திருகும் மனமும் கருகும் நானும்..

எடுத்ததற்கெல்லாம் இப்போ
இடிந்துடைந்து நெகிழ்ந்துருகும்
குழந்தைத் தனமான மனசே கேள்..!
பூவுலகில்
ஓடும் நீர் மேலே ஒரு முறைதான் மிதிக்கேலும்
வாடும் மனசெனினும் வழி நீள பழகி விடும்
 
காலம் சிரஞ்சீவி மலை கையில் வைத்தபடி
ஞாலம் முழுவதுமேன் நடந்தோடித் திரியுதடி..?
ஞாபக மறதிக்கும் நம் வலிக்குப் பூசுதற்கும்
தாபத்தில் துடிக்கும்
தளிர் மனசை விறைக்க வைத்து

கிடைத்ததனில் வாழப் பழக்குதற்கும்
அது கையில்
விடையென்றில்லாத
விடை மருந்தை வைத்திருக்கு
விடையிதுவா இல்லை,
வீண் பேச்சு எனச் சொன்னால்
உடை மாற்றிப் போவது போல்
உடம்பு, அதற்கென்ன
விடைத்தெரிவு வேறு கிடக்கிறது..?

என் கையில்
உன் வாழ்வுக்கெனத் தந்த
ஓர் பத்து விடைகளிலே
நன்றாகப் பார்த்து
நல்லதனைத் தேர்ந்தெடுத்தே
உன் கையிற் தந்தேன் உருப்படியாய்
இது பற்றி
என்னிடத்தில் ஏதும் கேட்காதே
விடைச் செடியின்
விதை என்றோ வந்து வீழ்ந்ததென்னில்
அதன் தன்மை
சதைப்பிடிப்பு, வளர்ச்சி, சாதுரியம்
என்பதெல்லாம்
விழும் விதையினுள்ளிருந்து
வந்தது தான் நானாக
எழும் செடியில்
ஏதும் மாற்றத்தைச் செய்யவில்லை
உழுது நீர் பாய்ச்சி
உரமிட்ட மண்ணொன்றில்
விழுந்தாய் விதையாக எங்கிருந்தோ
மண் தன்மை
செழித்தெழும்பும் செடியின்
சிற் சிறிய இயல்புகளில்
ஒழிக்கேலா உருவத்தை ஊற்றி விடும்
அது கூட
காலமோ அந்தக் கரு மண்ணோ
வடித்ததல்ல
தூலமாய் இருக்கும் துவக்கத்தின்
கையொன்றே
ஞாலப் பரப்பின் நடை முறையை
தன் விருப்பில்
காலமாய் மாற்றி வைத்துளது
மற்றபடி

விதைசெய்தல் விதைக்குள்ளே
வேண்டியதைப் பூட்டி வைத்து
பொதி செய்தல்
என்பதெல்லாமதன் வேலை
விதை வீழ
அதற்குள்ளே அழகாக ஆழச்செதுக்கியுள்ள
அவ்வவ் விதைகளகது
ஆற்றல்களுக் கேற்றபடி
அவற்றை வழி நடத்திச் செல்வதுதான்
என் வேலை
இவற்றை விட ஒன்றும் நானறியேன்
இன்னொன்று,
நிலாவைப் பார்த்தபடி
நீ நடக்க அது உந்தன்
கலாபக் காதலியாய்
கை நீட்டித் தொடர்ந்து வரும்,
என்றைக்கும் அது உந்தன்
பின்னாலே வருவதில்லை
எண்ணுகிறாய் உன் மனத்தால் அப்படியாய்
அது போல
நானும் ஒரு போதும் நகர்வதில்லை
என் மனசைக்
கோண ஒரு போதும் விடுவதில்லை
என்னிருப்பில்
இருந்த படியே தான் உங்களினை
இயக்குகிறேன்
வருந்தி நீவீர் தான் போகின்றீர்
வருகின்றீர்

காலம் நான்
என்றும் கடுகளவும் அசைவதில்லை
கருமச் சிரத்தையினால்
கண் கூட இமைப்பதில்லை
ஆதனினாலென்
முன்னால் அழுதழுது
கேள்விகளை அடுத்தடுத்துக் கேட்காதே
என்ற படி
தலை கோதிப் போனதடி காலம்
என் செய்வேன்

உலை கொதிக்கும் கேள்விகளை
எப்போதும் கேட்கின்ற
மனமே என் மனையாளே மாதரசே
உன்னுடைய, மனையாளென்கின்ற
பெயற் குணத்துக்கேற்றபடி
எனையாள நினைக்காதே ஒரு போதும்
எடுத்ததற்கும்
என் மேலே பாய்ந்து எரியாதே உன்னாலே
கேட்க முடியுமெனில்
துவக்கத்தை தொடக்கி வைத்த
அந்தத் தூலத்தின்
அலகுடைத்து கை முறுக்கி
நாலு கேட்டுக் கொள் நாள் முழுக்க
அதை விடுத்து
உள்ளேயே முடங்கிக் கிடந்த படி
முடியாமல் மூச்சிழுத்து விடுவதற்கே
முக்குகிற என்னிடமேன்..?

எத்தனை கேள்வி விசாரணைக்கென்று தான்
என்னாலே பதில் சொல்ல இயலும்..?
கண்ணைப்பார்..
கட்டிச் சிவப்பாகக் கலங்கிப் போய்க்கிடக்கிறது
விட்டு விடு என்னை
வீண் கேள்வி தினம் கேட்டு
பொட்டென்று போவதற்கு வைக்காதே
என் தோளை
கட்டிப் பிடித்தழுது கொல்லாதே
போ மனமே..
விட்டு விடு என்னை ...

தி.திருக்குமரன்

 

Related Articles

இன்டர்நெட் காதல்

முதுமை

சாவோடிவை போகும்!

நிலுவை

தத்துவம்

இலவு காத்த கிளியாக....!

எம்மவர் மட்டும் எங்கே...?

ஓ... இதுதான் காதலா !

வயல் வெளி

கேணல் கிட்டு