எட்டுக்கோடு |
![]() |
Tamils - விளையாட்டுகள் | |
Written by சந்திரவதனா | |
Sunday, 19 July 2009 07:08 | |
இனி எப்படி விளையாடுவது எனப் பார்ப்போம். சிப்பியை இடது பக்க முதற் பெட்டியில் போட வேண்டும். போடும் போது சிப்பி கண்டிப்பாகப் பெட்டிக்குள் விழ வேண்டும். கோடுகளில் வீழ்ந்து விடக் கூடாது. ஒற்றைக்காலால் கெந்தி, அந்தச் சிப்பியை மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்துக் கொண்டு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பெட்டிகளுக்குள் கெந்தி ஐந்தாவது பெட்டிக்குள் இரண்டு கால்களையும் வைத்து நின்று விட்டு மீண்டும் ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் கெந்தி வெளியில் போக வேண்டும். இதே முறையில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போட்டு இதே ஒழுங்கில் சென்று மிதித்து, எடுத்துக் கொண்டு வெளியில் போக வேண்டும். ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போடும் போது இடது பக்க மூலையில் நின்றே போட வேண்டும். எட்டுப் பெட்டிகளும் விளையாடி முடிந்தால் அடுத்த கட்டம். இப்போது சிப்பியை முதற் போலவே போட்டு, ஒற்றைக்காலால் கெந்தி மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்து, தூக்கி வைத்திருக்கும் கால் பாதத்தில் விரல்களின் மேல் வைத்துக் கொண்டு கெந்த வேண்டும். கெந்தும் போது சிப்பி கீழே வீழ்ந்து விடக் கூடாது. எட்டாவது பெட்டிக்கு வந்ததும் சிப்பியை பெட்டிக்கு வெளியில் போட்டு விட்டு கெந்தி அதை மிதிக்க வேண்டும். அடுத்த கட்டம். சிப்பியை தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பெட்டிகளில் நடக்க வேண்டும். ஒற்றைக்கால் முதற்பெட்டியிலும் மற்றையகால் இரண்டாவது பெட்டியிலும்.. என்று வைத்து நடக்க வேண்டும். முகம் மெதுவாக மேலே தூக்கப் பட்டிருக்க வேண்டும். நடக்கும் போது "சரியோ? சரியோ?" என்று கேட்க வேண்டும். கால் விரல்கள் கோடுகளில் பட்டு விடக் கூடாது. பட்டுவிட்டால் "பிழை" என்பார்கள். 5வது பெட்டியில் இரண்டு கால்களையும் வைத்து நின்று கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் ஆறாவது ஏழாவது பெட்டிகளைக் கடந்து எட்டாவது பெட்டிக்கு வந்ததும் தலையில் உள்ள சிப்பியை கண்களை மூடிய படி நின்று வெளியில் வீழ்த்தி விட்டு கண்களைத் திறக்க வேண்டும். பின் கெந்தி மிதிக்க வேண்டும். அடுத்த கட்டம். சரியாகச் சிப்பியில் மிதித்து விட்டால், சிப்பியை கையில் எடுத்து எட்டுக்கோட்டுக்கு புறமுதுகு காட்டி நின்று கொண்டு, சிப்பியை தலைக்கு மேலால் எட்டுக்கோட்டுக்குள் எறிய வேண்டும். சிப்பி கோடுகளிலோ, வெளியிலோ, ஐந்தாவது பெட்டிக்குள்ளோ விழக் கூடாது. மூன்று சந்தர்ப்பங்கள் உங்களுக்குத் தரப்படும். சிப்பி எந்தப் பெட்டிக்குள் விழுகிறதோ அந்தப் பெட்டி உங்களுக்குச் சொந்தம். அது உங்கள் பழம். நீங்கள் அதற்குள் காலாறிப் போகலாம். மற்றவர்கள் அதைக் கடந்துதான் போகலாம். அவர்கள் அதற்குள் கால் வைக்க முடியாது. அடுத்த பழத்துக்கு மீண்டும் முதலிலிருந்து விளையாட வேண்டும். இரண்டு பேருக்கு அடுத்தடுத்த பெட்டிகளில் பழம் வந்து விட்டால் மற்றவர்கள் எப்படியாவது பாய்ந்து இரண்டு பெட்டிகளையும் கடக்க வேண்டும். யார் கூடிய பழங்கள் எடுக்கிறாரோ அவர் வென்றவர் ஆகிறார். இதே போல ஆறுகோடு என்ற விளையாட்டும் உண்டு. ஆறு கோடில் ஓட்டுத் துண்டைக் கையில் எடுக்காமல் கெந்தியபடி, ஒவ்வொரு பெட்டியாகக் காலால் தட்டி மிதித்துக் கொண்டு போக வேண்டும்.
|
|
Last Updated on Sunday, 19 July 2009 07:17 |