மெல்ல மெல்ல விரியும் பூவிதழுக்கு
மெல்ல மெல்ல சுருங்கும் நரம்புகள் தெரியாது.
செவ்வரத்தைக்கும் கொடிமல்லிகைக்கும்
நேரகாலந்தெரியாது இதழ் விரிக்கும்
துடியடிப்பு உண்டு.
நாலுமணிப்பூவுக்கு
சூரியன் மேற்கில் படுப்பதும் பூவிதழ் விரிப்பதும் தெரியும்.
சாவதற்கு முன், நரம்புகள் சோர்வதாக
உங்களுக்கு யாரும் சொல்லியிருக்க முடியாது.
முதலை விடும் பெருமூச்சுக்கு
ஆறு ஒரு தடவை விம்மிப்புடைக்கும்.
பூவின் வாசனை அறியாத
ஒரு வாழ்க்கை யாருக்கும் புரியாது.
விம்மியடிக்கும் முதலை அதிர்க்கும்
நீரின் அதிர்தலை
பிறப்பிற்கான எதிர்கூரலென அறிந்தும்,
சோர்ந்துபோகும் நரம்பின் இயலாமையை
அவள் சொன்னபோது,
விலங்கின் வாய்க்குள்
அந்தரித்து அடங்கும்
ஓருயிர் உங்களுக்கு அண்மித்தானது என
நீரமையைதியடைந்திருக்கலாம்.
எல்லோரது வீட்டின் கதவையுடைத்து
ஒரு மரணம் வன்நுழைவதுபோல
மெல்ல நுழைந்தது ஒரு சிரிப்பு.
மரணத்தை மகிழ்வுடன் ஒப்பிட
நானொரு நாலுமணிப்பூ வளர்ப்பவனல்ல...
நரம்புகள் அறுந்து அன்று இறந்தவள் என் அக்காவாக இருந்தது,
செவ்வரத்தைக்கும் கொடிமல்லிகைக்கும் தெரியாது.
- ஜெயரூபன் (மைக்கேல்)
13.11.2016
Quelle - Facebook
நானொரு நாலுமணிப்பூ வளர்ப்பவனல்ல
ஜெயரூபன் (மைக்கேல்)
கவிதை/Poem/Gedicht