சுவருடைந்து வீழும்
அதனூடு
உள் நுளைந்த காற்று உறவாட
காடெங்கும்
காதலிசை வழிந்து பாயும்
சலிக்காமல்
வளைந்தும் நெளிந்தும் தலையசைத்தும்
குளைந்த படி
மோக இசை எழும்பும்
மூங்கிலதும் காதலுற
முட்டி உரசுகின்ற காற்றும்
பார்வையதன்
எட்டும் புலக்காட்சி இறுதியிலே
வான் மார்பை
கட்டித் தழுவுகின்ற போதில்
கடற் பெண்ணின்
உள்ளெழுமோர் மன அலைதான்
ஓடி வரும் கடலலையோ!
வான் கடலின் கலவியிலே
வழிந்தோடிப் போனவைகள்
கரைகளிலே வெண் நுரையாய்க்
கிடக்கிறதே நாளாந்தம்
கரைகளிலே நுரைகளினைத்
தள்ளியெனை வெறுப்பேற்றும்
கடலுக்கும் சுகித்திருக்க
வானிருக்கான்
அதிகாலை
வேலைக் கென்றவனும்
வெளிக்கிட்டுப் போனவுடன்
ஊரெல்லாம் சுற்றி வரும் பகலும்
அந்தியிலே
அந்தக் கரையிலவன் வரும் போது
மெதுவாக
ஓடிச் சென்றவனை அணைத்துச்
சிறு நொடியில்
அவனாய் இரவாக ஆகிடுவாள்
தனைச் சுற்றி
ஆயிரம் பேரிருந்து
அன்புருகப் பார்த்தபடி
காதல் மயக்கத்தில்
கண்களினை மின்னுவதால்
நினைப்பேறித் திரிகிறது நிலவும்

இதை எல்லாம்
பார்த்துப் பெருமூச்செறிந்து
படுக்கையிலே சுருளுகையில்
அடர்ந்த இருளோடும்
ஆழ் மெளனம் குலவுவதை
உடைந்தெரியும் மனதோடு
பார்க்கின்றேன்
இப்படியாய்
எனைச் சுற்றி ஓடுகிற
இச் சிறிய உலகத்தில்
ஏதோ ஓர் துணைக் கரத்தில்
இறுக்கிக் கை கோர்த்தபடி
எல்லாமே சுற்றி வாழ்ந்தபடி
கடக்கிறது எனக்கு மட்டும்
நாலு சுவரும்
நண்பரற்ற பனிக்குளிரும்
இறந்தாலும் தெரியாத இருப்பிடமும்
முன்னே ஓர்
என்னோடு நான் பேசும்
கண்ணாடி கவிதையென
இவை தவிர எனக்கொன்றும்
இல்லையடி இப்போதில்

மெல்ல எனைக் கொல்லும்
தனிமையெனும் ஓர் பெரு நோய்
வெறுமையினை என்னுள் விதைத்து
என் உயிரின்
மூளையினை உரித்துரித்துத் தின்கிறதே
நார் நாராய்
மூளையினை உரித்துரித்துத் தின்கிறதே

தி.திருக்குமரன்

Related Articles

இன்டர்நெட் காதல்

முதுமை

சாவோடிவை போகும்!

நிலுவை

தத்துவம்

இலவு காத்த கிளியாக....!

எம்மவர் மட்டும் எங்கே...?

ஓ... இதுதான் காதலா !

வயல் வெளி

கேணல் கிட்டு