வானத்தைக் கிழித்து
காற்றிலே சிறகடிக்கும்
ராஜாளி அவளின் கனவு.
முகில்களின் முதுகுகளில்
படர்ந்தபடி உன்னி உன்னி
சவாரி போகின்றன
நம்பிக்கைப் பட்டங்கள்.
கூரையின் பொத்தல்களினுாடு
முகத்தில் தெறிக்கிறது
மேகத்தின் வைரத்துளி.
நள்ளிரவில் பசியோடு
பச்சைக் குரல் ஒன்று
கேவிக் கரைகிறது.
வேட்டொலிகள் நெருக்கத்தில்
ஒற்றைப் பையோடு
ஓடுகின்ற அவதியிலும்
அப்பு தேய்த்துக் கிடந்த
திண்ணையை தொட்டுப்
பிரிகிறது விழிகள்.
வழுக்குப் பாறையில்
ஊசலாடுகிறது
வாழ்க்கையின் நிஜம்.
உறங்காத இமைகளில்
இன்னமும்
ஊசலாடிக் கிடக்கிறது
நிறமுதிர்ந்த கனவுகள்.
சூனியமாகிப் போன வானத்தில்
நுாலறுந்து பதகளிக்கிறது
வாழ்க்கைப் பட்டம்.
ஓ.. கால்களுக்கு கீழே
பூமியும் கூட காணாமல்
போயிருந்தது.
- தமிழினி ஜெயக்குமாரன் (சிவகாமி சுப்ரமணியம்)
அவளின் கனவு
தமிழினி ஜெயக்குமாரன்
கவிதை/Poem/Gedicht