காணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை) Print
Literatur - சிறுகதைகள்
Written by கவி அருணாசலம்   
Saturday, 20 October 2018 19:03
சின்னச் சின்ன தீவுகள் போல் திட்டுத் திட்டாக அவனது கைகளில் அங்கங்கே வீக்கங்கள் தெரிந்தன.

எனது பார்வையின் கேள்வியை கணேசன் புரிந்து கொண்டான்.

“கிட்னி பெயிலியர் மச்சசான். மூன்று நாளுக்கு ஒருக்கால் டயாலிசிஸ் செய்ய வேண்டி இருக்குது. அதனாலை வந்த வீர வடுக்கள்”

நீண்ட நாட்களுக்கும் பிறகு.... இல்லை நீண்ட வருடங்களுக்குப் பிறகு என்பதுதான் சரியாக இருக்கும் அவனை அப்படிப் பார்த்ததில் மனது சிரமப்பட்டது.

எனது சங்கடம் அவனுக்கு விளங்கி இருக்கும்.

“கிட்னி மாத்திறதுக்கு ஏற்கனவே கனக்க யேர்மன்காரங்கள் காதிருக்கிறாங்கள். எங்கள் தரவளிக்கு இஞ்சை கிடைக்க வாய்ப்பேயில்லை. ஊரிலை பாக்கலாமெண்டால் காசு தந்திட்டு பெட்டியைக் கட்டிக் கொண்டு போ கிட்னி சட்னி எல்லாம் கிடைக்காது எண்ட மாதிரித்தான் பேச்சு இருந்தது”

கதைத்துக் கொண்டு இருக்கும் போதே அவசரப்பட்டான். “நேரம் போகுது மச்சான். டயாலிசிஸ்க்கு நாலு மணித்தியாலங்கள் தேவை. அதை முடிச்சிட்டுத்தான் வேலைக்குப் போக வேணும். முடிஞ்சால் பிறகு சந்திப்பம்”

பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவனுக்கு குழந்தை பிறந்திருந்த போது பரிசுகள் வாங்கிக் கொண்டு எனது குடும்பத்தோடு பார்க்கப் போயிருந்தேன். நாங்கள் வருவதை அவனுக்கு அறிவித்திருந்தாலும் ஏனோதானோ என்றுதான் வரவேற்றான். பொதுவாக கணேசன் தன்னுடைய வீட்டுக்கு யாரையும் அழைப்பதில்லை. “வாற போற ஆக்களுக்கு தேவையில்லாமல் சமைச்சுப் போட்டு காசை ஏன் கரியாக்க வேணும்” என்ற பரந்த உள்ளம் அவனுக்கு இருந்தது.

மதியம் சாப்பாடு தந்தான்.. சாப்பிட்டுவிட்டு கை கழுவும் போதுதான் பார்த்தேன் குழாயில் இருந்து தண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துளியாக சிந்தும் நீரெல்லாம் ஒரு பிளாஸ்ரிக் பாத்திரத்தில் ஒன்றாகி ஐக்கியமாகிக் கொண்டிருந்தன.

“கணேசா பாத்ரூமுக்குள்ளை தண்ணி சிந்துது. கவனிக்கேல்லையோ?”

“அது நானாத்தான் சிந்த விட்டனான். இப்பிடி துளித் துளியா சிந்தினால் மீற்றர் ஓடாது. இதை வைச்சுத்தான் எங்கடை தண்ணித் தேவைகளை முடிக்கிறனாங்கள்”

சூரிய வெளிச்சமே வராத நிலத்தடி வீடு. குறைந்த வாடகை . துளித் துளியாக தண்ணீர் சேகரிப்பு. இப்படி இன்னும் எத்தனை வழிகள் இருந்தனவோ அத்தனை வழிகளிலும் கணேசன் காசை மிச்சம் பிடித்தான்

“என்ன பாக்கிறாய்? ஊரிலை தென்னந்தோப்போடை காணி வாங்கி இங்கத்தைய ஸ்ரைலிலை வீடு ஒண்டு கட்டுறன். காசு வேணுமெல்லே”

“வீடு கட்டுறதுக்கு யாரை பொறுப்பா விட்டிருக்கிறாய்?

“மனுசியின்ரை தமையன் அங்கை இருக்கிறார். ஆள் பார்த்துக் கொள்ளும்”

இன்று கணேசனை பார்த்த பிறகு, நாள் முழுதும் அவன் நினைவுதான். கூடவே அந்தக் காணியும், தென்னந்தோப்பும், வீடும் இனி என்னவாகும் என்ற கேள்வியும் ஏனோ வந்தது.

- கவி அருணாசலம்
Quelle - Yarl.com
Last Updated on Saturday, 20 October 2018 19:30