 பிரிவின் துயர் உன்னைப் பிழிந்து உருக்குகையில் அருவி போற் சொரிந்து அழுது விடு உள்ளடக்கி எரிந்தெரிந்து நெஞ்சால் எதுவுமே பேசாமல் முறிந்த மரம் போல முகஞ்சரிந்து கிடக்காதே பாழடைந்த கல்லறை போற் பரவுகின்ற உன் மெளனம் தோளை உலுப்பியுந்தன் துயரெனக்குச் சொல்லுதடி
நீளுமெம் பிரிவென்று நினைத்தோமா அன்பூற வாழத்தான் சேர்ந்தோம் வலிய விதி எம்மிடையே எழுதுகின்ற கதைகளுக்கு என்ன தான் நாம் செய்வோம் தொழுதுகொண்டு வாழ்துயரம் தொலையோணும் என்பதற்காய்
உழுது விதைத்த மண்ணில் உரம் போட நினைத்தேன் நான் அழுதழுது நீயும் அனுசரித்தாய் எம் சேர்வின் விழுதொன்றும் உன்னோடு விருட்சமாய் வளர்கிறது எழப்போகும் அதனுடைய எதிர்காலத்துக்காயேனும் 'அழுதூத்து' உன்னுடைய அடர் மெளனம் கரையட்டும் புறாவின் குறுகுறுப்பை,புன்னகையைச் சுமந்தபடி உறவு கொண்டிருந்த காலத்தில் உணர்வொழுக இறக்கும்வரை உன்னோடு இருப்பேன் என்றன்று உறக்கத்திலும் நீ சொன்ன ஒட்டுறவை எண்ணிப் பார் மறக்கும் பழக்கமென்றும் மனிதருக்கு உண்டெனினும் கிறக்கம் தருமன்பும் கிழிந்துறைந்து போமோடி? உன் விழி பாய்ச்சிய உயிர் கவர் காந்தமும் உன்னுடல் வீசிடும் ஒருவகை வாசமும் இன்றுமென் நாசியில் எழுந்தெழுந்தூறுது கண்களில் அலையலைக் காட்சிகளாகுது குன்றென இருந்த நான் குமைந்து குலைந்துயிர் சென்றெனை விட்டு சிதம்பிப் போம்வரை உன்னுடை வாசமும் கண்ணுமே முடிவிலும் என்னுடன் சென்றிடுமென்பதைப் புரியடி! புலம்பெயர் குளிர்ப்புழுக்கம் புரியாமல் மிகப் பெரிதாய் புலப்படலாமுனக்கென் புன் வாழ்வு இங்கே நாம் ’விலங்கொடு’ விலங்காய் வேறொரு மனிதராய் கலங்கிய மனசொடு காலம் கடத்திடும் நிலமதில் வந்துநீ நிற்கிற வரைக்கும் உலக உருண்டையின் ஒட்டடை உணராய் பிரிவென்னும் தீயெரியப் பெரும் மெளன எண்ணையினை தெரிந்தே நீ ஊற்றுகின்றாய் தீய்வனென்று தீயட்டும் உருகுகின்ற மணம் விழுதை உறுத்தாமற் பார்த்துக் கொள் எத்தனையெத்தனையோ பேரின்னும் இது போல தத்தமது வாழ்விற் தகிப்பதற்கு எவரெல்லாம் மொத்தமாய் முழுதான காரணமோ அவர் நோக்கி இத் தீயில் ஓர் கவளம் எடுத்துப் பலம் சேர்த்து மொத்தமாய் அவரழிய மூசி எறி ஓர் தேசம் பத்தரை மாற்றுத் தங்கமாய் பர்ணமிக்கும் அத்தினத்தில் நானுன்னை அடைவேன் அதன் பிறகே மடிவேன் நான் உன்னுடைய மடியில்.. தி.திருக்குமரன்.
|