நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16

தமிழ்ச் செல்வனுடனான அன்றைய இரவு உணவு விருந்தில் எங்களுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழக இணைப்பாளர் ரெஜியும் கலந்து கொண்டார்.

அரசியல் துறையின் உதவிப் பொறுப்பாளர் தங்கன் எங்களுக்கான உணவுகளைப் பரிமாறினார். அவரிடம் அமைதி நிறைந்திருந்தது. அது அவரின் இயல்பான சுபாவமாக இருக்க வேண்டும். பார்த்தவுடன் நட்புக் கொள்ள வைக்கும் பார்வையும், செய்கைகளும் அவரிடம் இருந்தன.

கொல்கர் கொஞ்சம் திருப்தி இல்லாதவன் போல் தெரிந்தான். என்னவென்று அவனிடம் விபரம் கேட்டேன். 'இரவுச் சாப்பாடு என்றவுடன் சும்மா சாப்பிட்டுப் போவது என்றுதான் நினைத்தேன். அதனால்தான் கட்டைக் காற்சட்டையோடு வந்தேன். இங்கு ராஜாங்க மரியாதை அல்லவா நடக்கிறது. இப்படி ஒரு கட்டிடம் வன்னியில் இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை' என்றான்.

'இது அரசியல்துறை. வெளிநாடுகளில் இருந்து வரும் பிரமுகர்கள் இங்கேதான் சந்தித்துக் கொள்வார்கள். இன்று வந்திருக்கும் பிரமுகர் நீதான்' என்றேன்.

'இதை நீ முன்னரே சரியாகச் சொல்லி இருந்தால், ஒரு பிரமுகருக்கான உடுப்பைப் போட்டுக் கொண்டு நான் வந்திருப்பேன்' கொல்கர் என்னில் தவறு சொன்னான்.

நாங்கள் இருவரும் கதைப்பதைக் கவனித்த தமிழ்ச் செல்வன், 'என்ன ஏதும் பிரச்சினையோ?' சிரிப்போடு அவரிடம் இருந்து கேள்வி வந்தது.

தமிழ்ச் செல்வனுக்கு கொல்கரின் காற்சட்டைப் பிரச்சினையைச் சொன்னேன்.

'இது பிரச்சினை இல்லையே. இந்த வெக்கைக்கு இப்பிடி இருக்கிறதுதானே சௌகரியம்'

தமிழ்ச் செல்வனின் கூற்றை கொல்கருக்குச் சொன்னேன். சொல்லும் பொழுது எனது வார்த்தைகளையும் சேர்த்துச் சொன்னேன்.

கொல்கர் சிரிக்க ஆரம்பித்தான்.  கொல்கரின் சிரிப்பு தமிழ்ச் செல்வனுக்கும், தங்கனுக்கும் றெஜிக்கும் புரியாமல் இருந்திருக்கும்.

அவர்களுக்கு விளக்கம் சொன்னேன்.

'நீங்கள் சொன்னதோடு நானும் கொஞ்சம் சேர்த்து அவனுக்குச் சொன்னனான்'

'சிரிக்கத் தக்கதா அப்பிடி என்ன சொன்னனீங்கள்?'

'காற்சட்டையோடு வந்தது ஒண்டும் பிரச்சினை இல்லை. அதுவும் இல்லாமல் வந்திருந்தால்தான் பிரச்சினை எண்டு'

தமிழ்ச்செல்வனின் சிரித்த முகம் மேலும் சிரித்தது.

கலகலப்பாகப் பேசினோம். பேச்சு எங்கள் செயற்திட்டம் பற்றி வந்தது.

எங்களுடைய செயற்திட்டங்களையும், நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இரசாயனப் பொருட்கள் இன்று வந்து கிடைத்ததையும், நாளை யேர்மன் தொழில் நுட்பத்தில் கால் செய்யும் பணி தொடங்க இருப்பதையும் றெஜி விளக்கமாக தமிழ்செல்வனுக்குச் சொன்னார்.

'அப்பிடியே. கடைசியிலை அந்த கெமிக்கல்ஸ்ம் வந்து சேர்ந்திட்டுது. நல்லதாப் போச்சு' என்று தமிழ்செல்வன் தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார்.

நல்ல வேளை எல்லாம் வற்றாப்பளை அம்மன் அருள் என்று இவரும் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அவர் சொல்லவில்லை.

எனது மனைவியின் தம்பி மயூரன் தமிழ்செல்வனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால் அவரைப் பற்றி நிறையச் சொன்னார். எனது மனைவியைக் கூப்பிட்டுத் தனியாகக் கதைத்தார்.

உணவுக்குப் பின்னான உரையாடல், நேரத்தை அதிகம் எடுத்திருந்தது. காலையில் எங்கள் பணி இருப்பதால் விடை பெறலாம் என்று நினைத்தோம்.

புறப்படும் பொழுது, எனது மனைவி, 'எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுக்கலாமா?' என்று கேட்க, 'அட நான் அந்த விசயத்தை மறந்தே போனன். ஏற்பாடு செய்திருக்கலாம்' என்று கவலையோடு சொன்னார். 'எங்களிடம் கமரா இருக்கிறது' என்றார் எனது மனைவி.

'நல்லதாப் போச்சு. வாங்கோ போட்டோ எடுக்கலாம்' என்றார்.

புகைப்படங்கள் எடுத்து விட்டு புறப்படும் பொழுது என்னிடம் 'அக்காட்டையும் சொன்னனான். நாளையிண்டைக்கு ஒரு பெரிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறம்' என்றார்.

'இரட்டிப்பு மகிழ்ச்சி என்று சொல்லுவினம் இது அதுக்கு மேல். உங்களைச் சந்தித்தது ஒரு மகிழ்ச்சி. உங்களோடு உரையாடியது இன்னுமொரு மகிழ்ச்சி. சுவையான உணவு அது ஒருவித மகிழ்ச்சி. பெரிய சந்திப்பு எண்டு சொன்னீங்களே அது பெரும் மகிழ்ச்சி. இதெல்லாம் சேர்த்து மட்டற்ற மகிழ்ச்சி' என்றேன். மகிழ்ச்சியோடு அவரிடம் இருந்து விடை பெற்றோம்.

சு.ப.தமிழ்ச்செல்வன் பற்றி ஒரு சிறு குறிப்பு

சு.ப.தமிழ்ச்செல்வன் என்னை தனது சகோதரனாகவே கருதிப் பழகினார். சமாதானப் பேச்சுக்களுக்காக அவர் அப்பொழுது அடிக்கடி ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து போவார். அப்படி அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் பொழுதெல்லாம் மறக்காமல் தொலைபேசியில் என்னை அழைத்து நலன் விசாரிப்பார்.

சுவிஸ் நாட்டில் நடந்த அகில உலக தமிழர் புனர்வாழ்வுக் கழக இரண்டு நாள் கருத்தரங்கில் கடைசிநாள் வந்து உரையாற்றினார். அன்றுதான் அவரை நான் கடைசியாகச் சந்தித்தது.

அவரது மரணச் செய்தி வந்த பொழுது அவரது அந்த சிரித்த முகம் நினைவில் வந்து பெரும் சோகத்தை எனக்குள் தந்தது. தங்கள் பத்திரிகையில் வெளியிடுவதற்கு தமிழ் கார்டியன் அவரை வரைந்து தரும்படிக் கேட்ட பொழுது சிரிப்பு இல்லாத அவரது முகத்தை வரைந்து அனுப்பினேன்.


அடுத்த நாள் காலையில் முதல் ஆளாக வெண்புறா வேலைத்தளத்தில் கொல்கர் நின்றான் தனது உதவியாளராக என்னை நிற்கும் படி கேட்டுக் கொண்டான்.

தமிழர் புனர்வாழ்வுக்கழக இணைப்பாளர் றெஜியும் தனது அன்றாட வேலைகளைத் தள்ளி வைத்து விட்டு கொல்கரின் செயற்பாட்டை பார்வையிட காலையிலேயே வந்திருந்தார்.

அறிமுகப் படுத்தப்பட இருக்கும் யெர்மனியத் தொழிநுட்பத்திற்கான வேலைத்திட்டத்தை வீடியோ படம் பிடிகக் ஒருவர் தனது உதவியாளருடன் வந்திருந்தார்.

வெண்புறாவில் இருந்த அனைவரும் அன்று காலை ஒன்பது மணிக்கு வேலைத்தளத்திலே இருந்தார்கள். வழமையாக இரவில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்கும் ஜெனரேட்டர் அன்று பகல் நேரத்திலேயே இயக்கத் தொடங்கியது.

கொல்கர் தனது வேலையைத் தொடங்குவதற்கு முன் தான் செய்யப் போவதை விபரமாக எடுத்துக் கூறினான். எனது மனைவி அங்கே மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

தகரத்தால் செய்யப்படும் கால்களில் உள்ள குறைபாடுகளை கொல்கர் தெளிவாகச் சொன்னான். ஒரு செயற்கைக் காலைச் செய்வதற்குத் தேவையான சாதாரண ஆயுத உபகரணங்கள் வெண்புறாவில் இல்லாததைக் குறிப்பிட்டான். சுத்தியலுக்காக இரும்புத்துண்டு பாவிக்கப் படுவதையும் குறிப்பிட்டு உபகரணங்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான்.

அவனது விளக்கங்களும், ஆதங்கங்களும் முடிவடைந்ததும் சடகோபனை எல்லாவற்றையும் அவதானிக்கும் படியும், புரியாதவைகளைக் கேள்வி கேட்டு புரிந்து கொள்ளும் படியும் அறிவுறுத்தினான். முதலில் வேறொருவருக்கே செயற்கைக் கால் பொருத்துவதாக ஏற்பாடாகி இருந்தது. வேலைகளைத் தொடங்கும் பொழுது வெண்புறா பொறுப்பாளர் அன்ரனி, தனக்கு முதற்காலைப் பொருத்தும் படி கேட்டுக் கொண்டார்.

தனது வேலையை மிக மிக நிதானமாக நேரமெடுத்து கொல்கர் செய்தான். இடையிடையே ஜெனரேட்டர் நின்று போகும் பொழுதுகளில் கூட பொறுமையாக தனது வேலையிலேயே கவனத்தை வைத்திருந்தான். தேவைப்படும் பொழுதெல்லாம் சடகோபனுக்கு விளக்கமும் கொடுத்தான்.

மதிய இடைவேளைக்கு நேரம் ஒதுக்ககிக் கொண்டோம்.

மீண்டும் வேலையை ஆரம்பிக்கும் பொழுது தென்னிந்திய ஊடகவியலாளர்கள் இருவர் வந்தார்கள். கொல்கருடன் பேட்டி எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்கள். கொல்கர் தனது பேட்டிக்காக சிறிது நேரம் அவர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்தான்.

அன்று மாலை அன்றைய வேலைகள் முடிவுக்கு வந்தன. செயற்கைக் கால் காய நேரம் எடுக்கும். ஆகவே மிகுதியான வேலைகளை மறுநாள் செய்வோம் என ஒத்தி வைத்தோம்.

மறுநாள் கொல்கர், செயற்கைக் காலை ஒரு சிற்பி சிலையைச் செதுக்குவது போல் செதுக்கி எடுத்தான். அன்ரனிக்கு காலைப் பொருத்திய பொழுது அது கன கச்சிதமாகப் பொருந்தி இருந்தது.

'நீண்ட காலமாக தகரக்காலைப் பொருத்தி நடந்து பழகியதால் இந்த வகையான கால் சில அசௌகரியங்களைத் தரலாம். தகரத்தால் செய்யப்படும் கால் பாரமானது. இது இலகுவானது ஆதலால்தான் அந்தக் குறை தெரியும். தொடர்ந்து நடைக்கான பயிற்சி எடுத்தால் அது இல்லாமல் போய்விடும். புதிதாக ஒருவர் இந்தக் காலைப் பொருத்தும் பட்சத்தில் அவருக்கு இந்த எண்ணமே இருக்காது' என்று கொல்கர் அங்கே ஒரு விளக்கத்தையும் தந்தான்.

யேர்மனிய தொழில் நுட்பத்தில் செய்யப்படும் செயற்கைக் காலை வன்னியில் செய்ய முடிந்தது. எல்லோருக்கும் அது மகிழ்ச்சியைத் தந்தது. யேர்மனியில் அந்த இரசாயனப் பொருட்களை விட்டுச் செல்லாத நிலை இருந்திருந்தால் குறைந்தது பத்துப் பேருக்காவது யேர்மனிய தொழில் நுட்பத்தில் கால்கள் செய்து பொருத்தி இருக்கலாம். அதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காது போனது உள்ளூரக் கவலைதான். ஆனாலும் ஒருவருக்கேனும் அந்த வகையிலான காலைப் பொருத்தியதில் ஒரு திருப்தி இருந்தது.

எங்களது வெண்புறா நோக்கிய பயணத்தின் எண்ணம் ஈடேறியது குறித்து மனது லேசானது. சொல்லி வைத்தாற்போல் அன்று எங்களுக்கு அந்த இனிய சந்திப்பும் இருந்தது.

அன்றைய இரவு இடம்பெறும் சந்திப்பைப் பற்றியே அன்றைய நாளெல்லாம் நினைவாகப் போனது.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh  

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை