நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18

பத்தி/Column/Kolumn

கையில் இருந்த துப்பாக்கியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சுற்றி இருந்தவர்கள் அதுவும் கொல்கர் என்ன நிலையில் இருந்தார்கள் என்று தலை தூக்கிப் பார்க்க முடியவில்லை. அல்லது முயலவில்லை. எது என்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

„சொல்லுங்கோ. இது அவரின்ரை நாட்டுத் தயாரிப்புத்தான் என்று“ பிரபாகரன் சொல்லும் போதே கொல்கரை நோக்கி கையைக் காட்டினார்.

கொல்கருக்கு எதுவும் புரிய வாய்ப்பில்லை. இப்பொழுது கொல்கரைப் பார்த்தேன். அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

„இதுவும் Made in Germany தான்“ பிரபாகரனிடமிருந்து அடுத்து உதிர்ந்த வார்த்தைகளில் கொல்கர் தெளிவு பெற்றிருப்பான்.

துப்பாக்கியை கொல்கரின் கையில் கொடுத்தேன். வாங்கி ஆராய்ந்து விட்டு சிரித்துக் கொண்டே பிரபாகரனின் கையில் கொடுத்தான். மீண்டும் வெளியில் சென்ற பிரபாகரன் சில வினாடிகளில் திரும்பி வந்தார். தனது பாதுகாப்புக்காக அவர் உடலில் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை ஒரு சில நொடிகளில் வெளியே எடுத்து, அதை வெறுமையாக்கி எங்களிடம் தந்த வேகம் ஆச்சரியப்பட வைத்தது.

யேர்மனியத் தொழில்நுட்பத்திறனை வெகுவாகப் பாராட்டிச் சொன்னார். போரில் அழிந்து போன நகரங்களை விரைந்து கட்டி எழுப்பிய அவர்களின் உழைப்பைக் கண்டு வியந்திருக்கிறேன் என்றார். ஒரு விருந்தினர் வந்திருந்தால் அவர் பற்றியோ அல்லது அவர் சார் விடயங்களைப் பற்றியோ உரையாடுவது அந்த விருந்தினரை மகிழ்விக்கும் என்பதை பிரபாகரன் தெளிவாக அறிந்திருக்கிறார் என்பதை அவரது உரையாடலின் பொழுது தெரிந்து கொண்டேன்.

பேச்சுக்கள் பெண்ணியம், போராளிகள், மாவீரர்கள், புனர்வாழ்வு என விரிந்து கொண்டே போனது. பெரிய சந்திப்புக்கு சிறிய நேரமே எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அது இப்போது முடிவிலி ஆனது.

'சாப்பிடுவோமா?' என்று பிரபாகரன் இரவு உணவுக்கு அழைத்தார். விருந்தும் இருக்கிறதா என்றேன். 'உங்களுக்கு இல்லாமலா' என்றார்.

கொல்கர் உணவை ருசித்துச் சாப்பிடுவதை பிரபாகரன் ரசித்துப் பார்த்தார்.

கஸ்ரோ வீட்டில் சிற்றுண்டி, தமிழ்செல்வனின் அரசியல்துறை அலுவலகத்தில் இரவு உணவு, அடுத்து இங்கே என்று எல்லாமே ஆண்கள்தான் நிறைந்திருந்தார்கள். எனக்கு உணவு பரிமாறிய இளைஞனை எங்கேயோ நான் பார்த்த ஞாபகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த இளைஞனைப் பார்த்தேன். அப்பொழுது இருந்த சூழ்நிலையில் என்னால் அந்த இளைஞனை அடையாளம் காண முடியவில்லை.

நான் அந்த இளைஞனை அடிக்கடி பார்ப்பதை பிரபாகரனின் புலிக்கண் அவதானித்து விட்டது. அவரே சொன்னார், „இவரின்ரை தாய் தகப்பன் யேர்மனியிலைதான் இருக்கினம்' இப்பொழுது எனக்கு நினைவுக்கு வந்தது. கண்ணை மூடிக் கொண்டு ஒப்பிக்கத் தொடங்கினேன். அந்த இளைஞனின் பெயர், அவரின் தாய் தந்தையரின் பெயர்கள், அவர்களின் விலாசம் தொலைபேசி இலக்கம் மாதாந்தம் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துக்கு தரும் தொகை என மட மட என்று சொல்லி விட்டு கண்களைத் திறந்து பார்த்தேன்.

நான் மட்டும் தான் அசைந்திருந்தேன். மற்றவர்கள் அப்படியே என்னைப் பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றார்கள். எனக்கு குடிப்பதற்கு தண்ணீர் தர வந்த அந்த இளைஞன் தண்ணீர் குடுவையுடன் சிலையாக நின்றான்.

அவசரக்குடுக்கை என்பார்களே. அது நான்தானோ? இடம், பொருள், ஏவல் பார்த்துக் கதைக்க வேண்டுமென்று அறிந்திருக்கிறேன். இங்கே கொஞ்சம் நட்பாகப் பழகினார் என்பதற்காக அதிக உரிமை எடுத்து எனது புத்திசாலித்தனத்தைக் காட்ட முயற்சி செய்தது தவறாகப் போய் விட்டதோ?

அமைதியை பிரபாகரனே போக்கினார். „நீங்கள் எங்கடை புலனாய்வுத் துறையிலை இருக்க வேண்டிய ஆள்“ நிலைமை சுமூகமானதால் மனது சமாதானமானது.

அந்த இளைஞனின் தாய் தந்த கடிதத்தையும், அதனைக் கஸ்ரோவிடம் கொடுத்ததையும் சொன்னேன். பெற்றோரின் சாயல் அந்த இளைஞனிடம் இருந்ததால்தான் மற்றைய விபரங்களையும் சொன்னேன் என்றேன். பிரபாகரன் சிரித்துக் கொண்டு கதையை திசை திருப்பினார்.

„கொல்கருக்கு வன்னியிலை எல்லா இடமும் சுத்திக் காட்டினனீங்களோ?'

“முல்லைத்தீவு, கடற்கரை, வற்றாப்பளை, மாவீரர் துயிலும் இல்லங்கள்...“

“திருகோணமலை?“

“இல்லை. அதுக்குப் போறதுக்கான நேரம் கிடைக்கவில்லை“

“அப்ப இரணைமடுக் குளத்தையாவது கொண்டு போய்க் காட்டுங்கோ“

எங்களை அடுத்த நாள் அந்த இடத்திற்கு அழைத்துப் போவதாக ரெஜி சொன்னார்.

கொழும்பு - வன்னிக்கான எங்களது போக்குவரத்து வசதிகளைப் பற்றிக் கேட்டார். சொன்னேன்.

சு.ப.தமிழ்செல்வன் குறுக்கிட்டு „திரும்பிப் போறதுக்கு நான் ஒழுங்கு செய்கிறேன்' என்றார்.

'கொல்கருக்கு நாங்கள் வன்னியில் செய்யக் கூடியது ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ' என்று பிரபாகரன் கேட்டார்.

பிரபாகரன் கேட்டதை கொல்கருக்கு மொழி பெயர்த்தேன்.

„Ich möchte gerne Waran essen“ என்றான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் சொன்னதை மொழிபெயர்க்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

„அவர் சொன்னது விளங்கேல்லையோ?'

குழப்பமாக இருந்தது. ஆனாலும் சொன்னேன்.

„அவனுக்கு வாறான் சாப்பிட ஆசையாக இருக்குதாம்“

„வாறான்?“

நான் மொழிபெயர்க்க மறந்தது அப்போதுதான் புரிந்தது.

„அவனுக்கு உடும்பு சாப்பிட ஆசையாக இருக்குதாம்“

பிரபாகரன் சிரிக்க ஆரம்பித்தார்.

„வேறையேதாவது கேட்பார் என்று பார்த்தால் உடும்பு கேட்கிறார்“

இப்போது உடும்பை எங்கே பிடிக்கலாம் என்பதே அங்கே பேசு பொருளாகப் போனது.

யேர்மனியர் ஏதவாது ஒரு நாட்டுக்கு போகிறார்கள் என்றால் அந்த நாட்டைப் பற்றிய புத்தகங்களை வாங்கி வாசித்து முதலில் அறிந்து கொள்வார்கள்.

கொல்கர் வாசித்த புத்தகத்தில் வன்னியில் உடும்பு இருக்கிறது என்று போட்டிருந்திருக்குமோ என்னவோ?

„மழை நேரம் எண்டால் பிடிக்கலாம். இப்ப எங்கை போய் உடும்பைத் தேடுறது' அங்கிருந்தவர்கள் அங்கலாய்த்தார்கள்.

„வேட்டைக்குப் போற ஆக்கள் ஆரையும் கேட்டுப் பாக்கேலாதோ?“

பிரபாகரனின் கேள்விக்கு, ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை சொன்னார்கள். எல்லாமே எதிர்மறையாகவே இருந்தன.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு பிரபாகரன் சொன்னார் „எங்களுக்காக எவ்வளவு சிரமங்கள் எடுத்திருக்கிறார். அவர் விரும்பினதை நாங்கள் குடுக்கோணும். இந்தக் கணத்திலை இருந்து உடும்பு வேட்டை ஆரம்பமாகிறது. இதை அவரிட்டைச் சொல்லுங்கோ“

பிரபாகரன் சொன்னதை மொழிபெயர்த்து கொல்கரிடம் சொன்னேன். மகிழ்ச்சியை அவனது முகம் சொன்னது. பிரபாகரனைப் பார்த்து தமிழில் „நன்றி“ என்று சொன்னான். பிரபாகரன் சிரித்துக் கொண்டார்.

பேச்சுக்கள் கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்தன. கூடவே நேரமும் தன் பங்குக்குச் சென்று கொண்டிருந்தது.

திடீரென விளக்குகள் அணைந்து விட்டன. இருட்டு. அங்கும் இங்கும் ஆட்கள் அசையும் சத்தங்கள் முதலில் கேட்டன. பிறகு வந்த குரல் நிலைமையைச் சொன்னது. „ஜெனரேட்டர் நிண்டு போச்சு“

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27

Drucken

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை