"அந்த 6 நாட்கள்" இராணுவத்தின் பிடியில்..

அதிகாலையில் சேவல் கூவும் போதே அப்பா எங்களை எழுப்பி விட்டார்.. பிள்ளைகள் எழும்புங்க.. இன்றைக்கு விசேட அடையாள அட்டை எடுக்க மூதூர் போக வேணுமல்லா... கண்ணைக் கசக்கியபடி எழுந்து உட்கார்ந்தேன்.. இந்தப் பனிக்குளிரில் போர்த்திக் கொண்டு தூங்க விடாமல் ஏன் எழுப்புகிறார் என எரிச்சலாயும் இருந்தது."இன்றைக்கு ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது" என உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது..தங்கையையும் எழுப்பி புறப்படுகிறோம்..யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து 1 வருடத்தின் பின் போன வாரம் தான் எங்கள் சம்பூர் வீட்டுக்கு வந்திருந்தேன்.... ஆமிப் பயம் இந்தப் பக்கம் இப்போதைக்கு வந்து விடாதே என அப்பாவின் கடிதம் அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டிருந்தது... ஆனால் போன வாரம் வந்த அப்பாவின் கடிதத்தில் மகள் திருகோணமலை மாவட்டத்துக்காக விசேட அடையாள அட்டை கொடுக்கப் போகிறார்களாம்.. அதை எடுக்காவிட்டால் நீ ஒருக்காலும் இங்கு வர முடியாமல் போய் விடும்,அதனால் ஒருதரம் வந்து போ,நத்தாருக்கும் நின்று விட்டுப் போகலாம் என எழுதியிருந்தார்.. அம்மாவின் அறிவுறுத்தல் படி சேலையை அணிந்து கொள்கிறேன்.. பெரிய பெண்ணாய்த் தோற்றம் அளிக்கவாம் அந்த ஏற்பாடு...

சைக்கிள்களில் பயணத்தைத் தொடர்ந்தாலும் கட்டைபறிச்சான் பாலத்துக்குப் பக்கத்தில் இருந்த புண்ணியமூர்த்தியரின் சைக்கிள் கடையில்,அவற்றைப் பாரப்படுத்தி விட்டு நடந்து மூதூர் செல்கிறோம்..சைக்கிள் ஓடுபவர்கள்,முழங்கையில் காய்த்துக் கறுத்திருப்பவர்கள் எல்லாம் இயக்கம் என்பது ஆமியின் எண்ணம்..அந்த நாட்களில் அடிக்கடி கண்ணி வெடிகள்..பொம்மர் அடிகள்..சுற்றிவளைப்புக்கள்..மறைந்திருந்து தாக்குதல்கள்...கைதுகள்..கொலைகள்..காட்டிக் கொடுப்புக்கள் என உயிருக்கு எந்த உத்தரவாதமில்லாத நாட்கள் அவை...கைது செய்யப்படுபவர்கள் காணாமல் போவதும் அதுவே பெண்களானால் மானபங்கப் படுத்தப்படுவதும் சித்திரவதைப் படுத்தப் படுவதும் மிகச் சர்வசாதாரணமாய் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம்..

கட்டைபறிச்சான் பாலத்தைக் கடந்து மூதூர் புளியடிச்சந்தியை நோக்கி நடக்கும் போதே எங்களைக் காட்டிக் கொடுக்கப் போகும் யூதாஸ்களும் பின் தொடர்கிறார்கள்..வழியிம் மக்கீன் மாஸ்டர் அப்பாவைக் கண்டதும் சைக்கிளில் இருந்து இறங்கிக் குசலம் விசாரிக்கிறார் பல தெரிந்த முகங்கள் சிரித்த படி கடக்கின்றன..அப்பாவின் காலத்தில் மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப் பட்டதாலும் ஆங்கிலக்கல்வி,மட்டுமல்லாமல் அந்த சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் அப்பாவின் பங்கு கணிசமாய் இருந்ததாலும் அவருக்கு மூதூர் முஸ்லிம்கள் மத்தியில் தனி மரியாதை இருந்தது.

காலை 8 மணி

மூதூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தான் அடையாள அட்டை வினியோகம் நடைபெறுகிறது..அப்பா நேரே அதிபரின் அறைக்குச் செல்கிறார்,அவரின் மாணவர்தான் அப்போதைய அதிபர்..எங்களை யாரோ பின் தொடர்கிறார்கள் என்கிறார் அப்பா..நீங்க ஒண்டுக்கும் பயப்பட வேணாம் சேர்..என்னை மீறி எதும் நடக்காது என்கிறார் அதிபர்..புகைப்படம் எடுத்தல்..பத்திரம் நிரப்புதல் தலையாட்டி முன் நிற்றல் என்ற சடங்குகள் ஒருவழியாய் முடிய..ஆசுவாசத்தோடு வெளியே வருகிறோம்..

காலை 11 மணி

வளவு முழுவதும் பொலிஸ்..ஆமி தலைகள்..ஜீப் வண்டிகள்..ஏன் இந்த ஆர்ப்பாட்டம் யாரைப் பிடிக்க இந்த ஏற்பாடு..மனம் கேள்விகளை அடுக்குகிறது..நன்றாய் தெரிந்த ஆமி கோப்பிரல் ஒருவன் எங்கள் முன் வருகிறான் காலை வணக்கம் தெரிவிக்கிறார் அப்பா.."உங்களுக்கு இது நல்ல காலையில்லை..உங்கள் பிள்ளைகளை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம்" என்கிறான் இறுகிய முகத்தோடு..அதிர்ச்சியில் என் இதயம் ஒருமுறை நின்று..பின் வேகமாகத் துடிக்கத் தொடங்குகிறது..முகம் வெளிறுகிறது..கைகள் நடுங்குகின்றன..அப்பா அவன் முகத்தை பரிதாபமாய்ப் பார்த்த படி சும்மா தானே என்கிறார்..இல்லையென்று தலையை ஆட்டியபடி எங்களை ஜீப்பில் ஏறும் படி சைகை செய்கிறான்..நான் தங்கையைத் திரும்பிப் பார்க்கிறேன் 14 வயதேயான அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை ஆனால் அவள் வாய் மட்டும்"நெஞ்சமே வீணாய் சோர்ந்து போகாதே..தஞ்சம் யேசிருக்கையில் தளர்ந்து விடாதே.."என முணுமுணுக்கின்றது..துவக்கின் நுனியை என் முதுகில் வைத்து அழுத்திய படி "நகிண்ட"(ஏறு) என உறுமுகிறான் ஒரு ஆமிக்காரன்..நிலத்தோடு ஆணியடித்ததைப் போல் கனத்துக் கிடந்த பாதங்களைக் கஷ்டப்பட்டுப் பெயர்த்து ஜீப்பில் வைக்கிறேன்..என் பின்னால் தங்கையும் ஏறுகிறாள்..அப்பாவின் முகத்தில் கையாலாகாத் தனம்..கண்ணீர்..பயம்..என்று கலவையான உணர்ச்சிகள் தெரிகின்றன..நானும் என் பிள்ளைகளோடு வருவேன்..என் பிள்ளைகளைத் தனியே விட மாட்டேன் என்று அழுத படி ஜீப்பில் ஏறிய அம்மாவை நெட்டித் தள்ளி கீழேதள்ளும் முயற்சியைக் கை விட்டு விட்டு எங்கள் மூவரையும் ஏற்றியபடி கண்ணீருடன் நிற்கும் அப்பாவையும் என் குட்டித்தம்ம்பியையும் ..புதினம் பார்த்தபடி நின்ற அதிபரையும்..பின் தள்ளி விட்டு ஒரு உறுமலோடு புறப்படுகிறது ஜீப்.."கானி கொட்டி..கானி கொட்டி.."(பெண் புலி) என்று கெக்கட்டமிட்டுச் சிரிக்கின்றனர்..ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப்போல என் காதினுள் இறங்குகிறது அவர்கள் சிரிப்புச் சத்தம்..நான் விளையாடித் திரிந்த வீதிகள்..என் மாமன் மச்சான்..விளையாட்டுத் தோழர்..பாடசாலைத் தோழனும்..பல்கலைக்கழக நண்பனுமான நர்சூக்..இப்படிப் பலரின் பரிதாபமான பார்வைகள் எங்களை நோட்டம் விடுகின்றன..ஆனால் யாரும் மறந்தும் கூட ஒரு புன்னகையைச் சிந்த விடவில்லை..எங்களைத் தெரிந்ததாய்க் காட்டிக் கொண்டால் அவர்களுக்குக் கஷ்டம்....

மதியம் 12 மணி.

மூதூர் ஏ.ஜி.ஏ அலுவலகத்தில் அமைந்திருந்த ராணுவ முகாமுக்குள் ஜீப் நுளைகிறது..இறங்கு என உறுமியபடி துவக்கால் நெட்டித் தள்ளி விடுகிறான் ஒருவன்..இளம் இராணுவ கமாண்டர் வருகிறான் என்னைப் பார்த்த மாத்திரத்தில் அவன் முகம் சுருங்கி பின் நிமிர்கிறது .."மகே அக்காகே துவ வாகே" (என் அக்காவின் மகள் போல) என்கிறான்..அதனால் தானோ என்னவோ கதிரைகளில் அமரும் படி சைகை செய்கிறான்..என் முதுகில் துப்பாக்கியின் முனை அழுத்திய படி இருக்க விசாரணை ஆரம்பமாகிறது ஒவ்வோர் கேள்விக்கும் இன்னொருவன் துவக்கில் பொருத்தப் பட்டிருந்த கத்தியால் என் சேலையின் கீழ் விளிம்பை ஓங்கிக் குத்துகிறான்..நடுங்குகிறேன்..வார்த்தைகள் கோர்வையாய் வராமல் அழுகை விம்மலாய் வெடிக்கிறது..எனக்கு ஒன்றும் தெரியாது...இல்லை பயிற்சி எதுவும் எடுக்கவில்லை..எனக்கு யாரையும் தெரியாது..என்று திக்கித் திணறிய படி சொல்கிறேன்..அம்மாவின் முகம் பயத்தில் கறுத்து உறைந்து போயிருக்கிறது..சுண்ணாம்பு பூசியதைப் போல் உதடுகள் வெண்மை படர்ந்திருக்கிறது..பயத்தில் இருக்கிறாளா..அல்லது நடப்பதைப் பற்றிய சரியான தெளிவில்லாமல் இருகிறாளா என்று கண்டு பிடிக்க முடியாத ஒரு பாவத்துடன் தங்கை...கொஞ்சம் பிசகினால் என் பாதங்களை ஊடுருவி விடும் என்பது போல் அவன் குத்துவதும் தொடர்கிறது..

மாலை 3 மணி.

பொய்ச்சாட்சி சொல்ல ஒரு சமையல்காரனைக் கொண்டு வருகிறார்கள்.."இவ தான் கட்டைக்காற்சட்டையுடன் கூலிங் கிளாஸ் போட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி ........காம்புக்கு வந்தவ .."என்று கூசாமல் பொய் சொல்கிறான்..எப்போ எந்த மாதம் என்று கேட்கிறேன் ஏப்பிரல் மாதம்..அவன்..சரி என் துணை வேந்தரிடம் கேளுங்கள் அவர் ஆதாரம் தருவார் அந்த நாட்களில் நான் யாழில் இருந்தேன் என துணிவாய்ச் சொல்கிறேன்..எந்தக் குற்றச் சாட்டையும் நிரூபிக்க முடியாததால் எங்களை மேலதிக விசாரணைக்கு போலீஸிடம் பாரம் கொடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள்..அம்மா அழுகிறா..அங்கிருக்கும் OIC மிக மிக மோசமானவன் என்பதாலோ..அல்லது தன் ஊர்ப் பெண்கள் 12 பேரைப் பிடித்து அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும்..அவர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை மருந்திட்ட கதையையும் வைத்தியர் அந்தோனி மாமா சொன்னதாலோ..கண்ணீர் நிற்காமல் கொட்டுகிறது..

மாலை 4.30

போலீஸில் பாரம் கொடுக்கிறார்கள் அந்த ஓஐசி யைக் காணவில்லை..எங்களை ஓர் அறைக்குள் அனுப்புகின்றனர்....இதற்குள் என் சித்தியம்மாவும் வந்து செர்ந்து கொள்கிறா.போலிஸினால் "பேரக்காய் ஆச்சி"அழைக்கப் படுவதால் (கொய்யாக்காய் ஆச்சி) அவவுக்கும் போலிஸில் உள்நுளைய அனுமதி கொடுத்திருந்தார்கள்..அந்த அறைதான் சித்திரவதை செய்யும் இடம் என உள் நுளைந்த மட்டிலேயே கண்டு கொண்டேன்..இரத்தக் கறைபடிந்த..காயாத பச்சை இரத்தம் வழிந்த சுவர்களும் தரையும்..நகம் பிடுங்கும் கருவிகள்...பல்வேறு தரத்திலும் அளவிலும் பொல்லுகள்..ஆணி..தகரம் சேர்த்த கம்புகள்..இரும்புச் சங்கிலியில் மேசைக்காலிலும்..ஜன்னல் கம்பியிலும் நாயைப் போல் பிணைக்கப் பட்டிருந்த ஆண்கள் நால்வர்..அவர்களை யாரென்று இனங்காண முடியாத படி ஊதிப் பருத்து..காயங்கள் வெடித்து அதனுள்ளிருந்து இரத்தமும் நீரும்..சீழும் கலந்து வடிந்த படி...கண்கள் பயத்தில் பிதுங்கி வெளியே தெறித்து விடுமோ எனப் பயந்தேன்..தங்கையின் முகத்தில் அப்போது தான் முதன் முறையாகப் பயப் பீதி குடியேறுவதைப் பார்த்தேன்..எனக்கு அடி வயிறு கலங்கியது பயத்தில் உறந்து போயிருந்த எங்களை அந்த நால்வரில் ஒருவருக்குத் தெரிந்திருந்தது போல..எங்களையே பரிதாபமாய் தன் மங்கிய கண்களால் உற்றுப் பார்த்து மெல்லிய குரலில் ஐயோ..இந்தப் பிள்ளைகளை என்ன பாடு படுத்தப் போறானோ அந்தப் படுபாவி...இப்படித்தான் ஒவ்வொரு நாளும் அவன் இதுக்குள்ள வைத்து எங்கட கண்ணுக்கு முன்னாலயே செய்யிற கொடும..பாக்க ஏலா....அவன் குரலில் தெரிந்த அந்த விளக்கம் கொடுக்க முடியாத பாவம் என்னை என்னவோ செய்தது..வரப் போகும் பயங்கரத்தை எதிர்நோக்கிய படி உறைந்து போயிருந்தோம்..அவன் பின் உயிர் பிழைத்தானா...அல்லது அங்கேயே அவனுக்கு முடிவு வந்ததா என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை...

மாலை 6.30

திடீரென்று ஒரு பரபரப்பு..ஓஐசி வாறார் என ஒருவன் கட்டியம் சொன்னான்....உயர்ந்து கறுத்த முரட்டுத்தனமான ஒரு உருவம் உள் நுளைந்தது..வந்த வேகத்திலேயே ஒரு பொல்லை எடுத்துச் சுழற்றி மேசையில் அடித்த படி ஒரு உறுமலோடு மேசையில் ஏறி உட்கார்ந்தான்....நகம் பிடுங்கும் கருவியைக் கையில் வைத்து உருட்டிய படி விசாரணையைத் தொடங்கினான்....அதே கேள்விகள்..அதே பதில்கள் அழுகையுடனும் விம்மலுடனும்.... தொலைபேசி ஒலிக்கிறது.".மாத்தயா.".என அழைத்து "உங்களுடன் மேலதிகாரி பேச வேண்டும் என்கிறார்" என்கிறான் ஒருவன்.."நான் விசாரணையில் இருக்கிறேன் பின்பு பேசுகிறேன் என்று சொல்லு"என்கிறான்..இல்லை உடனே பேசட்டாம் மிக அவசரமான செய்தியாம் என்கிறான்..எரிச்சலுடன் காலால் கதிரையொன்றை உதைத்து..பொல்லை நிலத்தில் வீசியெறிந்து விட்டு தொலைபேசியில் பேசத் தொடங்குகிறான்..அவனது குரலில் இருந்து அவனுக்கு உடனடியான இடமாற்றம் என்று அறிகிறோம் சற்று ஆசுவசபட்டாலும்..நாளைதான் வரலாம் லோன்ச் இல்லை என்கிறான் இவன்...இவனை உடனடியாக ஏற்றி வர விசேட லோன்ச் ஒன்று திருகோணமலையிலிருந்து வருவதாக சொல்லப்பட்டபோது இவனால் மறுக்க வழியில்லாமல் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய் விட்டதே என்ற சலிப்போடும் ஏமாற்ற்த்தோடும் வாசலில் வந்து நின்ற ஜீப்பில் ஏறுகிறான்..

டிசம்பர் 28

திருகோணமலை கொண்டு வரப்ப்ட்டு துறைமுகப் போலிஸில் 5 நாட்கள் சிறை வைக்கப் பட்டு அங்கு கூண்டிலிருந்த 9 கம்பிகளையும் எண்ணி எண்ணிக் களைத்துப் போன நிலையில்...டொக்யாட் நேவிக் காம்ப்பில் நடக்க இருக்கும் விசாரணைக்காக காத்திருந்தோம்..அங்கும் நடக்க இருக்கும் சித்திரவதைகள் பற்றியும் அதை எங்களால் தாக்குப் பிடிக்க முடியுமா என்றெல்லாம் நல்ல போலீஸ்காரர்களான நிலவீரவும் சொய்ஸாவும் பேசிக் கொள்வது எங்கள் காதிலும் விழும்..அந்த நாளும் வந்தது..சித்திரவதை முகாம் போகிறோம் என நினைத்துப் போனவர்களுக்கு முப்படைத் தளபதியின் முன் நிற்கும் போது எப்படியிருந்திருக்கும்..உங்களை யாரோ தப்பாய்க் காட்ட்டிக் கொடுத்திருக்கிறார்கள் இன்னொரு தடவை பிடிபட்டால் ...என்ற எச்சரிக்கையோடு விடுதலை செய்யப் பட்ட்டோம் ஆனாலும் இன்று வரை..அந்தப் பயமும் நடுக்கமும் அது தந்த வலியும், முற்றாய் நீங்கியதாய்த் தெரியவில்லை....

சர்வதேச துன்புறுத்தப் பட்டோர் நாளுக்காக என் நினைவுகளிலிருந்து
- பிரமிளா சுகுமார்

Hauptkategorie: blogs பத்தி/Column/Kolumn Zugriffe: 8025
Drucken

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை