பேரன் பேர்த்தி - குறும்படம்


- மூனா -

தாத்தாவுக்குத் தன் பேரப்பிள்ளைகளுக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆசை. பக்கத்து வீட்டுச் சிறுமி தன்னுடன் தமிழ் கதைக்கும் போது அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சி தனது பேரப் பிள்ளைகள் பிரெஞ் கதைக்கும் போது அவரிடம் காணாமல் போய்விடுகிறது. அவரது பேரன், பேத்திக்கு தமிழ் தெரியாதது இறுதியில் அவருக்கு வினையாக முடிந்து விடுகிறது. பராவின் பேரன் பேர்த்தி குறும்படத்தின் கதை இதுதான்.

சொல்ல வந்ததை பரா திருப்தியாகச் சொல்லி விட்டாரா என்ற ஒரு எண்ணம் இருக்கிறது.

பிள்ளைகள் விளையாடுகிறார்கள். தாத்தா வீட்டுக்கு வருகிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள். தாத்தா பார்க்கிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள் தாத்தா பாடுகிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள தாத்தா யோசிக்கிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள் தாத்தா குளிக்கிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள்......
இப்படிப் படம் போய்க் கொண்டிருக்கிறது.

புலம்பெயர் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லித் தர வேண்டும் என்று பரா தனது குறும்படத்துக்கு எடுத்துக் கொண்ட கருத்து வலுவானது. அதை இன்னும் வலுவாகத் தந்திருக்கலாம். சில காட்சிகளை நீட்டித் தராமல் அழுத்தமான விசயங்களைச் சொல்லியிருக்கலாம்.

தகப்பனும் மகனும் உரையாடுவது, ஏதோ முன்பின் தெரியாதவர்கள் உரையாடுவதுபோல் அன்னியப்பட்டிருக்கின்றது. மூத்த கலைஞர் ரகுநாதன் நடிப்பு அபாரம். சிறுவர்கள் நடிப்பில் மிளிர்கிறார்கள். ஆனால் அம்மாவும் அப்பாவும் நடிப்பில் அந்தோ பரிதாபம். இறுதிக்காட்சியில் சிறுவர்களின் கண்ணீரைப் பார்க்கும் போது நெஞ்சில் ஒரு நெருடல். அதேநேரம் அப்பாவும், அம்மாவும் வந்து அழும்போது அவர்களுக்காக நாம் அழவேண்டும் போல் இருந்தது. பிள்ளைகளுக்கு அழுதழுது தந்தை தமிழ் வசனங்களைச் சொல்லிக் கொடுப்பது, கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு.. பாசமலர் காலத்துப் பாணி.

பரா காட்சிகளை இன்னும் அழகாகச் செதுக்கியிருந்தால் அற்புதமான குறும்படம் கிடைத்திருக்கும். ஆனாலும் பராவின் இந்த முயற்சி வீண் போகவில்லை. பராவின் பேரன் பேத்தியைப் பார்த்த பின்னர் குறும்படங்கள் நிறைய வரும் நிறைவைத் தரும் என்ற நம்பிக்கை வருகிறது.

பேரன் பேர்த்தி குறும்படத்தைப் பார்க்க

-மூனா
26.5.2006
Post a Comment

Impressum Thileepan Thumilan

நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும் மாறா அன்பு நூல் மனங்களைத் தொடுக்குமே!

Copyright © 2002 Chandravathanaa Selvakumaran.
For more information, please contact Chandravathanaa