நினைவழியா நாட்கள் (மொறிஸ்)

Siva Thiyagarajah1988 இன் முற்பகுதியாக இருக்க வேண்டும். திகதி ஞாபகம் இல்லை.

இந்திய இராணுவம் `மொறிஸ் யார்? மொறிஸ் எங்கே இருக்கிறான்? மொறிஸ் பெரியவனா? சிறியவனா? ஆஜானபாகுவான தோற்றம் கொண்டவனா?´ என்று எதுவுமே தெரியாமல் மொறிஸைத் தேடி பேயாய் அலைந்த நேரம்.

அன்று மொறிஸ் ஓடி வந்து குளித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது எமது கிணற்றடியில் நின்று பார்க்கத் தெரிந்த கிழக்குப் பக்க வீதியால் டிறக் வண்டி ஒன்று கிறீச்சிட்ட வேகத்துடன் ஓடி வந்தது.

`ஓ...´ மொறிஸ் கதிகலங்கினான். குளித்த குறையில் வாளியைப் ´படார்` என்ற சத்தத்துடன் விட்டு விட்டு சரத்தை மாற்றிக் கொண்டு காற்றாய்ப் பறந்து சென்றான்.

சிறிது நேரத்தில் கேற்றைத் திறந்து கொண்டு திரும்ப வந்தான். மீதியைக் குளித்து முடித்துக் கொண்டு துவாலையால் அவசரம் அவசரமாகத் துடைத்துக் கொண்டு குசினிக்குள் வந்தான். குசினி மேடைக்குப் பக்கத்தில் இருக்கும் அவனின் வழக்கமான ஆசனமாகிய பச்சைப்பெட்டகத்தின் (மரப்பெட்டி) மேல் சப்பணங் கொட்டி அமர்ந்தான். „அம்மா, கெதியாத் தாங்கோ சாப்பாட்டை“ என்றான்.

அவன் வந்த நேரந்தொட்டு அவனது அவசரம், பசியால் துடிக்கும் வேகம், பதட்டமான நிலைமை யாவையும் நான் பார்த்தும் உணர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருந்தேன்.

„அப்பு, ஏனடா ஓடினனீ?“ என்று கேட்டு விட்டு „முதலில் சாப்பிடு“ என்று சொல்லி, அவன் விரும்பிய ருசியில் ஒரு பாத்திரத்தில் போட்ட சோறு, இறால்க்கறி, பொரியல்… என்று குழைத்து, உருண்டை உருண்டையாக அவன் கையில் வைத்தேன். அவன் தொட்டுக் கொள்ள இடைக்கிடை கட்டாப்பாரைக் கருவாட்டுப் பொரியலையும் சோற்று உருண்டைகளில் வைத்தேன்.

அவசரம் அவரமாகப் புசித்தான். நான் அவனைக் குளப்பக் கூடாதென்று கதையே கொடுக்காமல் சோற்று உருண்டைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவனுக்கு ஏதோ கடுமையான யோசனை. அவன் வாய் உண்கிறது. மனம் எங்கோ! மூளை ஏதோ வேலை செய்கிறது. நான் அவனது நிலையை நன்கு புரிந்து கொண்டேன்.

அவன் சாப்பிட்டு முடிந்ததும் „அம்மா, ரீயைப் போட்டு ஆச்சியிடம் அனுப்புங்கோ. பிரபாக்கா வீட்டில் கரனும் அருணும் நிற்கினம்“ என்று சொல்லி விட்டு குசினியில் இருந்து வெளிக்கிட்டுப் போனான்.

சாப்பிட்டு முடிந்ததும் அவன் நல்ல ஸ்றோங்கான பால் ரீ குடிப்பது வழமை. ஆதலால் சூடு ஆறாத அடுப்பில் முதலே கேத்திலை வைத்திருந்தேன். தண்ணீர் கொதித்துக் கொண்டே இருந்தது.

நான் அவசரம் அவசரமாக மூன்று கோப்பைகளில் தேநீரைப் போட்டு „ஆச்சி“ என்று அவன் கூப்பிடும் அவனது அன்புத் தங்கையான என் குட்டி மகள் பாமாவைக் கூப்பிட்டுக் கொடுத்து விட்டேன்.

அவள் தட்டுடன் வெளியே போக நானும் பாத்திரங்களை மூடி விட்டு, கழுவ வேண்டியவைகளைக் கழுவி விட்டு, திரும்பி, குசினிப் பின்கதவை அண்மித்துச் சாத்த வெளிக்கிட்டேன். பச்சையாய் இந்திய ஆமி ஒருவன் வாசலில் நிற்கிறான். கிணற்றடியைச் சுற்றி அங்கங்கு பச்சையாய் ஆமிகள். நான் கதிகலங்கிப் போனேன்.

அந்தக் கணத்தில் என் மனம் என்னமாய்ப் படபடத்தது என்று சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் எனது சின்ன மகள் பிரபாவின் வீடு. இடையில் ஒரு செம்பருத்தி வேலிதான். அந்த வேலியில் ஒரு பாதை அமைத்து அதனூடாகத்தான் நாங்கள் அங்கு போய் வந்து கொண்டிருந்தோம். அந்த வீட்டு முன் அறையில் தான் இப்போ மொறிஸ். கூடவே அவனது நண்பர்களான கரனும் அருணும். அவர்களுக்குத்தான் இப்போ பாமா தேநீர் கொண்டு போயிருக்கிறாள்.

இன்று என் பிள்ளையின் கதி என்ன? நினைவு மின்னலிட, மனசு பதறியது. ஆனாலும் நான் எனது பதற்றத்தை வெளியில் காட்டாமல் சிறிது சிரிப்புடன் கதவைச் சாத்தி விட்டு குசினி முன்கதவால் சின்ன விறாந்தைக்கு வந்தேன். அங்கு அந்தப் பெரிய முற்றம் முழுக்கப் பச்சைகள். மனசு அதிர்ந்தது.

எப்படிச் சமாளிக்கப் போகிறேன்? இன்று எனது மகனும் நண்பர்களும் பிடிபட்டே தீரப் போகிறார்களே! எப்படி? எப்படித் தப்பப் போகிறார்கள்? முற்றமெல்லாம் ஆமி. உள்ளூர நடுங்கியது.

வேலிப்பாதையால் தேநீர் கொண்டு போன பாமா „அம்மா..“ என்று கூப்பிட்டுக் கொண்டு திரும்பி ஓடி வருகிறாள். நான் வாயில் ஒரு விரலை வைத்து அவளுக்குச் சமிக்ஞை கொடுத்தேன். அவள் என்னருகில் வந்து „அம்மா, பிரபாக்கா வீட்டுக் கேற்றுக்கு வெளியிலெல்லாம் ஆமி“ என்றாள் மிக மெதுவாக. நான் புரிந்து கொண்டேன்.

பிரபாவின் வீட்டு வெளிக்கேற் எப்போதும் பூட்டிய படியே இருக்கும். எனது பிள்ளைகளுக்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் செய்த ஏற்பாடு அது. எங்கள் வீட்டுக் கேற்றால் தான் யாவரும் போய் வருவார்கள். அன்று அந்த நேரம் மகள் பிரபாவும் மருமகனும் அங்கு நிற்கவில்லை. வெளியே போயிருந்தார்கள்.

முன் விறாந்தையில் எனது தந்தை அதாவது எனது பிள்ளைகளின் பாட்டா. சாப்பிட்ட பின் வழக்கம் போல அவர் முன் விறாந்தைக்குச் சென்று துவாலையால் நிலத்தைத் தட்டி விட்டு, அதை விரித்து தனது வலது கையைத் தலைக்கு மிண்டு கொடுத்துக் கொண்டு சயனித்திருந்தார். முன் கேற்றால் வந்த ஆமிகளில் இருவர் அவரை மடக்கி „மொறிஸ் எங்கே? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் „யார் மொறிஸ்? அப்படி யாரையுந் தெரியாது எனக்கு“ என்றிருக்கிறார். „அப்படியா கிழவா“ என்று விட்டு நடைசாலையினூடாக உள்ளே எங்கள் பெரியவிறாந்தைக்கு வந்தார்கள். நானும் அந்த நேரம் சின்ன விறாந்தையிலிருந்து `ட´ னாப் பட அமைந்திருந்த எங்கள் பெரிய விறாந்தைக்குப் போய்ச் சேர்ந்தேன். ஆனால் எனக்கு அப்போது அவர்கள் எனது தந்தையை மிரட்டியதோ அவர் சொன்ன பதில்களோ... எந்த விபரமும் தெரியாது. பாமாவும் என்னோடு சேர்ந்து கொண்டாள். எனது நடுமகள் சந்திராவும் கிணற்றடியில் குளித்த குறையில் ஒரு ஆமியின் சொற்படி குளிப்பதை நிறுத்தி, பதட்டமாக முற்றத்தால் ஓடி வந்து குசினி விறாந்தையால் குசினிக்குப் பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்து சட்டையை மாட்டிக் கொண்டு வந்து என்னோடு சேர்ந்து கொண்டாள். அந்த நேரப் பதகளிப்பில் நான் அவள் பற்றியே சிந்திக்கவில்லை. என் புலன் எல்லாம் மொறிஸிடம்.

„எங்கே மொறிஸ்?“ என்று இராணுவத்தினர் என்னை அதட்டிக் கேட்டார்கள். „யார் மொறிஸ்? எனக்குத் தெரியாது“ என்றேன். „மொறிஸ் தெரியாதா? நீயும் இந்தப் பிள்ளைகளுமா இங்கை தனிய இருக்கிறீங்கள்? எங்கே உனது கணவன்?„ என்று ஒருவன் கேட்டான்.

அப்போதுதான் கவனித்தேன். எனது கணவரைக் காணவில்லை. அவர் இங்குதானே நின்றவர், காணவில்லையே! என்று ஒவ்வொரு அறையாகத் தேடினேன். கூடவே என் பின்னால் அந்தப் பேய்களில் இருவர் வந்து கொண்டேயிருந்தார்கள். நான் கலங்கினேன். எங்கே அவர்? எங்கே அவர்? என்று மனதுக்குள் கேட்டேன். துடித்தேன். ஆனால் அவர் சுவட்டையே காணவில்லை. நான்தான் சமாளிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.

„உனக்கு எத்தனை பிள்ளைகள்? எங்கே அவர்கள்?“ என்று மீண்டும் இராணுவத்தினர் என்னை அதட்டினார்கள்.

„எனக்கு ஆறு பிள்ளைகள். மூத்தவன் முல்லையில். விவாகம் ஆகி அங்கு மாஸ்டராகப் பணி புரிகிறான். அடுத்தவள் கணவனோடு வெளிநாட்டுக்குப் போய் விட்டாள். அடுத்தவன் சவுதியில். மற்றவள் விவாகமாகி, கணவனோடு போய் விட்டாள். மற்ற இருவருந்தான் இப்போ இங்கு இருக்கிறார்கள்“ என்று சொல்லி, கூட இருந்த பிள்ளைகளைக் காட்டினேன்.

அவர்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்டுக் கேட்டுக் கொண்டே வீட்டைச் சல்லடை போட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லா அறைகளுக்குள்ளும் புகுந்து மேசைகள், லாச்சிகள், அலுமாரிகள் என்று குடைந்து குடைந்து தேடினார்கள். சில புகைப்பட அல்பங்களை எடுத்து வந்து புரட்டிப் பார்த்து „யார்? யார்?“ என்று விசாரித்தார்கள். மூத்தமகன் ராஜன், மற்றைய சவூதி போன மகன் பார்த்தியின் படங்களைக் காட்டி „இவர்கள் யார்?“ என்று அதட்டி உருட்டினார்கள். முறையே சொன்னேன். மொறிஸின் படங்களையும் அவனுக்கடுத்தவன் சபா (மயூரன்) வின் படங்களையும் முதலிலேயே அல்பங்களிலிருந்து அகற்றியிருந்தோம். அப்பொழுது மயூரன் காட்டிற்குள் தலைவருடன். மொறிஸ் நாட்டிற்குள் இந்தியப் பிசாசுகளால் தேடப்பட்டுக் கொண்டிருந்தான். மொறிஸ் தேடப்படத் தொடங்கிய பொழுதே வீட்டிலிருந்த பல தடயங்களை என் கடைக்குட்டி மகள் பாமாவின் உதவியுடன் மறைத்து விட்டேன்.

மகள் பிரபாவின் வீட்டு முன்னறையில் எனது மொறிஸ். அவன் பிடிபடப் போகிறானே என்று உள்மனம் நடுங்கிக் கொண்டே இருந்தது. அந்த நிலையிலும் துணிவை வரவழைத்து, எனது பதட்டத்தையோ நடுக்கத்தையோ வெளியில் காட்டாது உறுதியாக அவர்களோடு கதைத்தேன். அவர்களின் உருட்டல்களுக்குச் சிறிதும் பயப்படாமல் (வெளியில் காட்டாமல்) செயற்பட்டேன். திடமாக எப்படி என்னால் அப்படி உறுதியாக எல்லாவற்றையும் சொல்ல முடிந்தது என்றோ எப்படி எனக்கு அந்தத் துணிவு வந்தது என்றோ எனக்குத் தெரியாது.

ஆனாலும் அவர்கள் என்னை நம்பவில்லை. அல்பத்தை எடுத்துக் கொண்டு எங்கள் எதிர் வீட்டு மாஸ்டர் குடும்பத்தினரிடம் போய் எனது மூத்தமகனதும் அடுத்த மகனதும் படங்களைக் காட்டிக் கேட்டார்கள்.. அவர்களும் எனது கூற்றுப் படியே கூறியுள்ளார்கள் போலும்.

ஒரு புறம் இந்தக் கூத்துகள் நடந்து கொண்டிருக்க மறுபுறம் பச்சைகள் வேலிப்பாதையால் மகள் வீடெல்லாம் போய் வந்து கொண்டிருந்தார்கள். எனது மகன் பிடிபடப் போகிறானே! கூட அவன் கூட்டாளிகள் இருவரும் பிடிபடப் போகிறார்களே! என்ற சிந்தனையே மனம் முழுக்க. „ஆண்டவனே காப்பாற்று! பிள்ளைகளைக் காப்பாற்று!“ என்று உள்மனம் புலம்பிய படியே இருந்தது. அதை வெளிக்காட்டாமல் அவர்கள் கதைகளுக்கும் கேள்விகளுக்கும் திடமாக விடை பகர்ந்த படியே நின்றேன்.

என் மனம் முழுக்கத் திகில். எந்த விநாடியிலும் எனது பிள்ளைகள் நிற்கும் அந்த அறை திறக்கப் படலாம். என் கண்முன்னே ஒரு பெருங்கொடுமை நடந்தேறலாம்.

என்னே அதிசயம்! ஒரு தடயமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையாம். திடீரென கேற்றைத் திறந்து கொண்டு ஒவ்வொருவராக வெளியில் போனார்கள். போகும் போது „நாளைக்கு க் காலைமை 9மணிக்கு உன்ரை புருசனை எங்கடை பருத்தித்துறைக் காம்புக்கு வந்து ஆஜராகும்படி சொல்லி அனுப்பு. தவறினால் நாங்கள் வந்து வீடெல்லாம் உடைச்சு, எரிச்சு, நிர்மூலமாக்கி உங்கள் எல்லாரையும் பிடிச்சுக் கொண்டு போவம்“ என்று சொல்லி விட்டுப் போனார்கள்.

அவர்கள் டிறக்குக்குள் ஏறிப் போன அந்தக் கணத்தில் என் மனம் தாங்கமுடியாத சந்தோசத்தில் குதித்தது. ஒரு பென்னாம் பெரிய கண்டத்தில் இருந்து தப்பி விட்டோம். எப்படி எப்படி என்று புரியாது மகிழ்ச்சி அலை புரண்டது.

எனது குட்டி மகள் பாமா ஓடினாள். பிரபாவின் வீட்டு முன்னறைக்குள் நின்ற அருணும் கரனும் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தார்களாம். தெப்பமாக வழிந்தோடிய வேர்வையுடன் அந்த அறையின் முன் வாசலில், படியில் இருந்த தேநீர் ரம்ளர்களை எடுத்து தேநீரை `மடக், மடக்´ என்று குடித்தார்களாம். „பாமா, இன்று தப்பி விட்டோம். அம்மாவிடம் சொல்லி விடு. நாங்கள் போகிறோம்“ என்று விட்டு அவர்கள் ஓட „அண்ணா எங்கே?„ என்றாளாம் பாமா. „அவன் இங்கு இல்லை“ என்று விட்டு கேற்றால் பாய்ந்து ஓடி விட்டார்களாம்.

பாமா ஓடி வந்து „அம்மா, அண்ணா அங்கை இல்லை. மற்ற இரு அண்ணாக்களும் கேற்றால் பாய்ந்து ஓடுகிறார்கள்“ என்றாள்.

நான் திகைப்போடு நிற்க, முன்விறாந்தையில் படுத்திருந்த எனது தந்தை சாவகாசமாக எழும்பி வந்து „அவன் இங்கை இல்லையே! சாப்பிட்ட கையோடை முன்னுக்கு வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு கேற்றால் வீ. எம் றோட் பக்கம் போயிட்டான்“ என்றார்.

எனது தந்தை அவன் இல்லை என்பது தெரிந்து „மொறிஸ் என்பது யார்? அப்படி ஒருவரும் இல்லை“ என்று திடமாக ஆமியோடு கதைத்திருக்கிறார். ஆனால் நான் அவன் இல்லை என்பது தெரியாமலே திடமாகக் கதைத்திருக்கிறேன். என்னே ஆண்டவன் செயல்!

பாமா தேநீர்த் தட்டோடு போக கேற்றுக்கு வெளியில் ஆமிகளின் கால்கள். கீழ் இடைவெளியால் தெரிந்திருக்கிறது. அறை சாத்தியிருந்திருக்கிறது. படியிலேயே தட்டை வைத்து விட்டு எனக்குச் சொல்ல ஓடி வந்திருக்கிறாள். இங்கு வந்தால் இங்கு முழுக்க ஆமி. ஒன்றும் சொல்ல முடியாத நிலைமை. எனக்கோ அவளுக்கோ மொறிஸ் அங்கு இல்லை என்பது தெரியாது. மொறிஸ் வீ. எம் றோட்டில் உள்ள நண்பன் வீட்டிற்கு ஏதோ அலுவலாய்ப் போயிருக்கிறான்.. அதற்குள் ஆமி வந்த செய்தி அறிந்து திரும்பி வராமலே நின்றிருக்கிறான். அறைக்குள் நின்ற அருண் கரன் இருவரும் வெளியில் ஆமி வந்ததை யன்னல் வழியால் கண்டு கதவு மூலையோடு சயனைட்குப்பிகளை வாயில் வைத்தபடி நின்று தவித்திருக்கிறார்கள். ´இன்று நாம் சரி` என்ற பீதியோடு கடவுளை வேண்டிய படி நின்றிருக்கிறார்களாம். ஒன்றுமே நடவாமல் நாம் தப்பி விட்டோம் என்ற திகில் மகிழ்ச்சியோடு ஓடியிருக்கிறார்கள்.

வெளியில் மொறிஸ் ´அங்கு தன் நண்பர்கள் இன்று என்ன கதியாகப் போகிறார்கள்! அவர்களும் பிடிபட்டு பின் விளைவுகள் எப்படியெல்லாம் நடக்கப் போகிறதோ!` என்ற தவிப்பில் துடியாய்த் துடித்த படி நின்றிருக்கிறான். விபரீதங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சியோடு இரவு வந்து விபரங்களை ஆளூக்காள் பரிமாறிக் கொண்டோம். „எப்படியம்மா மொறிஸ் என்று ஒரு பிள்ளையே இல்லையென்று திடமாக நீங்கள் வாதாடினீர்கள்? பாட்டாவிற்கு நான் வெளியில் போனது தெரியும். உங்களுக்குத் தெரியாமலே துணிவோடு செயற் பட்டீர்கள் அம்மா! பிரபாக்கா வீடு பூட்டியிருந்த படியால் முன் அறையையும் அவர்கள் பார்க்கவில்லை. ஆனால் படியில் இருந்த ரீ-ரம்ளர்களையும் தட்டையும் ஏன் ஆமி கவனிக்கவில்லை. என்ன அதிசயம்!!!“ என்று வியந்து குதூகலித்துச் சென்றான்.

ஆனால் இன்று அந்த மொறிஸ், மயூரன், அருண், கரன், என் மூத்த மகன் ராஜன்(தீட்சண்யன்) ஒருவருமே இல்லை.

இப்படி எத்தனை எத்தனை திகில் அநுபங்கள். ஒன்றா இரண்டா? இல்லை பலப்பல. எத்தனை பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டேன். நான் தனிய இல்லை. என்னைப் போல் எத்தனையோ தாய்மார். இன்னமும் அந்தப் பிள்ளைகள் எல்லாம் பட்ட பாட்டிற்கு விடிவு வந்து சேரவில்லையே! எப்போ அந்த விடிவு? தமிழ் ஈழம் என்னும் விடியலைக் காண்பேனா? எனது கனவுகள் பலிக்கும் என்று காத்திருக்கிறேன்.

சிவா தியாகராஜா
யேர்மனி

Drucken   E-Mail

Related Articles