மகிழ்வென்னும் முகமூடி மாட்டல்..

எனக்கென்ன மகிழ்வோடு

இடியாமல் இருக்கின்றேன்

 

வாழ்ந்த வாழ்க்கை வந்த

வழி வழியே வீழ்ந்துடைந்து

பாழ் நிலம் போலிருண்டு

பயனற்றுப் போனாலும்

நானிறந்து போகவில்லை

நடக்கின்றேன் ஆதனினால்

எனக்கென்ன மகிழ்வோடு

இடியாமல் இருக்கின்றேன்

 

அப்பா வா என்று

அழைக்கின்ற குரலுக்கு

எப்பேர்ப்பட்ட இதயமும்

இளகும் தான், ஓடோடி

அப்படியே கட்டி அணைப்பதற்கு

அனுங்கும் தான்

இருந்தென்ன இதைவிட நீ

இறந்து விடு என மனமும்

அரித்தரித்துள்ளே

அனற்குளம்பை ஊற்றும் தான்

தெரிகிறது ஆனாலும்

தீய்ந்து விடாதிருப்பதற்கு

வரும் மாசம் எப்படியும்

வழி திறக்குமெனச் சொல்லி

இருக்கின்றேன் நாலாண்டாய்

இருப்பேன் இன்னமும் நான்

வெறுப்பென்று ஏதுமில்லை

வேதனையா? அது சும்மா

திரும்பிப் படுத்தால் தீர்ந்து விடும்

அதனாலே

எனக்கென்ன மகிழ்வோடு

இடியாமல் இருக்கின்றேன்

 

வயசேறிப் போகிறது

வாழ்க்கையெனும் படகில்

அசைவலைகள் அழுத்தி அடிக்கிறது

அந்திமத்தின்

கரைகளை நோக்கியெம்

கை பற்றி இழுக்கிறது

வருவாயா அதற்குள் வழி இடையில்

எனப் பெற்றோர்

உருக்கும் கேள்வியொன்றை உகுக்க

ராக் கனவில்

போக்கிடம் தெரியாத பொறியில்

நான் வீழ்ந்து

சாக்களையில் கட்டிலினால்

சரிந்து வீழ்ந்தெழுந்து

ஏக்கம் மூச்சு முட்ட

ஏது செய்வேன் என்றிரவில்

தூக்கம் தொலைத்துத் துடித்தாலும்

காலையிலே

அப்படியே இருந்தபடி

அயர்ந்தெழவும் மனமேனோ

இப்படி எத்தனை பேர் என ஆறும்

அதனாலே

எனக்கென்ன மகிழ்வோடு

இடியாமல் இருக்கின்றேன்

 

முள்ளந்தண்டின் முடிச்சுகளில்

கூரிரும்பால்

உள்ளே விட்டித்து உருட்டுவதாய்

கொதிக்கையிலும்

இதயக் கூட்டினையோர்

இடுக்கியால் இழுத்தெடுத்து

சதைகளினைப் பிய்ப்பதுவாய்

சா வலி உடம்பெல்லாம்

பரவிக் காய்ச்சலொடு பற்றி

எரிகையிற் தான்

அன்பான வார்த்தையோடு

ஆறுதலாய் வருடி விட

என் பாவி மனமேங்கும் ஏதிலியாய்

மறு நிமிடம்

தன் பாட்டில் கை நெளிந்து

தானே தடவி விட

என்னுடலம் எப்படியோ இழுத்தோடும்

ஆதலினால்

எனக்கென்ன மகிழ்வோடு

இடியாமல் இருக்கின்றேன்

 

தலை காய்ந்து நெஞ்சம்

தடுமாறிப் போகையிலே

தொலைவில் இருந்தாலும்

தொடுகின்ற வார்த்தைகளால்

உலை மனசின் மூடி திறந்தூதித்

தோழி சொன்னாள்

மகிழ்வென்ற முகமூடி மாட்டு

நாளடைவில்

அகமே அதுவாகிப் போகுமென்று

முடிந்தவரை

இழுத்திழுத் தம்முகத்தை

எனில் மாட்டப் பார்க்கின்றேன்

அழகாகும் காலமென்ற ஆசையிலே

ஆதலினால்

எனக்கென்ன மகிழ்வோடு

இடியாமல் இருக்கின்றேன்

 

- தி. திருக்குமரன்

Related Articles

இன்டர்நெட் காதல்

முதுமை

சாவோடிவை போகும்!

நிலுவை

தத்துவம்

இலவு காத்த கிளியாக....!

எம்மவர் மட்டும் எங்கே...?

ஓ... இதுதான் காதலா !

வயல் வெளி

கேணல் கிட்டு