Literatur -
கவிதைகள்
|
Written by சந்திரவதனா
|
Friday, 03 July 2009 16:27 |
அருவிவெட்டு காலமதில் அமைதியுடன் அமர்ந்திருந்தேன் குருவியினம் கூச்சலிட்டு குஞ்சுகளைக் கவர்ந்தழைக்க புரவியினம் ஆங்காங்கே புற்தரையில் அலைந்திருக்க கருவிகளின் ஒலி கேட்டு கலவரத்தால் அதிர்ந்து விட்டேன்.
தலைதூக்க முடியாது தள்ளாடி நிற்குமந்த நிலை கெட்ட நெற் கதிர்கள் அலைந்து நிற்கும் வேளையிலே தலை அறுத்துச் செல்வதற்கு வந்திருந்தார் கயவர் சிலர் மலையொத்த கதிர்க்குவியல் நிலை குலைந்து சரிந்தனவே.
வயல் பாட்டுப் பாடிக்கொண்டே கதிர்க் கட்டைத் தலையில் வைத்து கயல் விழியார் சென்றனரே வயலதனின் வரம்பினிலே மயிலதனின் எழிலுடனும் முயலதனின் கதியுடனும் செயலாற்றி நின்றனரச் சேரி இளம் பெண்கள் சிலர்.
ஆடவர்கள் வெட்டி வைக்க மங்கையர்கள் சுமந்து செல்ல கூட நின்ற தோழர்களும் கூடி ஒன்றாய்ப் பாடினரே ஓடி ஆடி உழைப்பவர்கள் உற்சாகமாய் இருக்க எண்ணி நாடிவந்த நானும் நின்று நயமாகப் பாடினேனே.
சந்திரவதனா 1975
ஒலிபரப்பு - இலங்கை வானொலி - 1981 Coments
|
Last Updated on Sunday, 16 March 2014 09:00 |