ஆணிவேர் - ஒரு பார்வை

- மூனா -

படத்தின் ஆரம்பமே அழகான கவிதை போல் விரிகிறது. மேலே பறக்கும் குண்டு வீச்சு விமானத்தை பாலகனின் விழி அலைதலிலே காட்டி இசையையும் பின்னணியில் சேர்த்திருப்பது அருமை. குண்டு விழுந்தவுடன் நிலையாக நிற்கும் பாலகனின் விழிகள் மூலம் பல விடயங்களை இயக்குனர் ஜோன் சொல்லி விடுகிறார். சிறிலங்கா இராணுவம் மதுமிதாவின் கமாராவை பூட்ஸ் கால்களால் துவம்சம் செய்வதை விறுவிறுப்பாகக் காட்டி இருக்கிறார்கள். அந்தக் காட்சியின் வேகமும் விறுவிறுப்பும் படத்தில் பின்னுக்கு ஏனோ காணாமல் போய் விடுகிறது. இராணுவம் தாக்கியதன் பின் எழுந்திருக்கும் மதுமிதாவைப் பார்த்து வெல்கம் ரூ யாழ்ப்பாணம் என்று நந்தா சொல்லும் வசனம் அங்குள்ள நிலை இதுதான் என்று சொல்லும் ஒருவரிக் கவிதை.

இடையில் பல இடைச் செருகல்களால் படத்துடன் ஒன்ற முடியாமல் செய்திகளைப் பார்ப்பது போன்ற பிரமை உண்டாவதை உணர முடிகிறது. பாடசாலை மாணவி கிருசாந்தியின் துயர சம்பவம் அறிந்து நொந்த விடயம் ஒன்று. இங்கு சிவசாந்தி என்ற பெயரில் மாணவியை உருவாக்கியிருக்கிறார்கள். சம்பவம் நடைபெறும் முன்னரே பாடசாலை மாணவி கற்பழித்துக் கொலை என்ற வாசகங்களைப் போட்டு விடுவதால் அடுத்த சம்பவம் என்ன என்பது தெரிந்து விடுகிறது. அன்று கிருசாந்தியின் துயரச் சம்பவத்தைக் கேட்ட போது வந்த அந்த சோகம், திரைப் படத்தில் காட்சியைப் பார்க்கும் போது வந்து மனதைப் பிழியவில்லை. இந்த ஒரு சோக சம்பவத்தை வைத்து தனியாகவே ஒரு படம் எடுத்திருக்க வேண்டும். ஜோன் பல விடயங்களை ஒரே திரைப் படத்தில் சொல்லி விட வேண்டும் என்று பேராசை பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதனால் பல இடங்களில் கதை துண்டு துண்டாக வந்து போவதை காண முடிகிறது.

இராணுவத் தாக்குதலினால் இறந்து போயிருக்கலாம் என்று கருதப் படுபவர்களின் புகைப்படங்களை மேசையில் பரப்பி வைத்திருக்கிறார்கள். ஒரு உதவி நிறுவனத்தில் இப்படியா தகவல்களை அள்ளிப் போட்டு வைத்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதுவும் நீங்கள் தேடி வந்தவர் அந்த புகைப் படக் குவியலுக்குள் இருக்கிறாரா என்று தேடிப் பாருங்கள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

இராணுவ வாகனத்தை மக்கள் மேல் ஏற்றி அழித்த காட்சியில் மதுமிதா மட்டும் அங்கே விழுந்து இங்கே புரண்டு என்று நிறைய நேரம் சிரமப் பட்டு நடிக்கிறார். எங்களையும் நிறையவே சிரமப் பட வைக்கிறார். அந்தக் காட்சியின் நீளமும் மிகையான நடிப்பும் நாம் ஒரு திரைப் படத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்ற நினைவுக்குக் கொண்டு வருகிறது. அதேபோல் கரை ஒதுங்கிய படகுகளில் இருக்கும் சிறுவர்களின் உடல்களைப் பார்த்து நந்தா பேசும் வசனங்கள் நாடகப் பாணி போல் இருக்கிறது. அந்தக் காட்சியின் நீண்ட வசனங்களைக் கேட்டு நாங்கள் மட்டும் அசையவில்லை. அந்தப் படகில் இருந்த இறந்த உடல்களும் கால்களை அசைக்கத் தொடங்குகின்றன.

புலிகளின் புலனாய்வுத் துறையை எதிரியே பாராட்டியிருக்கிறான். அவர்களது காவல் துறையை சர்வதேசமே வந்து பார்த்து அசந்து போயிருக்கிறது. தமிழர் புனர் வாழ்வுக் கழகம் உலகம் முழுதும் கிளை பரப்பி திறமையாகச் செயற் பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் தெரியாமல் தமிழ்ப் பகுதியில் ஒரு வைத்தியர் வாழ்கிறார் என்ற கதையின் போக்கை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்ல.

நந்தா இறுக்கமாக வைத்திருக்கும் முகபாவம் கதைக்கு நன்றாக துணை போகிறது. சிவசாந்தியின் தந்தையாக வருபவரும், நந்தாவின் பாட்டியும் சிறிது நேரமே வந்து போனாலும், ஊரில் விட்டு விட்டு வந்த உறவுகளை நினைவு படுத்தி கலங்க வைக்கிறார்கள். ஐந்து இலட்சம் மக்கள் இடம்பெயர்வுக்கு இவ்வளவு மக்களை ஒருங்கே காட்டியிருப்பது வியக்க வைக்கிறது. ஆனால் இராணுவம் முன்னேறுகிறது மக்களே வெளியேறுங்கள் என்று ஓட்டோவில் ஒலிபெருக்கியை வைத்து சொல்லிக் கொண்டு வரும் போது, மக்கள் தங்கள் பாட்டில் வீதியில் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வையும் கொஞ்சம் அழகாகக் காட்சிப் படுத்தி இருக்கலாம்.

சிதைந்து போயிருக்கும் பூமியிற் கூட இவ்வளவு அழகாக படம் பிடித்துக் காட்டியிருப்பது பிரமிக்க வைக்கிறது. நீரில் விழும் பறவைகளின் நிழல்கள், கடல் அலை தாலாட்டும் காட்சிகள், சிவந்த சூரியனுக்கு மத்தியில் இரண்டு பனைமரங்கள், வீதியில் பாயும் ஆடுகள்... என்று இப்படி பல காட்சிகளை குறிப்படலாம்.

இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து செதுக்கியிருந்திருந்தால் ஆணிவேர் இன்னும் ஆழமாகப் பதிந்திருக்கும்.

-மூனா -

Comments

Impressum Thileepan Thumilan

நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும் மாறா அன்பு நூல் மனங்களைத் தொடுக்குமே!

Copyright © 2002 Chandravathanaa Selvakumaran.
For more information, please contact Chandravathanaa