home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 20 guests online
ஒரு நாள் இரவில் - ஒரு பாடம் PDF Print E-mail
Arts - சினிமா
Written by ஆழ்வாப்பிள்ளை   
Tuesday, 26 January 2016 13:28
பொதுவாக மலையாள திரையுலகில் பிரமாண்டமும் அதற்கான செலவும் தவிர்க்கப் பட்டிருக்கும். அதற்கு நேரெதிராக தமிழ் திரையுலகம் பெரும் செலவுகள் செய்து பிரமாண்டமாகத் தன்னை வெளிப்படுத்தும். தமிழில் கிராமப் படங்கள் எடுத்தாலும் நாயகனோ நாயகியோ கனவு காணும் பொழுது வெளிநாட்டுக்கு வந்து ஆடிப்பாடி விட்டுப் போவார்கள். ஆனாலும் கடந்த வருடம் சிறிய முதலீட்டுடன் நல்ல கதையுடன் சில படங்கள் வந்திருந்ததையும் அவை வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

சென்ற வருட இறுதியில் குறைந்த செலவில் வந்த நிறைவான இன்னுமொரு திரைப்படம் „ஒரு நாள் இரவில்'. „ஷட்டர்' என்ற மலையாள வெற்றித் திரைப்படத்தின் தழுவல்தான் இந்த ஒரு நாள் இரவில் திரைப்படம். மலையாளத்தில் வெளியான ஷட்டர் படத்தையும், அதன் தழுவலான ஒரு நாள் இரவில் படத்தையும் ஒப்பீடு செய்வதாயின் நிறைய பேச வேண்டி இருக்கும். அதைத் தவிர்த்து தமிழில் வெளிவந்த ஒரு நாள் இரவில் படத்தைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.

ஒரு நாள் இரவில் திரைப்படத்தில், சத்தியராஜ், யூகிசேது, அனுமோல், வருண் (ஐசரி வேலனின் பேரன்), ஆர்.சுந்தரராஜன், கல்யாணி நடராஜன், தீட்சிதா என்று பலர் நடித்திருந்தார்கள். எடிட்டராக இருந்த அன்ரனி இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆகி இருக்கின்றார்.

படத்தின் கதைக்கேற்ப திறமையாகப் பாத்திரத் தேர்வுகள் நடந்திருக்கிறது. அதுவே இந்தப் படத்தின் தனிச் சிறப்பு. சத்தியராஜின் நடிப்பு படத்தில் அருமை. ஒரு தந்தையாக அவர் காட்டும் அதிகாரமும், சலனமடைந்து அதன் பலனை அனுபவிப்பதில் அவர் காட்டும் நடிப்பும் பிரமாதம். ஓட்டோவில் பயணிக்கும் பொழுது சக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் வரும் மகளைக் கண்டு சத்தியராஜ் திகைப்படைவதும், தந்தையைக் கண்டு மிரண்டு எதுவுமே பேசாமல் தந்தை பயணிக்கும் ஓட்டோவில் சென்று தீட்சிதா அமர்வதுமான ஆரம்பக் காட்சியே ஒரு யதார்த்தமான பட நகர்வை உறுதி செய்கின்றது.

„நான் கட்டினதையும் நம்ப மாட்டன். பெத்ததையும் நம்ப மாட்டன். கண்ணாலை பாத்ததைத்தான் நம்புவேன்' என்று மகளுக்கு அவசரமாக மாப்பிள்ளை பார்ப்பதற்கு, சத்தியராஜ் காரணம் சொல்லும் பொழுது, „ஏன் நாங்க நம்பலை. ஏழு வருசமா சிங்கப்பூரிலை இருந்தீங்களே, நாங்க உங்களை சந்தேகப்பட்டோமா?' என்று முரண்டு பிடிக்கும் கல்யாணி நடராஜனின் கன்னத்தில் அறைவதும் அதைப் பார்த்து தீட்சிதா திகைப்படைவதும் அடுத்த காட்சியில் மாப்பிள்ளை வீட்டாருக்கு முன்னால் எல்லோரும் வந்து நிற்பதும் என்று காட்சிகள் வேகமாகவும் அதே நேரம் அழகாகவும் நகர்கின்றன. சாதாரணமாக ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வைப் பார்ப்பது போன்றே காட்சிகள் திரையில் வருகின்றன.

நண்பர்கள் பேச்சைக் கேட்டு சத்தியராஜ் சபலம் அடைந்து, அனுமோலை தனது பக்கத்தில் அமரவைத்து ஓட்டோவில் பயணிப்பதும், ஹோட்டல்களில் அறை தேடுவதும், கிடைத்த ஹோட்டல் அறையை வேண்டாம் என்று பதட்டத்துடன் விட்டு ஓடுவதும் என தனது நடிப்பை மிகையில்லாமல் தந்திருக்கிறார். ஒரு விலை மாதுவாக நடித்திருந்தாலும் உடையிலோ நடையிலோ விரசம் இல்லாமல் மூடிய சேலையுடன் குடும்பப் பெண்போல் வந்து கண்களால் கதை பேசுகிறார் அனுமோல்.

„பாத்தா ஆறடி புலி மாதிரி இருக்கீங்க. சாதாரண எலிக்குப் பயப்பிடுறீங்க', „சிங்கம் மாதிரி சீறுற ஆள் எலி பிடிக்கச் சொல்லுறார்' என்று சத்தியராஜைப் பார்த்து அனுமோல் கிண்டல் அடிப்பதும் „ நீ எனக்கு குடுக்க வேண்டியது அன்பா? பணமா? கடனா? இல்லையில்லே. எல்லாம் கடைசியிலே பணம்தான்' என்று தனது தொழிலைச் சொல்லிக்காட்டும் பொழுதும், „உங்கிட்ட எனக்குப் பிடிச்ச ஒரேயொரு விசயம் இந்தப் பணம்தான்யா“ என்று சொல்லி கண் சிமிட்டி கதை பேசும் பொழுதெல்லாம் அனுமோல் மிளிர்கிறார். அதேபோல் அவரது குட்டு வெளிப்பட்டவுடன் கண்களாலே பாவம் காட்டி சமாளித்துக் கொள்வதும் அழகு.

யூகிசேது இந்தப் படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார். காட்சிகளுக்கு ஏற்ப வசனங்களும் அளவாக சிறிதாக அழகாக பொருந்தி இருக்கின்றன. யூகிசேது வசனம் எழுதியதோடு நின்று விடாமல் இந்தப் படத்தில் நடித்தும் இருக்கிறார். திரைப்படம் எடுத்து நொந்து போன இயக்குனர் பாத்திரம் அவருக்கு. அதிகம் பேசாத, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு தளர் நடை போட்டு வரும் ஆரம்பக் காட்சிகளில் அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் போகப் போக அவரது அந்த நடிப்பும் பேச்சும் அலுத்து விடுகிறது. அதற்கு எல்லாம் சேர்த்து வைத்து, „அந்த ஆரஞ்சுக் கலரிலை பூப்போட்ட சட்டைதானே?' என்று படத்தின் இறுதிக் காட்சியில் அப்பாவியாகக் கேட்டு அமர்க்களப் படுத்துகிறார்.

படத்தில் இரண்டு பாட்டுக்கள் இருக்கின்றன. ஒன்று இயக்குனர் கௌதம் மேனனின் ஒரு படப் பிடிப்பில் வந்து போகிறது. வியாபார உத்தியோடு இந்தப் பாடலை காண்பிக்கிறார்கள். மற்றையது, படத்திலும் இயக்குனராக வேசம் ஏற்று நடிக்கும் ஆர்.சுந்தரராஜன் தனது திரைப் படத்துக்கு எடுத்ததாகச் சொல்லி ஒலிக்க விட அதை யூகிசேதுவோடு இணைத்துக் காண்பிக்கிறார்கள்.

ஓட்டோ சாரதியாக வரும் வருணுக்கு இது முதல் படமாக இருந்தாலும் ஒரு ஓட்டோ சாரதிக்கான நடிப்பை அவரால் தர முடிந்திருக்கிறது.

தவறுகள் மனிதனின் வழக்கம். ஆனாலும் தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்று நினைக்கும் ஒரு தந்தை தடுமாறும் ஒரு நிகழ்வை வைத்து கதையைத் தயார் செய்து அதனூடாக பெண் கல்வியின் அவசியத்தை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

படத்தை இயக்கிய அன்ரனியே எடிட்டராகவும் இந்தப் படத்தில் இருப்பதால் காட்சிகளைச் சுருக்கி படத்தை இரண்டு மணித்தியாலங்களுக்குக் குறைவாகவே அடக்கி இருக்கிறார். சற்றே விலகிப் போனால் விரசமாகி விடும் ஒரு கதையை எள்ளளவும் பிசகாமல் ஒரு நல்ல திரைப் படமாகத் தந்து அன்ரனி வெற்றி அடைந்திருக்கிறார்.

ஒரு திகில் படத்தைப் பார்க்கும் பொழுது பயத்தில் இரசிகன் கதிரை நுனிக்கு வந்து விடுவதுண்டு. ஒரு குடும்பப் படத்தைப் பார்க்கும் பொழுது அப்படி ஒரு நிகழ்வு வருமா? என்பதை இந்தப் படத்தைப் பார்த்தால் தெரிந்து விடும்.

கதையை மட்டும் நம்பி தமிழில் படம் எடுத்து வெற்றி பெற முடியாது என்ற கருத்தை கடந்த வருடம் வெளிவந்த காக்கா முட்டை, குற்றம் கடிதல் போன்ற படங்கள் பொய்ப்பித்திருந்தன. அந்த வரிசையில் ஒரு நாள் இரவில் படத்தையும் தயங்காமல் இணைத்துக் கொள்ளலாம். இனி வரும் காலங்களில் இதுபோன்ற நல்ல திரைப்படங்கள் வரும் என்று நம்புவோம்.

ஆழ்வாப்பிள்ளை
09.01.2016
Last Updated on Tuesday, 26 January 2016 13:32