நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15

நாங்கள் வந்திருக்கும் நோக்கத்தை மருத்துவத்துறைப் பொறுப்பாளர் ரேகா மூலம் அறிந்து எங்களை சந்திக்க ஜவாகர் வந்திருந்தார்.

ஜவாகருக்கும் ஒரு கால் செயற்கையானதுதான். வெண்புறா நிறுவனமே அதைச் செய்து கொடுத்திருந்தது. கால் பொருத்தப்பட்ட இடத்தில் செயற்கைக் காலுடனான உராய்வினால் காயம் ஏற்பட்டு வலி இருப்பதாகச் சொன்னார்.

அவரது காலைப் பரிசோதித்த கொல்கர் „சரியான அளவுகள் எடுக்காததாலேயேதான் இப்படியான பிரச்சினை வருகிறது. காயம் மாற வேண்டுமானால் செயற்கைக் காலை சில நாட்களுக்குக் கழட்டி வைப்பதுதான் ஒரே வழி' என்றான்.

„அது முடியாதே. நிறைய வேலைகள் இருக்கு' ஜவாகர் தனது நிலையைச் சொன்னார்.

„இவருக்கு யேர்மன் தொழில் நுட்பத்தை பயன் படுத்த வாய்ப்பிருக்கா?' கொல்கரைக் கேட்டேன்.

„காயம் மாறும் மட்டும் செய்யக் கூடாது. பாதிக்கப் பட்ட காலில் கிப்ஸ் (plaster of paris) பூசி அச்சு எடுத்து அதை வைத்துத்தான் செயற்கை உறுப்பைச் செய்கிறோம். காயப் பட்ட இடத்தில் கிப்ஸ் படுவது நல்லதல்ல. அது காயத்தை மேலும் பெரிதாக்கலாம்'

நிலைமை என்ன என்பதை புரிந்து கொண்ட ஜவாகர் „காயம் மாறினதுக்குப் பிறகு வந்து யேர்மன் தொழில் நுட்பத்திலை தயாரிக்கிற காலை பொருத்துவம். அதுவரை இதோடை இருக்கிறன்' என்றார்.

ஜவாகர் புறப்படும் பொழுது, கொல்கர் சொன்னான். „உங்கள் காலிலே இருக்கும் காயத்தை மாற்றுவதுக்கு ஏதாவது செய்யுங்கோ. இப்பிடியே விட்டால் இன்ஸ்பெக்சன் ஆக்கிப்போடும்' ஜவாகர் கொல்கருக்கு நன்றி சொல்லி விட்டுப் போனார்.

ஜவாகர் விடை பெற்றுப் போனதன் பின்னர் நீண்ட நேரமாக அவரது காலைப் பற்றியே கொல்கர் கதைத்துக் கொண்டிருந்தான்.

„அடுத்தமுறை வரக்கை அவருக்கு கால் செய்வோம்' என்றேன்.

„செய்யலாம். ஆனால் என்னாலை நெடுகவும் இங்கை வரேலாது. எனக்கும் சொந்த வேலை இருக்கு. உனக்கும் அதே பிரச்சினைதான். இங்கை வேலை செய்யிற ஆருக்காவது இந்தத் தொழில் நுட்பத்தை சொல்லிக் கொடுத்தால் அவையளுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது.' கொல்கர் சொன்னதில் உண்மை இருந்தது.

„நல்லது, இங்கை வேலை செய்யிற ஆக்களிலை நீ ஆரை அதுக்குத் தெரிவு செய்வாய்?'

„சடகோபன்' கொல்கர் உடனடியாகப் பதில் தந்தான். அவனே தொடர்ந்தான் „சடகோபன் ஆர்வமாக வேலை செய்யிறார். ஆனால் இது ஒரு நாளிலை சொல்லிக் கொடுக்கிற விசயம் இல்லை. நானே பல வருசங்கள் படிச்சது. பல நுணுக்கமான வேலைகள் இருக்கு'

„அப்போ சடகோபனை யேர்மனிக்கு கூட்டிக் கொண்டு போய் பயிற்சி கொடுப்போமோ?'

„மொழிப் பிரச்சினை. சடகோபனுக்கு இங்கிலீஸ் தெரிஞ்சாலாவது சமாளிக்கலாம்'

சடகோபனுக்கு மொழிப் பிரச்சினை இருப்பதால் அவரை யேர்மனிக்கு அழைத்துச் சென்று செயற்கைக் கால் தொடர்பான பயிற்சி கொடுப்பது சிரமம் என்பது தெரிந்தது. எதற்கும் இந்த விடயத்தை யேர்மனியலேயே கையாண்டால் என்ன என்ற எண்ணமும் இருந்தது. இந்த விடயத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு நிறுத்தி வைத்தோம்.

மதிய நேரம் தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகத்தில் இருந்து ரெஜி வந்தார். அவர் வரும் பொழுது வெறும் கைகளுடன் வராமல் எங்களுக்கான நம்பிக்கைகளோடு வந்தார். யேர்மனியில் நாங்கள் விட்டு வந்த இரண்டு இரசாயனக் கலவைகளும் அவரது கைகளில் இருந்தன. கொல்கருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

அதைக் கொண்டு வந்து தந்தவர்களுக்கு நன்றி சொல்ல எங்களுக்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. அவர்கள் தங்கள் பயணத்தின் அவசரத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகத்தில் இரண்டு இரசாயனக் கலவைகளையும் கொடுத்து விட்டுப் போய்விட்டார்கள். ஒருவேளை இந்தக் கட்டுரையை அவர்கள் வாசிக்க நேர்ந்தால், இந்தக் கட்டுரை மூலமாக எனது நன்றியை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு இரசாயனக் கலவைகளும் வந்து சேர்ந்ததைக் கண்டு, 'எல்லாம் வற்றாப்பளை அம்மன் அருள்' என்று அங்கே இருந்தவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.

அன்று மாலை அரசியல் துறைப் பொறுப்பாளருடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு இருந்தது. அங்கேதான் இரவு உணவும்.

கொல்கருக்குச் சொன்னேன். 'மதியம் அதிகம் சாப்பிடாதே. பிறகு நல்ல விருந்தை உன்னால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போய்விடும்' என்று

சிரித்துக் கொண்டான்.

மாலை நான்கு மணி அளவில் நாவண்ணன் வந்தார். கூடவே வேலணையூர் சுரேஸையும் கூட்டி வந்தார். அன்று வெண்புறா நிலையத்தில் விடுமுறையாதலால் வரவேற்பறையில் இருந்து அவர்களுடன் நீண்ட நேரம் உரையாட முடிந்தது.

நாவண்ணனின் வாழ்க்கை நிலைமை ஓரளவு எனக்குப் புரிந்திருந்தது. அவருக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினேன். ஒருவேளை அவரது தன்மானம் அதை நிராகரித்து விட்டால் என்ற தயக்கமும் எனக்கு இருந்தது. இப்படியான சங்கடங்கள் நிறைந்த சமயங்களில் எனக்கு துணையாக நிற்பது எனது துணைவிதான்.

நாவண்ணனுக்கு பணம் கொடுக்கும் படி மனைவியிடம் சொன்னேன். அங்கேயும் அதே தயக்கம்தான். 'உனது அண்ணனின் நண்பர்தானே. கொடுத்துப்பார். வேண்டினால் சரி. இல்லை என்றால் பேசாமல் விடுவோம். ஒரு பிரச்சினையும் இல்லை' என்று கொஞ்சம் ஊக்கப் படுத்தினேன்.

இவர் கொடுக்க, அவர், ' இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு வீண் சிரமங்கள்' என்று மெதுவாக இழுத்தார். 'கரும்புலி காவியம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் தானே அதை எழுதுவதற்கு பேப்பர் பேனா வாங்க இது உதவலாம்' என்றேன்.

பணத்தை எண்ணிப் பார்த்து விட்டு சொன்னார், 'இதுக்கு பேப்பர் கடையையே வாங்கலாம். மற்றும் படி கரும்புலி காவியம் எழுதுறதுக்கு அவையள் உதவி செய்யினம். முடிஞ்சால் அடுத்தமுறை வரக்கை ஒரு ரேப்றெக்கோடர் கொண்டு வாங்கோ. கவிதைகளை எழுதுற நேரத்துக்கு அதிலை பதிஞ்சு வைச்சிட்டு பிறகு ஆறுதலா எழுதலாம் எண்டு பாக்கிறன்.'

அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் அடுத்தமுறை போகும் பொழுது அவர் கேட்டதை எங்களால் கொண்டு போய் கொடுக்க முடியாமல் போயிற்று. பின்னர் அவர் ஐரோப்பிய நகரங்களுக்கான கலைப் பயணத்தை மேற் கொண்ட பொழுது யேர்மனிக்கும் வந்திருந்தார். அந்த சமயத்தில் அவரின் தேவையைப் பூர்த்தி செய்தோம்.

ஒரு மாவீரனுக்குத் தந்தையான கவிஞர் நாவண்ணன் விடுதலைக்காக பல கவிதைகளைத் தந்தவர். கவிதையில் வண்ணனான அவர் பரந்தாமனாக வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் குசேலராகவே வாழ்ந்து மறைந்து போனது பெரும் சோகம்.

(தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh 

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14  
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை