நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5

சிவா மாஸ்ரருக்கு தொலை பேசி எடுத்தேன். "வன்னிக்கு இன்றிரவு புறப்படலாம்“ என்றேன். வன்னிக்குப் போவதற்கான வாகனத்தை ஒழுங்கு செய்து விட்டு தனக்குச் சொல்லும் படி சொன்னார்.

அதையும் நானா செய்ய வேண்டும்? அவரிடம் கேட்டால் “வருபவர்களை அழைத்துக் கொண்டு வன்னி வந்து சேருங்கள், என்றுதான் தனக்குச் சொல்லி விட்டவர்கள்" என்று பதில் வரும். ஆகவே மேற்கொண்டு அவரிடம் கதைப்பதில் ஏதும் பயனில்லை. வாகனம் ஒன்றை ஒழுங்கு செய்யச் சொல்லி அண்ணனிடம் சொன்னேன்.

சிறிய வான். சிவா மாஸ்ரருக்கு வீட்டுக்கு எப்போ போய்ச் சேரலாம் என்ற நினைப்பு. வாகனத்தின் முன்னுக்கு அமர்ந்து கொண்டார். எங்களுக்கு பின்னால் இருப்பதற்கு போதுமான இடம் இருந்தது. சாரதியும் அவரது உதவியாளரும் முன்னால் அமர்ந்து கொண்டார்கள். சில நாட்களானாலும் அண்ணனும், கொல்கரும் அதிகநாள் நண்பர்கள் போல் தங்கள் பிரிவின் துயரைக் காட்டிக் கொண்டார்கள். எல்லாம் பியர் தந்த நட்பு என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

போகும் வழியில் வெள்ளையப்பம் அதோடு சேர்த்துச் சாப்பிட சீனிச் சம்பல், பூப்போன்ற இடியப்பம் அதற்கான 'பொல்' சம்பல், சொதி என இரவுச் சாப்பாடு நன்றாகவே இருந்தது.

அதிகாலை, இருள் விலகவில்லை. வவுனியாவைச் சென்றடைந்தோம். அங்கிருக்கும் ஒரு விடுதியில் குளித்து, இளைப்பாறி மறுநாள் பயணம் செய்வதாக ஏற்பாடாகி இருந்தது. வீதியில் மாடுகள் படுத்திருந்தன. எதையும் பொருட்படுத்தாது அவை அசை போட்டுக் கொண்டு அமைதியாக இருந்தன. அவைகளை எல்லாம் விலகி வாகனம் சென்று விடுதி முன் நின்றது.

வவுனியாவில் எங்களை வரவேற்பவர் விடுதி வாசலிலேயே காத்திருந்தார். தன்னை எங்களிடம் அறிமுகம் செய்து கொண்டார். “உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யச் சொல்லி என்னட்டை சொல்லி இருக்கினம்“  அறிமுகத்தோடு நலன் விசாரிப்பையும் முடித்துக் கொண்டு விடுதிக்குள் சென்றோம்.  கொல்கருக்கு அந்த விடுதி பிடிக்கவில்லை. ஆகவே அங்கு தங்கும் எண்ணத்தைக் கைவிட்டோம்.

"அங்காலை போறதுக்கு கன சனம் ராத்திரியே வந்து காத்துக் கொண்டிருக்குது. நீங்கள் இண்டைக்குப் போறதாயிருந்தால் இப்ப போய் கியூவிலை நிண்டால்தான்  மத்தியானத்துக்காவது அங்காலை போகலாம்" வவுனியாவில் எங்களுக்கு உதவிக்கு வந்தவர் தகவல் தந்தார்.

ஆகவே காலைத் தேவைகளை உடனடியாக முடித்துக் கொண்டு வன்னிக்கான பயணத்தை தொடர்வது எனத் தீர்மானித்துக் கொண்டோம்.

"சூட்கேசுக்குள்ளை வில்லங்கமான சாமான்கள் இருந்தால் எடுத்து வைச்சிட்டுக் கொண்டு போங்கோ. வெள்ளைக்காரனோடை போகக்கை செக்கிங் கூடவாக இருக்கும்" உதவிக்கு வந்தவர் எச்சரித்தார்.

இருக்கும் பொருட்களை அவர்கள் எடுத்துக் கொண்டால் அல்லது தடுத்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் எனக்குள் ஓடியது.

"அங்காலை இதைக் கொண்டு போறதுக்கு ஏதாவது வழி இருக்குதோ?" அவரிடம் கேட்டேன்.

அவரது வாய் ஓரம் சிரிப்பு ஒன்று தோன்றி மறைந்தது.

"வைச்சிட்டுப் போங்கோ இரண்டு நாளிலை வந்து சேரும்"

அவர் அப்படிச் சொன்னதன் பின் கொல்கர் என்னிடம் தந்து வைத்திருந்த செயற்கைக் கால் செய்வதற்கான பொருட்கள் அடங்கிய பெட்டியை அவரிடம் ஒப்படைத்தேன்.

அவர் அந்தப் பெட்டியை பத்திரமாக வண்டியில் இருந்து இறக்கி விடுதி வாசலில் வைத்தார். இதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த கொல்கரின் முகம் மாறிப் போயிற்று.

"என்னத்துக்கு இதை அவரிட்டை குடுக்கிறாய்? யேர்மனியிலை விட்டிட்டு வந்தது காணாதெண்டு மிச்சத்தையும் இங்கை துலைக்கப் போறியோ? இதுகளும்  இல்லாமல் அங்கை போய் என்ன செய்யப் போறம்?" என்று ஏகத்துக்கு கேள்விகளை என்னிடம் கொல்கர் அடுக்கிக் கொண்டே இருந்தான்.

"எல்லாம் சரியாக நடக்கும்" என்று நான் கொல்கரை சமாதானப் படுத்தினேன். அவன் சமாதானம் ஆகவில்லை என்பதை அவன் முகம் காட்டி நின்றது. பிழையான ஆளை தன்னுடன் சேர்த்து விட்டார்களோ என்ற அச்சம் கூட அவனுக்கு வந்திருக்கலாம்.

எதற்கும் இருக்கட்டும் என்று உதவிக்கு வந்தவரிடம் இன்னும் ஒரு தடவை உறுதிப் படுத்திக் கொண்டேன்.

"நாளையிண்டைக்கு அங்கை கொண்டு வந்து சேர்ப்பீங்கள்தானே?"

"பயப்படாதையுங்கோ"

கொல்கரை ஒருவாறு சமாதானம் செய்து கொண்டு ஓமந்தை சோதனைச் சாவடி எல்லையை நோக்கிப் பயணமானோம்.

பெட்டிகள், பொதிகள் என்று ஏகப்பட்ட பொருட்களோடு தார் வீதியில் மக்கள் கூட்டமாக ஆக்கிரமித்திருந்தார்கள். வீதியின் ஓரமாக நீண்ட வரிசைகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. நாங்கள் வாகனத்துக்குள்ளேயே இருந்தோம். எங்களுக்கு முன்னால் பெரியளவில் பொருட்களை உள்ளடக்கிய பல லொறிகள் நின்றன. அவற்றின் பிற் பக்கங்களில் மூன்றெழுத்து ஆங்கில எழுத்துகள் அழகழாக, பெரிதாக எழுதப் பட்டிருந்தன. லொறிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய தந்தை, பாட்டானர் பெயர்களின் முதல் எழுத்துக்களுடன் தங்களது பெயர்களின் முதல் எழுத்தையும் செர்த்து அழகாக பதிந்து வைத்திருக்கும் பழக்கம் இன்னமும் தொடர்கிறது என்று எண்ணிக் கொண்டேன்.

வெயில் ஏறிக் கொண்டே இருந்தது. சோதனைச் சாவடி திறந்த பாடில்லை.

"நேற்றும் திறக்கேல்லை. இண்டைக்கும் திறக்க மாட்டாங்களோ?"  வெளியில் நின்றவர்களில் ஒருவர்  பொறுமை இழந்திருந்தார் போலும். இப்படி ஒரு குண்டைப் போட்டு மற்றவர்களை சலனப் படுத்தி விட்டிருந்தார்.

`இன்றைக்கு சோதனைச் சாவடி திறக்காவிட்டால் என்ன செய்யலாம்´ என்ற எண்ண அலைகள் எனக்குள் எழுந்தன. வவுனியா வெய்யில் தாள முடியாமல் வாகன யன்னல் கண்ணாடியை தனது துவாயால் மூடி வைத்து விட்டு வாகனத்துக்குள் இருந்து கொல்கர் அவிந்து கொண்டிருந்தான். அவனது முகம் உடல் எல்லாம் சிவப்பு வண்ணமாக மாறிக் கொண்டிருந்தன. எங்களுக்கு உதவுவதற்காக வந்து இவ்வளவு சிரமப் படுகிறானே என்று எனது மனது வெந்து கொண்டிருந்தது.

"வேண்டுமானால் வாகனத்தை விட்டு வெளியே இறங்கி நின்று கொள்ளேன்" என்று அவனிடம் கேட்டுப் பார்த்தேன். அவசியம் இல்லை என்றான்.

வழியில் தேவைப் படும் என்று நிறைய தண்ணீர் போத்தல்களை வாங்கி வாகனத்துக்குள் வைத்திருந்தேன். அதை எல்லாம் கொல்கர் இப்பொழுது  குடித்து முடித்துக் கொண்டிருந்தான்.

வெளியில் சில்லறை வியாபாரங்களும் நடந்து கொண்டிருந்தன. ஒருவாறு சோதனைச் சாவடியைத் திறந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் சோதனைச் சாவடியை மூடி விடுவார்கள் என்பதால் எல்லோரும் தங்கள் அவசரத்தைக் காட்டினார்கள்.

வாகனங்களுக்கான சோதனைகளுக்கு தனியான ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. லொறிகளில் கொண்டு செல்லப் பட்ட சகல பொருட்களும் முற்றாக இறக்கப் பட்டு சோதனை செய்யப்பட்டன. அவற்றை இறக்குவதற்கும், ஏற்றுவதற்கும் என அங்கே தொழிலாளர்கள் பலர் இருந்தார்கள். இந்தச் செயற்பாடானது பல தொழிலார்களுக்குப் பிழைப்பாக இருந்தது. முதலாளிகளுக்கு மட்டும் பணச் சேதாரமாக இருந்தது.

ஒரு லொறி ஓட்டுனரைக் கேட்டேன் "இவ்வளவையும் இறக்கி ஏற்றுவது என்பது நேர விரயமாக  இருக்குமே?"

"எப்பிடியும் பின்னேரம் ஆகும். இஞ்சை மட்டுமில்லை. அவங்கடை செக் பொயின்ற்றிலையும் இதே பிரச்சினைதான். இறக்கி ஏத்திறதோடை அவையளின்ரை வரியும் சேர்ந்து வரும். நாளைக்குப் பின்னேரமும் முடியுமோ தெரியேல்லை"

ஒரு பொருளை ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்குக் கொண்டு செல்லும் வேலை என்பது  அவ்வளவு எளிதானது அல்ல என்பதை புரிந்து கொண்டேன். எவ்வளவு பொறுமைகளை அவர்கள் கடைப் பிடிக்கிறார்கள் என்பதும் தெளிவானது.

எங்கள் முறை வந்தது. அதிகாரிகள் எங்களைப் பார்த்தர்கள். எங்கள் அடையாளப் பத்திரங்களைப் பரிசோதித்தார்கள். ஒரு பெட்டியை திறக்கச் சொன்னார்கள். திறந்தேன். பார்த்தார்கள். தொடர்ந்து பயணிப்பதற்கு  அனுமதி தந்தார்கள்.

கொல்கர் என்னைப் பார்த்தான். "பேசாமல் அந்தப் பெட்டியையும் கொண்டு வந்திருக்கலாம். அங்கை விட்டிட்டு வந்திட்டியே பாவி"  என்று அந்தப் பார்வைக்கான அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.

-  (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh 

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை