ஒரு பேப்பர் - ஒரு பார்வை

13.10.2004

ஒரு பேப்பரின் எட்டாவது வெளியீடு என் கரம் கிட்டியது. என்னதான் இணையத்தளம் வழியே கதைகள், கவிதைகள், கட்டுரைகள், செய்திகள்.., என்று எழுத்துக்கள் குவிந்திருந்தாலும், ஒரு பேப்பரையோ, ஒரு சஞ்சிகையையோ அல்லது ஒரு புத்தகத்தையோ கையில் எடுத்துக் கொண்டு போய் பிடித்தமான ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதில் உள்ள சந்தோசமே தனிதான்.

வழமையாக குழுந்தைகளின் பார்வையோடும், சிரிப்போடும் செல்லம் கொஞ்சும் பேப்பரின் முன் பக்கம் இம்முறை புளியங்குளம் பேரூந்தோடு வந்தது. மழலைகளைப் பார்க்க யாருக்கோ கசக்குதாம். கடிதம் போட்டிருக்கிறார்கள். ஆசிரியரின் குசும்பு எனக்கு முதலில் விளங்கவில்லை. பேப்பரைப் பார்த்ததும் ஊருக்குப் போற ஆசையில் ஏறி இருந்திட்டன். அதுவும் ஓசியாம்.

ஓசிதானே என்று ஏனோதானோவாக இல்லாமல் பல்சுவை அம்சங்களோடு உள்ளே அமர்க்களமாகத்தான் இருக்கிறது.

"அடியேய் விட்டன்ரா ஒரு அறை" என்றதும்தான் கொஞ்சம் பயந்திட்டன். ஏன்..? இந்த ஆம்பிளையளுக்கு அறையிறதை விட்டால் வேறையொன்றும் தெரியாதோ என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் நல்ல விடயத்தைத்தான் போட்டிருக்கு. வீட்டு வன்முறைகளால் பாதிக்கப் படும் பெண்களோ, ஆண்களோ எவராயினும் தம்மைக் காத்துக் கொள்ள, நாட வேண்டிய இடம் வலம் பற்றி விரிவாக சுந்தரி எழுதியுள்ளார்.

அத்தோடு நாட்டு நடப்பு, வீட்டு நடப்பு, உலகநடப்பு.. என்று பல விடயங்கள் ஆங்கிலத்திலும்;, தமிழிலும் என்று.. வித்தியாசமாகத்தான் இருக்கிறது. என்றாலும் எல்லாளன் தனது மூக்கை கூடுதலாக நீட்டுகிறார் போல் இருக்கிறது. நாகரீகமும்.. அதனோடான உடை மாற்றங்களும் எமது நாட்டில் எமது முன்னோர்கள் மத்தியில் நடை பெறவில்லையா? எங்களது பாட்டாக்கள் போல எங்களது அப்பாக்கள் உடுத்தவில்லைத்தானே. தலை இழுப்பதும் அப்படித்தானே. அப்படியிருக்க இப்போதைய இளசுகளுடன் மல்லுக் கட்ட வேண்டுமா..?

இந்த ரெலிபோன் கார்ட் விடயத்தை நானும் பலபேருக்குச் சொல்லி விட்டேன். ஆனாலும் அவர்கள் அதை வாங்கி விட்டு "நேற்றுக் கதைச்சுப் போட்டு வைக்கக்கை 200 நிமிசம் இருந்தது. இண்டைக்கு 120 எண்டு சொல்லுது." என்று முணுமுணுப்பார்களே தவிர கார்ட்டை வாங்குவதை மட்டும் நிறுத்த மாட்டார்கள். ஒரு வேளை ஓரு பேப்பரை வாசித்தாலாவது கார்ட்டுக்குள் இருக்கும் உண்மைகளை அறிந்து விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அன்பு கிடைக்குமா அன்பு? சிறுகதை கணினியின் நிலாச்சாரலில் இருந்ததுதான். வாசிக்க வேண்டும் என்று பலதடவைகள் நினைத்தேன். ஆனாலும் கணினிக்கு முன் இருக்கும் நேரங்களில் அதை வாசிக்க நேரம் போதாது போய் விட்டது. அதை கணினியின் முன் இருக்கும் போதான கதிர்வீச்சுக்களின் தொல்லைகள் எதுவும் இல்லாது, வசதியான ஒரு இடத்தில் ஒய்யாரமாக இருந்து வாசிக்க முடிந்த போது சந்தோசமாக இருந்தது. கதையை வாசித்த பின் இப்படியான குழுந்தைகளை எடுத்து எங்கள் அன்பைக் கொடுத்தால் என்ன என்ற ஒரு ஆசையும் எழுந்தது.

இன்னும் சினிமா.. அறுவை.. என்று நிறைய விடயங்கள். இருந்தாலும் 32 பக்கங்களையும் ஒரே மூச்சில் வாசித்து விட்டேன்.

"இதேன் முன் பக்கத்திலை விளம்பரம்?" என்று எனது மகன் குறை பிடித்தான்.
"அது ஓசியடா. விளம்பரம் இல்லையெண்டால் பேப்பரும் இல்லை." என்றேன்.

"அதுக்காண்டி முன் பக்கத்திலையோ..? போதாததுக்கு ஒரு பேப்பர் என்ற தலையங்கத்துக்குப் பக்கத்திலை பேப்பர் எறியிற வாளியையும் வைக்கோணுமே..? எங்கையாவது ஒரு மூலையிலை வைக்கலாம்தானே!" என்றான்.

இப்படித்தான் நாங்கள். தானமாகக் கிடைக்கிற மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கிற பழக்கம் எங்களை விட்டுப் போறது பெரிய கஷ்டமான விடயந்தான். ஓசி என்ற பெயரில் சமூகத்தைக் கெடுக்கும் விடயங்கள் ஏதாவது பரப்புரை செய்யப் படும் பட்சத்தில் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டியது அவசியந்தான். ஒரு பேப்பர் அப்படியல்ல. சுவையோடு சுவாரஸ்யமும் கலந்து நல்ல பேப்பராகத்தான் வருகிறது. பாராட்டத்தான் வேண்டும்.

பேரூந்தில் ஏறிய எங்களை ஏமாற்றாமல் கிளிநொச்சி மழலைகள் பூங்காவரை அழைத்துச் சென்றிருக்கிறது ஒரு பேப்பர்.

சந்திரவதனா
யேர்மனி
13.10.2004


ஒரு பேப்பர் தெரியுமா உங்களுக்கு...?

8.9.2004

ஒரு பேப்பர் தெரியுமா உங்களுக்கு...?

"வேறு நல்ல பெயரே உங்களுக்குக் கிடைக்கவில்லையா..?" என்று
ஒரு பேப்பர் வெளியீட்டார்களைப் பார்த்துப் பலர் முணுமுணுக்கிறார்கள்.

"அதென்ன தமிங்கிலிஸ் வேண்டிக் கிடக்கு. தமிழ் பத்திரிகை என்றால்
தமிழிலேயே இருக்கட்டுமே. பிறகேன் அதிலை இங்கிலீஸ்...!"
என்று
சினக்கிறார்கள் சிலர். (சினக்கிறது சும்மா ஒரு சாட்டுக்குத்தான். அவையளின்ரை பிள்ளையள் இந்த இங்கிலீஸ் பகுதியை மட்டுந்தான் வாசிக்கிறவையாம். இதாவது கிடைக்குதே என்று உள்ளாரச் சந்தோசம்தான்.)

இருந்தாலும் கதை, கட்டுரை, கவிதை, அரசியல், சிறுவர் பகுதி, Teens........ என்று
ஜனரஞ்சகத்துடன் 6 பத்திரிகைகள் இணையத்தில் வெளிவந்து விட்டன.
இலண்டன் வாசிகளுக்கு முற்றிலும் இலவசமாக பத்திரிகையாகவே ஒரு பேப்பர் கிடைக்கிறதாம்.

இதே போல பல வருடங்களாக வடலி என்ற அழகிய பெயரில் நல்ல பயனுள்ள பல கட்டுரைகளைத் தாங்கி ஒரு பத்திரிகை இலண்டனில் இலவசமாகவே வந்து கொண்டிருக்கிறது. அதை இணையத்தில் எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

சந்திரவதனா
யேர்மனி
8.9.2004


Impressum Thileepan Thumilan

நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும் மாறா அன்பு நூல் மனங்களைத் தொடுக்குமே!

Copyright © 2002 Chandravathanaa Selvakumaran.
For more information, please contact Chandravathanaa