நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1

„நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம்' என்ற இந்த கட்டுரையானது எனது புனர்வாழ்வுப் பணியில் நான் பயணித்த பொழுது பெற்ற ஞானம். எதையுமே இலகுவாகத்தான் எடுத்துக் கொண்டேன்.

ஒற்றுமையாக நாம் இணைந்து பயணித்தால் நாங்கள் நலம் பெறலாம் நாடு வளம் பெறலாம்
என்பது எனது இந்தப் பாதையினூடான அனுபவம். அந்தப் பாதையில் நீங்களும் இணைந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். 

கட்டுரைக்கு வருவதற்கு முன்,

தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனியக் கிளையின், வெண்புறா நிறுவனத்திற்கான யேர்மன் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து அதை நடைமுறைப் படுத்துவதற்கான வேலைத்திட்டத்தில் பலர் உழைத்திருக்கிறார்கள். அதில் முக்கிய பங்கு தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனியக் கிளை தொண்டர்களுக்கே போய்ச் சேர்கிறது.

இந்தத் திட்டத்திற்கான முக்கிய தேவையே பணம்தான். அதைப் பெற்றுத் தந்தவர்கள் கழகத்தின் தொண்டர்கள். நிறையவே அவர்கள் சிரமப் பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து நானும் செயற்பட்டதனால் அவர்கள் பட்ட சிரமங்கள் எனக்குத் தெரியும்.

முழு நேர வேலை அதன் பின்னர் பகுதி நேர வேலை என்று பணம் சம்பாதித்து வசதிகளைப் பெருக்கவும் ஆடம்பர வாழ்க்கை வாழவும் யேர்மனியில் ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனாலும் முழு நேர வேலைக்கே விடுமுறை போட்டு விட்டு கழகத்துக்காக உழைத்தவர்கள் புனாவாழ்வுக் கழகத் தொண்டர்கள். அதைவிட  வார இறுதி நாட்களிலும், தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறைகளில் ஊர் உலா என்று உலகை வலம் வராமல் புனர்வாழ்வுப் பணிக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் அவர்கள்.

யேர்மன் நகரங்களில் வருடந்தோரும் வெளிநாட்டவர்களுக்கான விழாக்களில் ஆயிரமாயிரம் மக்களுக்கும், கேவலார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழர் திருப்பூசையில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும், யேர்மனிய மாவீரர் வணக்க நிகழ்வில் பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்குமாக உணவு விடுதியில் நெருப்பில் வெந்து, வியர்வையில் குளித்து, உடலை துன்புறுத்தி சமைத்துப் போட்ட தொண்டர்களின் சிரமங்கள் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. சட்டத்திற்கும், சமூகத்திற்கும்  இடையூறு இல்லாத வண்ணம் புனர்வாழ்வுப் பணிக்கு நிதி சேகரிக்க தங்களை முழுமையாக ஈடுபடுத்தி புனர்வாழ்வுப் பணிக்கு தொண்டு செய்தவர்கள் அவர்கள்.

தொண்டர்களைப் பற்றி  மட்டுமல்ல, புனர்வாழ்வுக்கான தேவையை உணர்ந்து ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் பண உதவி செய்த உறவுகளைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.

எங்களது தேவை இப்படி இருந்தது. ஒவ்வொரு தமிழரும் குறைந்த பட்சம் பத்து யூரோக்களை புனர்வாழ்வுப் பணிக்குத் தந்து தங்களையும் தாயகத் துயர் துடைப்பில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அது.  அதற்காக தாயகக் கொள்கையில் மாற்று எண்ணங்களை வைத்திருந்தாலும் அவர்களைக் கூட நாங்கள் சந்தித்தோம். ஒரு அரசசார்பற்ற புனர்வாழ்வுக் கழகமாகவே செயற்பட்டோம்.

நாங்கள் ஒரு நகரத்துக்கு புனர்வாழ்வுக்கான நிதி சேகரிக்கச் சென்றால் ஒருநாளில் ஏறக்குறைய பதினைந்தில் இருந்து இருபது தமிழ்க் குடும்பங்களை அல்லது தனி நபர்களைச் சந்தித்து மாதாந்த நிதியை வங்கி மூலம் பங்களிக்கக் கேட்டுக் கொள்வோம். தங்கள் பங்களிப்புகளை மட்டுமல்ல எங்களுக்கு உணவு தந்து, தேனீர் தந்து அன்போடு உபசரித்து அனுப்பிய உள்ளங்களுக்கும், எந்தவித ஊதியத்தையும் எதிர்பார்க்காது தங்கள் கலைகளை புனர்வாழ்வுக் கழகம் நடத்திய நிகழ்ச்சிகளுக்குத் தந்த கலைஞர்களுக்கும் இந்தக் கட்டுரையின் மூலமாக நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரையைப் பற்றி நண்பர் சிவறஞ்சித்திடம் நான்  சொன்ன பொழுது, „எழுதுங்கள்' என உற்சாகம் தந்து கட்டுரைரையை முழுமை பெறச் செய்தார். „பொங்கு தமிழ்' இந்தக் கட்டுரையை வெளியிட  முன்வந்ததற்கு அதன் ஆசிரியர் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு எனது நன்றி.

புலம் பெயர் தமிழர் சமூகத்தில் தாயகத்துக்காக உழைத்த பல விடயங்கள் பதியப் படாமலேயே போய் விட்டது. இந்தக் கட்டுரையை நான் எழுத முனைந்ததற்கு அதுவும் ஒரு காரணமாகிறது.

எத்தனை சிக்கல்கள், எவ்வளவு சிரமங்கள். இவற்றை எல்லாம் புறந்தள்ளி தாயகத்தில் அல்லல் படும் மக்களின்  துயர் தீர்ப்பதே எங்கள் பணி என்று சேவை செய்த தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனியக் கிளைத் தொண்டர்களுக்கு, „நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம்' என்ற இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

கூட்டுறவாக நாம் இருந்தாலே நாட்டின் கவலைகள் அகலுமே

அன்பன்
மூனா


நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் - 1யேர்மனியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரச்சாரப் பொறுப்பாளராக நான் இருந்த கால கட்டம். நிறையவே சிரமப் பட்டிருக்கிறேன்.

பிரச்சாரப் பொறுப்பாளராக நான் இருந்தாலும், தாயகத்திலிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலமையகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பு இல்லை. அதற்கான அனுமதி எனக்குத் தரப்படவில்லை என்றும் குறிப்பிடலாம். அதுதான் சரியாக இருக்கும்.

யேர்மனியக் கிளைக்கு ஒரு தலைமைப் பொறுப்பாளர் இருந்தார். அவர் பெயர் ஆனந்தராஜா. ஆனந்தண்ணை என்றே அவரை அழைப்போம். ஆனந்தண்ணை குறிப்பிடும் வேலைத் திட்டங்களைத்தான் நான் பிரச்சாரத்துக்கு எடுத்துக் கொள்வேன். அவர் தரும் தகவல்களை வைத்தோ அல்லது நான் சேகரித்த தகவல்களை அவரிடம் காட்டி, அதற்கான  ஒப்புதல்களைப் பெற்றோதான் பிரச்சாரத்திற்கான வேலைகளைத் தொடங்குவேன். அந்த விடயங்களை வைத்துத்தான் துண்டுப் பிரசுரங்களையோ அல்லது சிற்றேடுகளையோ வெளிக் கொண்டு வருவேன்.

திங்கள் முதல் வெள்ளி வரை எனது வேலை. சனி, ஞாயிறு அல்லது விடுமுறை நாட்களில்தான் புனர்வாழ்வுக் கழகத்துக்கான எனது செயற்பாடுகள் இருக்கும். இத் தினங்களில் யேர்மனியில் ஏதாவது ஒரு நகரத்தில் அந்த நகரத்துத் தொண்டருடன்  புனர்வாழ்வுக் கழகத்துக்கான பிரச்சாரத்தில் நிற்பேன்.

யேர்மனியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை சட்ட ரீதியாக ஒரு உதவி நிறுவனமாகப் பதிந்திருந்தோம். அதனால் நிதி சேகரிப்பு, மற்றும் சேகரித்த நிதியை நாட்டுக்கு அனுப்புவதற்கான வழிமுறைகள் எல்லாமே ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. யேர்மனியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பதிவில் இருந்ததால், அதற்கு அன்பளிப்புகள் செய்பவர்களின் நிதிகளுக்கு வரி விலக்கு இருந்தது. அநேகமான நிதிகள் வங்கிகள் மூலமாகவே கிடைக்க ஏற்பாடு செய்திருந்தோம். வருட இறுதியில் அவரவர்கள் தந்த நிதிகளுக்கான பற்றுச் சீட்டுகளை வங்கியில் இருந்து பெற்று உரியவர்களுக்குச் சேர்த்து விடுவோம்.

எல்லா விடயங்களிலும் ஒரு நேர்த்தி இருந்தும் பிரச்சாரத்துக்குத் தேவையான தகவல்களில் எப்போதும் பற்றாக்குறை இருந்தே வந்தது. அவைகளைப் பெறுவதில் அதிக சிரமங்கள் எனக்கு இருந்தன.

காந்தி நிலையம், குருகுலம், இனிய வாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு, முன்பள்ளி, தொழில்சார் பயிற்சி நிலையம், சத்துணவு நிலையங்கள் என்று இன்னும் பல திட்டங்கள் நாட்டில் இருந்தும் யேர்மனியக் கிளைக்குப் போதுமான செயற் திட்டங்கள் தரப் படவில்லை என்பது எனது ஆதங்கமாக இருந்தது. இது விடயமான எனது வருத்தத்தை நேரடியாக ஆனந்தண்ணைக்கு பல தடவைகள் தெரிவித்திருக்கிறேன். அடிக்கடி நான் அவரை நச்சரித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அவரிடம் இருந்து எனக்கு பதில் வந்தது. 

„நான் என்ன செய்ய முடியும்? இருக்கிற நல்ல திட்டங்களை எல்லாம் அவையள் மற்றைய நாடுகளுக்குப் பிரிச்சுக் குடுத்திட்டீனம். நானும் பல தடவை கேட்டுப் பார்த்திட்டன். வெண்புறா திட்டத்தை யாரும் எடுக்கேல்லை. வேணுமென்றால் எடுத்துச் செய்யுங்கோ  என்று பதில் வந்திருக்கு' என்றார்.

எல்லோரும் கைவிட்ட ஒன்று எங்கள் கைக்குக் கிட்டியது. வெண்புறா திட்டத்தை யேர்மனிக்கு எடுத்துச் செய்தால் என்ன என்ற எண்ணம் எனக்குள் பலமானது. வெண்புறா சம்பந்தப் பட்ட தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தேன். ஆனந்தண்ணையும் தனக்கு கிடைப்பதை எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

செயற்கைக் கால்கள் பொருத்தும் பணியை இந்தியாவில் இருந்து வந்த ஜெய்ப்பூர் செயற்கை உறுப்புகள் பொருத்தும் நிலையம் செய்து கொண்டிருந்தது. அதுவும் அவர்கள் பணி யாழ்ப்பாணத்தில் மட்டுமே மட்டுப் படுத்தப் பட்டிருந்தது.  மேலும் அவர்களது செயற்திறன் யாழ் மாவட்டத்துக்கே போதுமானதாக இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தை விட வன்னியிலும் கிழக்கு மகாணத்திலும் அதிகப் பேர் கால்களை இழந்திருந்தனர். அவர்களுக்கான சேவையை வெண்புறா நிறுவனத்தின் மூலம் எவ்வாறு அதிகரிக்கலாம் என ஆராயத் தொடங்கினோம்.

வன்னியில் வெண்புறா நிறுவனம் தகரத்தினால் செய்யப்படும் செயற்கைக் கால்களைப் பொருத்தும் பணியைச் செய்து கொண்டிருந்தது. அதற்கான பயிற்சிகளை அவர்கள் பெற்றிருந்தனர். ஆகவே தகரத்தினால் செய்யப்படும் கால்களுக்கான உதிரிப்பாகங்களை வாங்க, அதைச் செய்யும் நிபுணர்களின் தொகையை அதிகரிக்க, அவர்களுக்கான மாதச் சம்பளத்தை வழங்க யேர்மனிய தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதியைப் பயன் படுத்தலாம் என தீர்மானம் ஆனது.

இத்தனைக்கும் செயற்கைக் கால்களை இலவசமாகவே வெண்புறா செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. கால்களைப் பொருத்திக் கொள்ள வருபவருக்கான செயற்கை உறுப்பைப் பொருத்தி அவர் சுகமான முறையில் நடமாடும் வரை அவருக்கான பயிற்சி, தங்குமிட வசதி, உணவு போன்றவை வெண்புறா நிறுவனத்தில் இலவசமாகவே  வழங்கப்பட்டது. ஆகவே பெருமளவு நிதி சேகரிக்கும் பணி எங்களிடம் வந்து சேர்ந்தது. தொண்டர்கள் எல்லோரும் சுறுசுறுப்பானோம். நகரங்கள் தோறும் „புனர்வாழ்வுக் கலைத் தென்றல்' என்ற கலை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து கட்டணம் வசூலித்து நடாத்தினோம். எங்கள் பணிக்காக எங்கள் கலைஞர்கள் பணம் ஏதும் பெற்றுக் கொள்ளாது இலவசமாகவே தங்கள் கலைகளை புனர்வாழ்வுக் கலைத்தென்றலுக்குத் தந்தார்கள். முற்று முழுதாக ஈழத் தமிழர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளாகவே எங்கள் நிகழ்ச்சிகள் அமைந்தன. இவ்வகையான நிகழ்ச்சிகளுக்கு கனடாவில் இருந்து வந்து பொன் சுந்தரலிங்கம் மற்றும் வர்ணராமேஸ்வரன் ஆகியோர் தங்கள் இசை நிகழ்ச்சியை அர்பணித்ததை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நிதிகள் எதிர்பார்ப்பை விட அதிகமானதாக இருந்தது. புனர்வாழ்வுக் கலைத் தென்றலுக்கு தமிழ் மக்களிடம் போதிய வரவேற்பு இருந்தது. கலை நிகழ்ச்சியின் பொழுது  மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த சிற்றுண்டிச்சாலை நல்ல விற்பனையைப் பெற்றிருந்தது. 

வேறு சில  தமிழ் அமைப்புகளும் கலை நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருந்ததால், அவர்களுக்கு வழி விட்டு எங்களது புனர்வாழ்வுக் கலைத்தென்றல் நிகழ்ச்சிகளை மட்டுப் படுத்தி பெரிய நகரங்களில் மட்டுமே நடத்தி வந்தோம்.

தகரத்தால் செய்யப்படும் கால்களைப் பொருத்துவதால் கால்களை மடிக்க முடியாது இருக்கிறது. கடல் தொழிலுக்குச் செல்பவர்களுக்கு சிரமமாக இருக்கிறது என வெண்புறா நிறுவனத்தில் இருந்து தகவல் ஒன்று வந்திருந்தது. இது குறித்து என்ன செய்யலாம் என ஆராய்ந்தோம். ஆனால் ஆக்கபூர்வமாக எதையும்  எங்களால் செய்ய  முடியாதிருந்தது. வெண்புறா நிறுவனத்திற்கு  ஏதாவது உதிரிப் பாகங்கள் தேவைப்பட்டால் யேர்மனியில் இருந்து அவர்களுக்கு  அனுப்பிக் கொண்டிருந்தோம். அப்படி அவர்கள் கேட்ட பொருட்களை வாங்குவதற்கு ஆனந்தண்ணை ஒரு கை, கால் செயற்கை உறுப்பு செய்யும்  நிறுவனத்துக்குச் சென்ற பொழுது, அவர்கள் அவரிடம் இவை எதற்கு எனக் கேட்க அவரும் வெண்புறா நிறுவனத்தைப் பற்றிச் சொல்ல, வேண்டுமானால் தங்களது தொழில் நுட்பத்தை அங்கு பயன்படுத்தலாமா எனக் கேட்டிருக்கிறார்கள். இந்தத் தகவலை அவர் என்னிடம் சொல்ல, எனக்கு அது நல்லதாகவே பட்டது. எங்களது வருடாந்தக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்தோம். அது ஏகமனதாக நிறைவேறியது.

அடுத்து என்ன.. துரிதகதியில் செயற் பட்டோம். வெண்புறா நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, அங்கு பெற வேண்டிய உத்தரவாதம் மற்றும் ஒழுங்குகளை ஆனந்தண்ணை செய்து கொண்டார். யேர்மனிய செயற்கை உறுப்பு செய்யும்  நிறுவனமும் தங்களது தொழில் நுட்ப வல்லுனர் ஒருவரை அங்கு அனுப்ப தெரிவு செய்து கொண்டது. இனி அவரை அங்கே அனுப்பி திட்டங்களை அமுல்படுத்துவதுதான் மிச்சமாக இருந்தது.

ஆனந்தண்ணையை ஒருநாள் கேட்டேன்.

„எப்போ யேர்மன்காரனை அனுப்பி யேர்மனியத் தொழில் நுட்பத்தை வெண்புறாவில் செய்யப் போறம்?'

„அதை நீங்கள்தான் முடிவு செய்யோணும்'

„நானா? நான் என்னத்தை முடிவு செய்யிறது..?

„நீங்கள்தானே அவனைக் கூட்டிக் கொண்டு போகோணும்'

அவரிடம் இருந்து அந்தப் பதில் வர எனக்குத் தூக்குவாரிப் போட்டது. நாட்டுக்கா? நானா? போவதா? அங்கே இருக்க முடியாமல்தானே இங்கே ஓடி வந்திருக்கிறேன்.

எனது முகம் இருந்த நிலையை அவர் புரிந்து கொண்டார். „பயப்படாதையுங்கோ. ஒன்றும் நடக்காது. இப்ப சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருக்கினம். அவையே ஒரு பிரச்சினையும் இல்லாமல் எல்லா இடமும் ஓடித் திரியினம். உங்களுக்கு ஒன்றும் நடக்காது. வேலை இடத்திலை லீவுக்கு அப்பிளை பண்ணீட்டுச் சொல்லுங்கோ. ஒத்தப்பேடியோடை கதைக்கோணும்  மற்ற ஒழுங்குகளையும் செய்யோணும்'

மாற்றம் இல்லை. நான்தான் போக வேண்டும் என்பதில் அவர் திடமாக இருந்தார். பேசாமல் வேலை இடத்தில் விடுமுறைக்கு விண்ணப்பம் செய்தேன். பயணத்துக்குத் துணையாக எனது மனைவியையும் சேர்த்துக் கொண்டேன். எதுவும் அசம்பாவிதம் நடந்தால் சேர்ந்தே போகலாம் என்ற பொது எண்ணம்தான்.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை