கடவுளுக்கே அடுக்குமா? |
![]() |
Literatur - பத்திகள் | |||
Written by ஆழ்வாப்பிள்ளை | |||
Saturday, 25 October 2014 21:43 | |||
![]() மீட்டாத வீணை என்ற நாவலில் எப்பொழுதோ நான் வாசித்தது. அது இன்னும் எனக்குள் இருக்கிறது. அதனால்தான் பக்த கோடிகளிடம் இருந்து காத தூரம் தள்ளி வந்து பயம் இல்லாமல் இதை என்னால் எழுத முடிகிறது. சமீபத்தில் ஒரு அம்மன் ஆலயத்தில் நடந்த மாம்பழத் திருவிழா சக கற்பூரச் சட்டித் திருவிழா நிகழ்வை இணையத்தில் பார்க்கக் கிடைத்தது அடியேன் புண்ணியம்(?). புலம் பெயர்ந்து வந்த பொழுது எங்களுடன் எடுத்து வர வேண்டியது எத்தனையோ இருந்தும் நாங்கள் முதன்மையாகக் கருதி கொண்டு வந்தது என்னவோ சீட்டையும், வட்டியையும் தான். ஆனால் கடவுள்களையும் எங்கள் பெட்டிக்குள் நாங்கள் அடைத்துக் கொண்டு வந்ததை ரகசியமாகவே வைத்திருந்தோம். எங்கள் கிராமங்களில், நகரங்களில் இருந்து நாங்கள் எடுத்து வந்த கடவுள்களின் நகல்களை வீட்டுக்கள் மட்டும் வைத்து ஆராதனை செய்து இன்று பரவலாக புலம் பெயர் நாடுகளில் உலாவிட்டு திருவிழாக்களும் செய்யும் நிலைவரை உயர்ந்து விட்டோம். எல்லாம் கடவுள்களின் அனுக்கிரகங்கள். ஊரில் பரவலான இடத்தில் சின்னதாக இருந்த கோவில்களை எல்லாம், புலம் பெயர் மண்ணில் சின்னதான இடத்தில் பிரமாண்டமாக்குகிறோம். சரி நான் பார்த்த திருவிழாவுக்கு வருகிறேன். „மாம்பழத் திருவிழா' என்று ஏன் அப்படி ஒரு பெயர் என்றால், மாம்பழ சீசன் ஆகவே மாம்பழத் திருவிழா என்று இலகுவாகச் சொல்லி விடலாம். இல்லை என்றால் பிள்ளையாருக்கும், முருகனுக்கும் ஆன பிரச்சினை என்று சொல்லலாம். அதுவும் இல்லை என்றால் புராணத்து லீலைகளில் ஏதாவது ஒன்றை அவிழ்த்து விடலாம். சரி. அப்படியாயின் அதென்ன கற்பூரச் சட்டித் திருவிழா? கடவுளிடம் ஏதாவது வேண்டுவதற்கான ஒருவித வழிபாடா? பெண்கள் அம்மனை வேண்டுவதாக இருந்தால் இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும் என்ற கட்டாயமா? தெரியவில்லை. விரதம் இருந்து, மண் சட்டி, கற்பூரம், பூசைக்கான அனுமதிச் சீட்டு, ஐயர் அர்ச்சனை என செலவு செய்து, சரிகைப் பட்டு உடுத்தி, நேரம் ஒதுக்கி காத்து நின்று, கற்பூரம் எரித்து சூடான மண் சட்டியை கையில் தாங்கி, புகையால் கண்ணெரிந்து அப்பப்பா ஏகப் பட்ட தொல்லைகளைத் தாண்டித்தான் கடவுளுக்கு விண்ணப்பத்தை தரமுடிகிறது. இவ்வளவு இட்டு முட்டுக்குள் எல்லோரும் சுடர் விட்டு எரியும் சட்டியை கையில் தாங்கி நெருக்கமாக நின்ற பொழுது யாருடைய பட்டுப் புடவையிலேயோ அல்லது கூந்தலிலோ நெருப்பு பற்றி விடுமோ என்ற பயமே எனக்குள் இருந்தது. நல்ல வேளை அம்மன் அருளால் அப்படி ஒரு அசம்பாவிதங்களும் நடக்க வில்லை. நடந்தால் வீடியோவில் காட்டவா போகிறார்கள் என்று கேட்டால் அது கடவுள் குற்றமாகி விடும் அதனால் கேட்கவில்லை. கடவுளும் சரி ஐயர்களும் சரி பட்டில், பவுணில் பிரகாசித்தார்கள். நேரம் தவறாமல் பூசை செய்ய வேண்டும் என்பதற்காக ஐயர் கையில் பெரிதாக கைக்கடிகாரம் கட்டி இருந்தது அவரின் விசுவாசத்தைச் சொன்னது. பூஜையின் போது 'வேத நாயகனே போற்றி' என்று ஒருவர் பாடத் தொடங்கினார். அம்மன் பூஜையானாலும் ஐயனுக்குத்தான் 'போற்றி' பாடினார். பாடலின் இடையில் இப்படி ஒரு வரி வந்தது, 'மறு சமயங்கள் மாள வேதகம் செய்வாய் போற்றி' நல்ல வேண்டுதல். பக்த கோடிகளின் வேண்டுதலுக்காக ஐயர் சமஸ்கிருதத்தில் அம்மனிடம் உரையாடி விட்டு பக்த லேடிகளுக்கு தமிழில் சொற்பொழிவு ஆற்றினார். "நீங்கள் அமர்ந்திருக்கின்ற இடத்திலேதான் அடுத்த வருசம் புதிய கோயில். அங்கே உங்கள் பக்கத்தில் இருக்கிறார் மூலஸ்தானம். அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டு, கும்பாபிஷேகம் நிகழ்ந்து அடுத்த யூலை 5ந் திகதி புதிய ஆலயத்திலே கொடியேற்றம் நிகழ வேண்டும் என்ற உயர்ந்த பிரார்த்தனை மனதிலே தியானித்துக் கொண்டு வினாயகப் பெருமானை நினைத்து ஐந்து முறை குட்டிக் கொள்ளுங்கள்" இவ்வளவு பேர் சேர்ந்து தியானித்து, பிரார்த்தனை செய்து ஐந்து முறைகள் குட்டிக் கொள்ளும் பொழுது, அதுவும் ஐயரின் விருப்பமும் சேர்ந்து இருக்கும் நேரத்தில் கண்டிப்பாக எல்லாம் நல்லபடியாக நடந்தே தீரும். அப்பாடா அடுத்த வருடம் இட்டு முட்டான இடத்தில் சுடர் விட்டு எரியும் சட்டியை கையில் தாங்கி, நெருக்கமாக நின்று நெருப்போடு விளையாடவேண்டிய தேவை தாய்க் குலத்திற்கு இல்லை. திருவிழா உபயகாரர் `லைக்கா` என்று போட்டிருந்தார்கள். அம்மனுக்கு யார் எது கொடுத்தாலும் எதுவித வேறுபாடும் கிடையாது. எல்லோருக்கும் தாயானவள்தானே அவள். எல்லோரும் அவள் பிள்ளைகள்தானே. மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வாள். இவ்வளவு உன்னதமான புனித சேவைகளை நாங்கள் செய்து புண்ணியம் தேடிக் கொண்டிருக்கும் பொழுது, "முன்னாள் போராளிகள் பிச்சை எடுக்கிறார்கள். பாலியல் தொழில் செய்துதான் வாழ்க்கை நடாத்துகிறார்கள்" என்று தேவை இல்லாத விடயங்களை எல்லாம் இணையத்தளங்களிலும், முகநூலிலும் எழுதி எரிச்சல் ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடவுளுக்கே அடுக்குமா? மாம்பழத் திருவிழா சக கற்பூரச் சட்டித் திருவிழா நிகழ்வை பார்த்து அம்மன் அருளை பெற கீழே உள்ள சுட்டியை அழுத்துங்கள். https://www.youtube.com/watch?v=vOqjORcWC3I&feature=youtu.be ஆழ்வாப்பிள்ளை 30.08.2014
|
|||
Last Updated on Saturday, 25 October 2014 22:01 |