உறைகிறது குருதி
உள்ளிருந்தெழுந்து வரும்
குறை மூச்சு எதற்குள்ளோ
கொழுவுப் பட்டது போல்
தடக்குண்டு, தடக்குண்டு
தள்ளாடிச் சரிகையிலே
சேடம் இழுத்துச் சிரசால் மின்னலொன்று
சூடாற உடற் சூட்டைச்
சூப்பி மேலெழுந்து
தாரகையாய் வானத்தில்
தைத்து ஒளிர்கிறது
பேரிழந்து நானிப்போ
பிணமானேன், ஆனாலும்
ஊர் முகமும் அது விடிய
உயிர் கொடுத்தோர் கனவுகளும்
தேர் சேரும் இருப்பிடத்தின்
திசை காட்டி எந்தனுக்கு
நேர் வழியில் எதிர் நிற்கும்
நெழிவு சுழிவுகளால்
எப்படி நீ சுழித்து
இலக்கெட்ட முடியுமென்று
பட்டறிவைச் சொல்லிப்
பாடம் எடுக்கிறது
கண்ணீரில் கடல் மிதந்த
கதையை அதிற் கேட்கும்
செந்நீர் வடிகின்ற
சிரசதிரும் ஓலத்தை
எந்நாளில் எவர் சாந்தி செய்வாரோ
எம் ஆன்மா
எப்போததைப் பார்த்து
இப்பிறப்பை மறந்திடுமோ
எனுமேக்கப் பேச்சுக்கள்
என் செவியைக் குடைகிறது
பூவுலகின் வரைபடத்தில்
புள்ளியாய்த் தெரிகின்ற
சாவுலகின் தலைநகரத் தீவில்
தலைப்பயணி
பொறி ஒன்றைப் பற்றவைத்துப்
போய் விட்ட போராட்டம்
உரிய காலமொன்றில் உதித்தெழும்பும்
அதன் பாதை
தெரிகிறா உனக்கென்று
திசை காட்டும் அசரீரி
அனாகதம், விசுக்தி வழி
அசைந்து ஆக்ஞையிலே
கனாவால் விழித்தெழுந்து
காண்பதுவாய் ஒளிர்கிறது
ஒளி காட்டும் பாதையிலே ஓடுகிறேன்
என் தேசம்
வழி காட்ட ஒருவன்
வந்திடுவான் எனச் சொல்லி
நாடியிலே கை கொடுத்து
நம்பிக்கையோடின்னும்
தேடிக் கொண்டிருக்கிறதோர்
தீபத்தை! தூரத்தில்
இந்தா வருகின்றேன்
இரு என்று கை காட்டி
அந்தா ஒருவன்
ஆட்களொடு வருகின்றான்
பிணத்தின் கனவென்றும்
பிழைக்காது எனச் சொல்லி
பயணி ஒருவன் தன்
பாதைகளின் வழிக்குறிப்பில்
இனி எழுதிச் சென்றிடுவான்
இதை..
- தி. திருக்குமரன்