நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4

வெளிநாட்டவருக்கு சுலபமாக வன்னிக்கு செல்வதற்கு அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.

வெள்ளவத்தையில் அண்ணன் ஒழுங்கு செய்து தந்த வீடு, சகல வசதிகளையும் கொண்டிருந்தது. சாப்பாட்டு வசதிகளை தனது வீட்டிலேயே அண்ணன் ஒழுங்கு செய்திருந்தார். ஆகவே எங்களுக்கு கொழும்பில் தங்குமிடம், உணவு என்ற பிரச்சனை இருக்கவில்லை. நான் செய்ய வேண்டிய வேலைகளை வரிசைப் படுத்தினேன். முதலாவதாக எங்களைச் சந்திப்பதற்காக ரிஆர்ஓ வில் இருந்து வந்திருப்பவரை தொடர்பு கொள்வது. இரண்டாவதாக கொல்கருக்கு வன்னிக்குச் செல்வதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து பெறுவது. மூன்றாவதாக ஆனந்தண்ணையை தொலைபேசியில் தொடர்பு கொள்வது. நான்காவதாக வன்னிக்குப் புறப்படுவதற்கான பயண ஏற்பாடு செய்வது.

நான் கொழும்பில் சந்திக்க வேண்டியவரின் பெயர் சிவா மாஸ்ரர். அவரது இலக்கத்துக்கு தொலைபேசி எடுத்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.  "வந்திட்டீங்களா? யேர்மன்காரரும் வந்தவரோ? இண்டைக்குப் பின்னேரம் வன்னிக்குப் போகலாம்தானே?" நான் பேசுவதற்கு முன்னர் அவரிடம் இருந்து அவசரமாகக் கேள்விகள் வந்து விழுந்தன.

'யேர்மன்காரர் வந்திருக்கிறார். ஆனால் வன்னிக்குப் போறதுக்கு அவருக்கு பாஸ் எடுக்கோணும்"

"எப்ப எடுக்கப் போறீங்கள்?"

அவர் அப்படிக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. "நீங்கள்தானே அதுக்கான ஒழுங்குகள் பார்க்கோணும்"

நான் அப்படிச் சொன்னதும் அங்கிருந்து மௌனமே பதிலாக இருந்தது. சிறிது நேரத்துக்குப் பின் "உங்களை வன்னிக்குக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லித்தான் என்னை அனுப்பினவையள். மற்றதை எல்லாம் நீங்கள்தான் கவனிக்கோணும்" தயங்கித் தயங்கி அவரிடம் இருந்து பதில் வந்தது.

எனக்கு அவரது பதில் அதிர்ச்சியை மட்டும் தரவில்லை. கூடவே எரிச்சலையும் தந்தது. "எங்கை இருக்கிறியள்? விலாசத்தைச் சொல்லுங்கோ. நான் நேரிலேயே வாறன்"

முகவரியைத் தந்தார். காலிவீதியில் வெள்ளவத்தையும், தெகிவளையும் சந்திக்கும் இடத்தில் ரொக்கி தியேட்டருக்கு முன்பாக அந்த முகவரி இருந்தது. படிக்கும் காலங்களில் இந்த வழியாக இரண்டடுக்கு பாடசாலை பஸ்ஸில் மாணவனாக பயணித்த எனது பழைய நினைவுகள் வந்து போயின. எதுவுமே மாறவில்லை. அப்படியே இருந்தன. அவர் குறிப்பிட்ட கட்டிடத்தின் முன்னால் இருந்த தமிழர் புனர்வாழ்வுக்கழக கொழும்புக்கிளை அறிவிப்புப் பலகை எங்களை வரவேற்றது. உள்ளே சென்றோம். சிவா மாஸ்ரர் மட்டும் தனித்து நின்றார். வயது சற்று அதிகம். வேலையில் இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். அவருடன் உரையாடும் பொழுதே தெரிந்து கொண்டேன். அவருக்கு சொல்லப் பட்டது எல்லாம் இதுதான் "வருபவர்களை அழைத்துக் கொண்டு வன்னி வந்து சேருங்கள்"

இப்பொழுது கொல்கருக்கு வன்னிக்கு பாஸ் எடுப்பதும் எனது வேலையாயிற்று. வன்னிக்கு பாஸ் எடுத்திட்டு உங்களுக்குத் தகவல் தருகிறேன் என்று சொல்லி விட்டு விடைபெற்றேன்.

"தம்பி தெண்டிச்சு நாளைக்கு எடுத்துப் போடுங்கோ. நான் உடனை வந்திடுவன் எண்டு வீட்டை சொல்லிப் போட்டு வந்தனான்" வாசல் வரை அவரது குரல் கேட்டது.

தங்கியிருந்த வீட்டிற்குப் போகும் வழியில் இருந்த தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றில் இருந்து ஆனந்தண்ணைக்கு தொலைபேசி எடுத்தேன். "ஒரு கிழமைக்கு ஆஸ்பத்திரியிலை இருக்கச் சொல்லீட்டாங்கள். உடம்பிலை எங்கெங்கை வயருகள் பொருத்த வசதியோ அங்கை எல்லாம் பொருத்தியிருக்கிறாங்கள். அசைய முடியாமல் கட்டிலிலை படுத்திருக்கிறன்" என்று ஆனந்தண்ணையிடம் இருந்து பதில் வந்தது. அவரது நிலைமையைக் கேட்க சிரமமாக இருந்தது. ஆனாலும் எனது நிலைமைகளைச் சொன்னேன். ஆனந்தண்ணை வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருந்தாலும், காரியங்களைச் செய்து கொண்டே இருந்தார்.

"நீங்கள் எயர்போட்டிலை விட்டிட்டு போன பொருட்களை உடனையே எடுத்திட்டம். கன பேர் இஞ்சை இருந்து இப்ப ஊருக்கு வெளிக்கிட்டுக் கொண்டிருக்கினம். ஆரிட்டையாவது குடுத்து விடுறம். நீங்கள் கொல்கருக்கு வன்னிக்கு போறதுக்கான பாஸை எடுத்துக் கொண்டு அங்காலை போற அலுவலைப் பாருங்கோ' ஆறுதலான வார்த்தைகள் அவரிடம் இருந்து வந்தன. நலம் பெற வாழ்த்தைச் சொல்லி விட்டு தொலைபேசியை வைத்தேன்.

அடுத்தநாள் சந்தியில் இருந்த ஓட்டோவை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு நம்பிக்கையோடு பாதுகாப்பு அமைச்சகத்தக்குச் சென்றோம். கொல்கருக்கான விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்தோம். நாங்கள் தங்கி இருக்கும் முகவரி, தொலை பேசி இலக்கங்கள் எல்லாம் அந்த விண்ணப்பப் படிவத்தில் இருந்தன. எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டு, அலுவலகர் நிமிர்ந்து பார்த்தார். அந்தப் பார்வை "நீங்கள் இடத்தைக் காலி பண்ணுங்கள்" என்பது போன்று இருந்தது.

"வன்னிக்கான பாஸ்" வார்த்தையை மெதுவாக இழுத்தேன்.

அலுவலகர் விண்ணப்பப் படிவத்தை இன்னும் ஒரு தடவை பார்த்து விட்டு "விலாசம் இருக்கு. எல்லாம் முடிஞ்சாப் போலை அறிவிக்கிறம்"

"அவசரமா வன்னிக்குப் போகோணும். நாங்கள் எடுத்துக் கொண்டு வந்த லீவும் குறைவு"

"உங்கடை அவசரத்துக்கு நாங்கள் வேலை செய்ய முடியாது. நேரம் இருந்தால் நாளைக்கு வந்து பாருங்கோ. முடிஞ்சிருந்தால் உடனையே தந்து விடுகிறோம்" நம்பிக்கை கொஞ்சம் துளிர்த்தது.

அடுத்தநாள் பாஸ் கிடைத்தவுடன் வன்னிக்குப் போய் விடுவோம். அங்கு சேவைகளைச் செய்து விட்டு திரும்ப கொழும்பு வரும் பொழுது போதுமான நேரம் கிடைக்காது என்ற எண்ணம் தோன்ற கொல்கருக்கு கொழும்பைச் சுற்றிக் காட்டினேன். கொல்கர் மகிழ்ச்சியாக இருந்தான். கடற்கரையில் நின்று குதூகலித்தான். மிளகாய்த்தூளும், உப்பும் தூவிய அன்னாசி வாங்கிக் கொடுத்தேன். சற்றுத் தயங்கினான். சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்றான். இரவு, நேரம் சென்றே வீடு திரும்பினோம்.

மறுநாள் காலையில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு முன்னால் நின்றோம். அலுவலகரின் பார்வை அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை. அவரை நெருங்கிப் போனோம். "மன்னிக்கவும் உங்களுக்கான பாஸ் என் கைக்கு இன்னும் வரவில்லை" என்றார்.

ஏமாற்றமாக இருந்தது. செய்ய வேண்டியவை நிறையவே இருக்க கொழும்பில் நேரம் வீணாகப் போய்க் கொண்டிருந்தது.. "நான் உடனை வந்திடுவன் எண்டு வீட்டை சொல்லிப் போட்டு வந்தனான்" சிவா மாஸ்ரர் சொன்னதும் காதில் கேட்டுக் கொண்டிருந்தது.

கொல்கர் தலையாட்டி விட்டுச் சிரித்தான். "ஏன் தாமதிக்கிறார்கள்? நாங்கள் சேவை செய்யத்தானே போகிறோம்"

"தங்களுக்கு என்றால் சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள். நாங்கள் போக வேண்டியதும், சேவை செய்ய இருப்பதும் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு" என்று அவனுக்குச் சொல்ல நினைத்தேன். வேண்டாம் என்று உள்ளுணர்வு சொன்னதால் நிறுத்திக் கொண்டேன்.

அலுவலகர் எங்களையே பார்ப்பது தெரிந்தது. கொஞ்சம் கதைத்துப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. அவர் தனியாக இருந்தது இன்னும் எனக்கு வசதியாகப் பட்டது. எங்களது நிலைமையை அவருக்கு மீண்டும் விளக்கினேன். பணம் செலவானாலும் பரவாயில்லை தருகிறேன் என்றேன். எல்லாவற்றையும் கொல்கர் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தான். எனது சமார்த்தியத்தை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவன் பார்த்திருந்ததால், என்மீது அவனுக்கு அலாதியான நம்பிக்கை இருந்தது. அலுவலகர் உதவ முன்வந்தார். எங்களை வெளியே காத்திருக்கும்படி சொல்லி விட்டு யார்யாருடனோ எல்லாம் தொலைபேசியில் பேசினார். சிறிது நேரத்துக்குப் பின் எங்களைக் கூப்பிட்டார். உள்ளே போனோம்.

"ஒபீசரோடை கதைச்சனான். (கொல்கரைக் காட்டி) இவர் தன்ரை அவசரத்தைச் சொல்லி அவரோடை கதைச்சால் அலுவல் முடிஞ்சிடும்"

கொல்கரும் சரி என்றான். தொலைபேசி அழைப்பில் அவர் குறிப்பிட்ட ஒபீசர் வந்தார். கொல்கர் கதைக்க ஆரம்பித்தான்.

"காசு தரலாம். வன்னிக்குப் போக பாஸ் தாருங்கள். எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?"

தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. அலுவலகருக்கும் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கொல்கரைச் சொல்லிக் குற்றம் இல்லை. எங்கே எப்படி கதைக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை.

அலுவலகர் "நீங்கள் போகலாம்" என்ற பார்வை பார்த்தார். வெளியேறினோம்.

கொல்கர் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தான். "எப்பிடி அவர் ரெலிபோனைக் கட் பண்ணலாம்?" கொஞ்ச நேரத்தில் அமைதியானான். "தவறு செய்திட்டேன்" என்றான். "பரவாயில்லை. அது முடிந்து போயிற்று" என்று அவனுக்கு ஆறுதல் சொன்னேன். ஆனால் இனி நான் தனியாகவே இதைக் கையாள்வது என்று முடிவு செய்தேன்.

மீண்டும் கடற்கரை, கட்டிடங்கள், காட்சிகள்… என்று அன்றைய நேரம் போனது. அலுவலகரின் தொலைபேசி இலக்கத்தை நான் முன்னரே வாங்கி வைத்திருந்தது எனக்குப் பயன் பட்டது. அவருடன் தனியாகவே தொலைபேசியில் உரையாடிக் கொண்டேன்.

மறுநாள் காலை கொல்கரையும் அழைத்துக் கொண்டு வாடகை ஓட்டோவில் பாதுகாப்பு அமைச்சகம் நோக்கி போய்க் கொண்டிருந்தேன். எங்களை முட்ட வருவது போல் ஒரு ஓட்டோ பக்கவாட்டில் வந்தது. இரண்டு ஓட்டோக்களுமே ஒரே பாதையில் சமாந்தரமாகப் பயணித்துக் கொண்டிருந்தன. எனக்கு கொஞ்சம் பயம் இருந்தாலும் நான் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. பக்கத்தில் வந்த ஓட்டோவில் இருந்த சாரதி எங்களது ஓட்டோ சாரதியைப் பார்த்து, "என்ன இண்டைக்கு வீட்டிலை கோழியோ?" என்று கேட்டு விட்டு விலகிப் போனார். எங்கள் ஓட்டோ சாரதியைப் பார்த்தேன். அவரது முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

"கோழி என்றாரே. அப்பிடி என்றால் என்ன?" ஆர்வ மிகுதியால் அவரிடம் கேட்டேன்.

வெறுப்பாகவே அவரிடம் இருந்து பதில் வந்தது. "பொதுவா வெள்ளைக்காரனை ஓட்டோவிலை ஏத்திக் கொண்டு போனால், அவன் பாத்தும், பாராமலும் அள்ளித் தருவான். அப்பிடிக் காசு கிடைக்கிற நேரத்திலைதான் வீட்டிலை கொஞ்சம் வசதியான சாப்பாடு சாப்பிடுவம். அதுக்குத்தான் அப்பிடிக் கேட்டிட்டுப் போறான்" நாங்கள் தங்கி இருந்த வீதியின் முனையில் தான் இந்த ஓட்டோ எப்பொழுதும் நிற்கும். அதில்தான் நாங்கள் எப்பொழுதும் பயணித்திருக்கிறோம். இன்றும் அதில்தான் போய்க் கொண்டிருக்கிறோம். வெள்ளையன் அதில் பயணித்தாலும் சாரதிக்கு கோழி கிடைக்க வாய்ப்பில்லை. காரணம் கறுப்பன் நானும் அல்லவா சேர்ந்து பயணிக்கிறேன்.

பாதுகாப்பு அமைச்சகத்தக்கு முன்னால் ஓட்டோ நின்றது. கொல்கரும் நானும் இறங்கிக் கொண்டோம். ஒட்டோ சாரதிக்கான பணத்தைக் கொடுத்தேன். ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தார்.

"நாலைஞ்சு நாளைக்கு உங்கடை வீட்டிலை கோழி" 

ஓட்டோவை விட்டு இறங்கி நன்றி சொல்லி விட்டுப் போனார்.

உள்ளே போகும் போது "இண்டைக்கு நான் அந்த ஒபிசரோடை நல்ல முறையிலை கதைக்கிறன்" என்று கொல்கர் சொன்னான்.

"தேவை இல்லை"

"என்னை நம்பு நான் நல்ல முறையிலை கதைக்கிறன்" நின்றவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தபடியே சொன்னேன்.

"அவசியம் இல்லை"

"ஏன்?"

"எல்லாம் முடிஞ்சுது. கையெழுத்துப் போட்டு பாஸை வாங்கிட்டு வா"

"உனக்கு எப்பிடித் தெரியும்?"

"காலையிலை அலுவலகரோடை போனிலை கதைச்சனான்"

கொல்கரின் பார்வையில் சில கேள்விகள் இருந்தன. அவனது அவனது உதடுகள் சிரித்துக் கொண்டன.

"சரி வன்னிக்கு எப்ப போகிறம்?"கொல்கரின் கேள்வியில் தயக்கம் தெரிந்தது.

"இன்று இரவு"

"அப்போ இன்றிரவு உன்ரை அண்ணனோடை பியர் குடிக்க எனக்கு வாய்ப்பில்லையோ?" "போறதுக்கு முதல் வேணுமானால் கொஞ்சம் போட்டுக் கொள். அடுத்த மூன்று கிழமைக்கு அதற்கான சந்தர்ப்பம் உனக்கு இல்லை"

"தெரியும் அங்கை கிடைக்காது என்று. அது ஒழுங்கும், கட்டுப்பாடும் கொண்ட இடம் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும்"

ஒருவாறு கொல்கருக்கு வன்னி செல்வதற்கான பாஸ் எடுத்தாயிற்று.

-  (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh 

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை