நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13

தமிழர் புனர்வாழ்வுக்கழக அலுவலகத்தில் இருந்து வெண்புறா நிலையத்துக்கு வந்தோம். மதிய வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. வெண்புறா நிலையத்தின் வரவேற்பறையில் இருந்து எங்களது செயற்பாடுகள் பற்றி நானும், ரெஜியும், கொல்கரும் உரையாடிக் கொண்டிருந்தோம்.

அந்த வெப்பமான வேளையில் சுந்தரம் எங்களுக்கு குடிப்பதற்கு செவ்விளநீர் தந்து விட்டுப் போனார்.

எங்களுக்காக ஒரு இளநீர் கூடமே சுந்தரம் வைத்திருந்தார். வெண்புறா நிறுவனத்தின் இணைப் பொறுப்பாளர் அவர்.

இங்கே சுந்தரத்தைப் பற்றி குறிப்பிடுவது நல்லது. சிங்கள இராணுவத்தின் செல் விழுந்து ஒரு காலை இழந்து நிற்கின்றார். இதே நிலைதான் கரிகரனுக்கும். வெண்புறா நிலையத்தில் பணிபுரிபவர்கள் போராட்டத்தில் களம் கண்டவர்கள் அல்லர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நிறையக் கதைகள் இருந்தன. தற்செயலாக வரவேற்பறைக்கு வந்த அன்ரனி நாங்கள் கதைப்பதைக் கேட்டு விட்டு „இங்கை சொல்லி விட்டால் எங்கையெண்டாலும் தேடிப்பிடிச்சுக் கொண்டு வந்து தருவினம் அதை என்னெண்டு சொன்னால் விசாரித்துக் பார்க்கலாம்' என்றார்.

எனக்கும் அன்ரனி சொல்வதில் உடன்பாடு இருந்தது. ஆனால் கொல்கர் அதைத் திடமாக மறுத்தான். 'இங்கு அப்படியான பொருட்கள் கிடைப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை. அதுகள் பைபர் கிளாஸை காயவைத்து மென்மையாக்கும் இரசாயனங்கள். இங்கை மட்டுமல்ல சிங்கப்பூரிலும் கூட அதுகள் கிடைக்க வாய்ப்பில்லை'

„பைபர் கிளாசிலைதானே இஞ்சை போர்ட் செய்யிறவையள். அவையள் அதைக் காய வைக்கினம்தானே' அன்ரனி விபரம் தெரிந்தவர். இன்னும் என்னுள் நம்பிக்கை வளர்ந்தது.

அன்ரனியின் பேச்சை இப்பொழுது கொல்கர் மறுக்கவில்லை. ஒரு வேளை அந்த இரசாயனப் பொருட்கள் வன்னியிலும் இருக்கக் கூடும் என்ற எண்ணம் அவனுக்கு வந்திருக்கலாம்.

„இஞ்சை எங்கை போர்ட் செய்யினம்?' அன்ரனியைக் கேட்டேன்.

„அதுக்கு முல்லைத் தீவுக்குத்தான் போக வேணும்'

ரெஜியைப் பார்த்தேன்.

„அப்பிடியெண்டால் ஒருக்கால் போய் பார்க்கலாம்' ரெஜியின் பதில் உற்சாகம் தந்தது.

„முல்லைத் தீவுக்குப் போறது லேசுப்பட்ட பாடில்லை. விசுவமடுப் பாதையை விட மோசம். செல் விழுந்து றோட்டெல்லாம் ஒரே பள்ளமும், மேடுமா இருக்கும். பழக்கப்பட்ட நாங்களே போறதுக்கு கஸ்ரப் படுறனாங்கள். நீங்கள் தாக்குப் பிடிக்க மாட்டீங்கள்' அன்ரனி சொன்ன போது மனதில் ஏறி வந்த நம்பிக்கை கீழே விழுந்து சிதறிப் போனது.

கொல்கரிடம் நிலைமையை விளக்கினேன். 'மல்போரா டூர் (Marlbora Tore) என்று பாலைவனத்திலேயும், காடுகளுக்குள்ளேயும் போவாங்களே. அதுபோல இதையும் நினைச்சுக் கொள்வோம். போகலாம்' என்றான்.

இரண்டு காரணங்களுக்காக எனது மனைவியை முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டி இருந்தது. ஒன்று சீரற்ற பாதையினூடான பயணம். மற்றது மாலையில் தவறாது வரும் ஜனனி.

மதியஉணவை முடித்துக் கொண்டு ரெஜியும், கொல்கரும், நானும் முல்லைத்தீவுக்குப் புறப்பட்டோம். பயணத்தின் போது ஏன்தான் மதியம் சாப்பிட்டேன் என்று என்னையே நொந்து கொண்டேன்.

நிலைமையை அவதானித்த அன்ரனி சொன்னார், 'யோசிக்காதையுங்கோ அங்கிள். வெளிக்கிட்டிட்டம் போய் சேரத்தானே வேணும். அங்கை வெண்புறாவிலை கனக்க ஓமோ வோட்டர் வேண்டி வைச்சிருக்கிறன்'

ஒருவாறு முல்லைத்தீவுக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம்.

'இதுக்கு மேலை என்னாலை அடக்க முடியாது' என்று கொல்கர் சொன்னான்.

'அதோ அந்தத் தென்னைக்குப் பின்னலை போ' என்று அவனுக்குச் சொன்னேன். ஓட்டமும் நடையுமாக தென்னையை நோக்கிப் போனான்.

அவன் போகும் வேகத்தைப் பார்த்த ரெஜி, 'ஏன் எதுவும் பிரச்சனையோ?' என்று என்னைக் கேட்டார்.

'பிரச்சினை என்று ஒன்றுமில்லை. அது தென்னைக்கு சிறுநீர் பாய்ச்சும் சின்ன வேலை' என்றேன்.

ஆசுவாசமாக நிம்மதியாக தென்னைக்கு நன்றி சொல்லி விட்டு கொல்கர் எங்களை நோக்கி வந்தான்.

'யேர்மனியில் இப்படியான வேலைக்கு 50சென்ற்ஸ் கட்டணம் கொடுக்க வேணும். இது ஓப்பின் ரொயிலற் எண்டபடியால் ஒரு யூரோ கட்டணம் என்று கொல்கரிட்டை கேளுங்கோ' என்று ரெஜியின் காதுக்குள் சொன்னேன்.

சிரித்துக் கொண்டு வந்து நின்றவனிடம் ரெஜி ஒரு யூரோ கட்டணம் கேட்க கொல்கர் சற்றுத் தடுமாறினான். வன்னியில் பணம் தேவைப்படாததால் அவன் பணத்தை தன்னுடன் வைத்திருப்பதில்லை என்று எனக்குத் தெரியும். ரெஜி மீண்டும் மீண்டும் ஒரு யூரோ என்று கேட்க அதற்கு அவன் மிரள அதைப் பார்த்து ரெஜி சிரிக்க, இது தன்னை ஏய்ப்பதற்குத்தான் என்பதை கொல்கர் புரிந்து கொண்டான்.

இப்பொழுது படகுகள் செய்யும் இடத்தில் நின்றோம் அவர்கள் தந்த இரசாயனக் கலவையை கலந்து காய வைத்துப் பார்த்து கொல்கர் சொன்னான்.

'இதுவும் அதை ஒத்த இரசாயனம்தான். ஆனால் இது Fiber Glass ஐக் கடினமாக்குமே தவிர பிளாஸ்ரிக் போன்று மென்மையாக்காது. எங்களுக்குத் தேவையானது மென்மையாக்கும் போருளே' என்றான்.

ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூதானே சர்க்கரையாக இருக்கிறது. 'இதைக் கொண்டு போய் இப்போதைக்கு வேலையைத் தொடங்குவோம். அந்தப் பொருள் வந்தாப்போலை அதனைப் பிறகு பயன்படுத்துவோம்' என்றேன்.

சும்மா நேரத்தை வீணாக்குவது மட்டுமல்ல ஒருவேளை செயற்கைக் காலைப் பொருத்தும் பணியில் ஒரு சிறு துரும்பையேனும் எடுத்துப் போடாமல் யேர்மனிக்குத் திரும்ப வேண்டிவந்தால், பயணத்தின் முழு நோக்கமும் வீணாகப் போய்விடும் என்ற பயம் எனக்கு இருந்தது.

அரை மனதுடன் கொல்கர் 'உனது விருப்பம். ஆனால் அது எங்களது காலாக இருக்காது. கடினமான பொருளாகவே இருக்கும். வேணுமானால் எப்படி எங்களது தொழில் நுட்பத்தில் கால்கள் செய்கிறோம் என்று காட்டுவதற்காக மட்டும் இதைப் பயன் படுத்துவோம்' என்றான்.

அவர்கள் மகிழ்ச்சியோடு தங்களிடம் இருந்த இரசாயனப் பொருள்களை தகர டப்பாக்களில் ஊற்றித் தந்தார்கள். பணம் கொடுத்தோம். வாங்க மறுத்து விட்டார்கள்.

அடுத்த நாளும் தமிழ்செல்வன் வந்தார்.

வெண்புறா நிலையத்தின் பின்புறமாக இருந்த காணிகள் இன்னமும் துப்பரவாக்கப் படாமலலேயே இருந்தன. அதனால் அந்தக் காணிகளில் நுளம்புகள் அமோக விளைச்சல். நுளம்புகள் பகலில் தூங்கி இரவில் அட்டகாசமான ஆட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தன. இதை எனது மனைவி முதல்நாள் தமிழ்செல்வனுடன் கதைக்கும் பொழுது சொல்லி இருந்தார். இப்பொழுது ஒரு மருந்துக் குடுவையுடன் தமிழ்செல்வன் வந்திருந்தார்.

„அக்கா இந்த மருந்தை உடம்பிலை பூசினால் நுளம்பு கிட்டவே வராது' என்ற படி எனது மனைவியிடம் மருந்தைக் கொடுத்தார்.

ஆனால் நுளம்பை விட இன்னும் ஒரு பிரச்சனை அங்கே இருந்தது. முதல்நாள் இரவு பூச்சியோ, பூரானோ, தேளோ, கொடுக்கனோ கொல்கரின் காலைக் கடித்துப் பார்த்திருக்கிறது. கால் வீங்கி, முகம் வாடி சோகமாக கொல்கர் நின்றான்.

அதைப் பார்த்த தமிழ்செல்வன் „நான் நேற்றே சொன்னனான் ஹொட்டேலிலை போய் தங்குங்கோ என்று' எங்களைச் செல்லமாகக் கடிந்து கொண்டார்.

இன்றும் கொல்கர் சொன்னான், தான் வெண்புறா நிலையத்தில் தங்கிக் கொள்ள விரும்புவதாக. „முதலிலை இவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் காட்டுங்கோ' தமிழ்செல்வன் அன்புக்கட்டளை போட்டார்.

„நாளைக்கு வைகாசிப் பறுவம். வற்றாப்பளையில் அம்மனுக்குப் பொங்கல். நேரம் இருந்தால் கொல்கருடன் போய் வாருங்கள்' எனவும் தமிழ்செல்வன் சொன்னார்.

போகும் போது „எதுக்கும் முதலிலை காலுக்கு மருந்து எடுங்கள்' என்று சொல்லிவிட்டுப் போனார்.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh 

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை