வலன்ரீனா

இன்றாவது அவளைப் பற்றி நான் எழுதி விட வேண்டும். 13 வருடங்களாக மன இடுக்குகளில் ஒளிந்திருப்பவள்.

அவள் ஒரு சிங்களப் பெண். பெயர் வலன்ரீனா. மிகவும் மென்மையாகப் பேசத் தெரிந்தவள்.

இடுப்பில் குடத்துடன் தண்ணீர் மொண்டு கொண்டு செல்ல வந்திருந்தாள். பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அவளைப் பிடித்துப் போயிருந்தது. அவளுக்கும் என்னைப் பிடித்திருந்தது என்றுதான் நினைக்கிறேன். கிணற்றிலிருந்து தண்ணீரை மொண்டு குடத்தை நிரப்பும் போதும் சரி, குடத்தை இடுப்பில் வைத்துத் திரும்பும் போதும் சரி என்னுடன் கதைத்துக் கொண்டே இருந்தாள். எனது அந்தரமான மனநிலை பற்றி அவளுக்கு ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

„தம்பி விடுதலைப்போரில் மாவீரனாகி விட்டான்“ என்றாள். ஆச்சரியம் மேலிட „எங்கே நடந்தது?“ என்று கேட்டேன். தாங்கள் முதலில் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும் அங்கு நடந்த போரில்தான் தம்பியை இழந்ததாகவும் சொன்னாள். விடுதலைப்புலிகள்தான் தமக்கு இப்போது இங்கே பாதுகாப்புத் தந்திருக்கிறார்கள் என்றாள்.

நான் எனது தம்பிமாரைப் பற்றியும் சொன்னேன்.

உடனே அவள் „நானும் அம்மாவும் மட்டுந்தான் அங்கே எங்கள் வீட்டில் தனியாக வசிக்கிறோம். ஒருக்கால் வந்து விடு. உன்னைப் பார்த்தால் எனது அம்மா மிகவும் சந்தோசப் படுவாள்“ என்றாள்.

இப்போது ஒரு முக்கியமான விடயத்துக்காகக் காத்திருப்பதால் வர முடியாத சங்கடமான நிலையில் உள்ளேன் என்பதைச் சொன்னேன். என்ன விடயம் என்று சொல்லி விடலாமா என்று கூட யோசித்தேன். எனது தயக்கத்தைப் பார்த்து „கனதூரம் இல்லை. பக்கத்தி லைதான் வீடு“ அவள் மீண்டும் மீண்டுமாய் வலிந்தழைத்தாள். ஒரே ஒரு தடவை வரும்படி இரந்து கேட்டாள்.

நான் அவள் காட்டிய பக்கம் பார்த்தேன். எந்த வீடும் என் கண்களுக்குத் தெரியவில்லை. எல்லா வீடுகளுமே அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்தனவோ?

„உடனை போயிட்டு வந்திடலாம்“ என்றாள்.

அவளது அன்பான வேண்டுதலும், கனிவான பேச்சும், என்னைத் தன் அம்மாவிடம் அழைத்துப் போக வேண்டுமென்ற ஆர்வமும், ஆவலும் அதீதமானதாகவே இருந்ததால் என் மனது மிகவும் சஞ்சலப்பட்டது. ஒருக்கால் போயிட்டு வருவோமா என்ற எண்ணம் என்னை உந்திக் கொண்டே இருந்தது. ஆனாலும் போகவில்லை.

அன்று 30.05.2002 தலைவர் பிரபாகரனைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி வெண்புறாநிலையத்திலிருந்து புறப்பட்டு இடையில் மரங்களும், செடிகொடிகளும் நிறைந்து மறைந்திருந்த ஒரு குடிசையடியில் அடுத்து வரப்போகும் வாகனத்துக்காகக் காத்திருந்தோம். வாகனம் வருமா? எப்போது வரும்? அல்லது பிரபாகரனே அங்குதான் வரப்போகிறாரா? என்று எத்தனையோ கேள்விகள் தொக்கி நிற்க காத்திருந்த அந்த வேளையில்தான் வலன்ரீனா அங்கே குடத்துடன் வந்தாள். மிகவும் மெல்லிய, சிறிய, அழகிய, இளம் சிங்களப் பெண்.

இன்றும் கூட எனக்குள் ஒரு வேதனை. அவளது ஆசைக்கு இணங்கி ஒரு தரம், ஒரே ஒரு தரம் போய் அவளது அம்மாவைச் சந்தித்திருக்கலாமே என்று.

சந்திரவதனா
24.7.2015

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை