நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17

„அரசியற்துறையில் நடந்த, இரவு சந்திப்புக்கு இது உசத்தி. நீ காற்சட்டையோடை வந்திட்டு என்னிலை பழி சுமத்தாதை” கொல்கருக்கு நினைவு படுத்தினேன்.

'நீ நேற்று சொல்லும் போதே எனக்குப் புரிந்து விட்டது. இன்றைய சந்திப்பு விசேசமானது என்று” 'சந்திப்புக்கு முன்னால் சோதனைகள் இடம் பெறலாம். தேவை இல்லாத பொருட்கள் இருந்தால் இப்பொழுதே எடுத்து வைத்து விடு'

'கமரா மட்டும் தான் கொண்டு வாறன்'

மதியம் குறைவாகத்தான் உணவு எடுத்துக் கொண்டோம். நினைவுகள் மட்டும் சந்திப்பைப் பற்றி நீண்டு இருந்தது.

எங்களது சந்திப்பிற்கான ஒழுங்கு மீண்டும் ஒரு தடவை அரசியல்துறைச் செயலகத்தால் அன்று உறுதிப் படுத்தப்பட்டது. „வாகனம் வரும் காத்திருங்கள்” என்ற தகவலும் கூடவே வந்திருந்தது.

வாகனத்துக்காக நான் எனது மனைவி கொல்கர் மூவரும் காத்திருந்தோம். நான்காவதாக தமிழர் புனர்வாழ்வுக்கழக இணைப்பாளர் ரெஜியும் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார்.

வாகனமும் வந்தது. நாங்கள் நால்வரும் ஏறிக் கொண்டோம். அன்ரனி, தான் அரசியல்துறைச் செயலகத்தில் இருந்து வருபவர்களுடன் பயணிக்க இருப்பதாகச் சொன்னார்.

பள்ளங்கள், மேடுகள் என வாகனம் விழுந்து எழுந்து பயணித்தது. இப்பொழுது பயண அலுப்புகள் ஏதும் தெரியவில்லை. மனது பெரிய சந்திப்பில் நிலைத்து விட்டதால் உடல் உபாதைகள் மறந்து போயிருந்தன.நீண்ட பயணத்தின் பின் ஒரு குடிசையின் முன்னால் வாகனம் சென்று நின்றது.

இந்தக் குடிசைக்குள்தான் பெரிய சந்திப்போ? ஒருவேளை நிலத்துக்கு அடியில் ஏதாவது சந்திப்புக் கூடம் இருக்கிற தோ? அல்லது வாகனத்துக்கு எரிபொருள் போதா தோ? கேள்விகள் தோன்றிக் கொண்டே இருந்தன. சுற்று முற்றும் ஆள் நடமாட்டம் எதுவும் இருக்கவில்லை. பிறகு சந்திப்போம் என்று வாகனத்தில் வந்தவரும் விடைபெற்றுக் கொண்டு சென்று விட்டார்.

குடிசையைச் சுற்றி வந்து பார்த்தேன் எதுவித அசைவுகளும் இல்லை. ரெஜியைப் பார்த்தேன். இப்பொழுது அவர் ஒருவர்தான் அந்த இடம் எதுவென்று தெரிந்தவர். எங்களுக்கோ கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலை. ரெஜியோ எந்தவித சலனமும் இல்லாமல் நின்றார். ஒருவேளை இது பாதுகாப்பிற்கான முன்னேற்பாடோ? எதுவானாலும் என்ன! அடுத்து ஏதோ ஒன்று நிகழத்தானே போகிறது. அதுவரை காத்திருப்போம்.

அந்தக் குடிசையைச் சுற்றி இருந்த மரங்கள், செடிகளை ஆராய்ந்தேன். அவை சம்பந்தமான கேள்விகளுக்கும், மற்றும் பொதுவான விடயங்களுக்கும் ரெஜி பதில் தந்தார். மறந்தும் கூட “இது எந்த இடம்?“ என்று கேட்டு நான் அவரைச் சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை.

மாலையும், இரவும் சந்திக்கும் நேரம் நெருங்கி விட்டிருந்தது. குடிசையின் பிற்பகுதியில் நின்றோம். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. குடிசையின் பிற்பகுதியிலேயே ஒரு வாகனம் திடீரென வந்து நின்றது. வாகனத்தில் இருந்து சிரித்தபடியே மருத்துவத்துறைப் பொறுப்பாளர் ரேகா இறங்கி வந்தார். முதல் முதலாகச் சந்திக்கிறோம். ஆனால் நெருங்கிய உறவு போல் உரிமை எடுத்துப் பழகினார். ரேகாவும், மயூரனும் தோழர்கள் என்பது அவரது உரையாடலில் தெரிந்தது.

'போகலாமா?' என்று ரேகா கேட்டார்.

சந்திப்பு இங்கே இல்லையோ? மீண்டும் பயணமோ? வாகனத்தில் ஏறிக் கொண்டோம். இப்பொழுது இருட்டி விட்டிருந்தது.. வீதியில் வெளிச்சம் இல்லை. வெளியில் எல்லாமே இருட்டாக இருந்தது. வாகனத்து வெளிச்சம் மட்டும் எங்களுக்கு முன்னால் இருந்தது.

பாதுகாப்பின் நிமித்தம் இந்த ஏற்பாடாக இருக்கலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் சந்திப்பாக இருக்கலாம். நாங்கள் அந்த நேரத்திற்கு முன்னதாக வநது விட்டதால் இடையில் காத்திருக்க வேண்டிய தேவை வந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

கொல்கருக்கு என்ன நடக்கிறதென்றே புரியாமல் இருந்திருக்கும். ஆனாலும் பொறுமையாக வாகனத்தில் இருந்தான். வழி எங்கும் இருட்டு. ஒரு இடத்தில் வாகனம் நின்றது. அப்பொழுதுதான் வெளிச்சமும் தெரிந்தது.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த வெளிச்சம் தெரியாத வண்ணம் இயற்கை மறைப்புக்குள் அந்தக் கட்டிடம் இருந்தது. வாகனத்தில் இருந்து இறங்கிய பொழுதுதான் ஜெனரேட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. கட்டிடத்தின் முன்னால் ஐந்து பிரம்புக் கதிரைகள் போடப் பட்டிருந்தன. அதில் ஒன்றில் சு.ப. தமிழ்செல்வன் இருந்தார்.

“பிறகு சந்திக்கிறேன்“ நன்றியைக் கூட எதிர்பார்க்காமல் ரேகா வாகனத்தை திருப்பிக் கொண்டு போய் விட்டார்.

கதிரையில் அமர்ந்தோம். தமிழ்செல்வன் சிரிப்பாலே வரவேற்றார். இந்த இடத்தில் தான் சந்திப்பு என்பதை அங்கிருந்த சூழ்நிலை தெளிவு படுத்தியது.

நாங்கள் இருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி இருட்டான பகுதியில் வாகனம் ஒன்று வந்து நின்றது. தமிழ்செல்வன் அந்த இடத்தை உற்று நோக்குவதில் இருந்து புரிந்து போயிற்று. எங்களைச் சந்திக்க அழைத்தவர் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில்தான் நிற்கின்றார் என்று.

அந்த இருட்டிலும் காண முடிந்தது. குறைந்தது ஐந்து பேராவது அந்த இடத்தில் நிற்கிறார்கள் என்று. தொடர்ந்து அந்த இடத்தையே பார்ப்பது நாகரீகமாக இருக்காது என்பதால் பார்வையைத் திருப்பினேன். “சரி வாங்கோ போவம்” தமிழ்செல்வன் கதிரையில் இருந்து எழுந்த வண்ணம் எங்களை அழைத்தார். அவர் பின்னாலே போனோம்.

தமிழ்செல்வனைத் தொடர்ந்து எனது மனைவி உள்ளே நுழைந்தார். அவருக்கு அடுத்ததாக கொல்கர் உள்ளே சென்றான். இப்போழுது முழுமையாகத் தெரிந்தது. அறையில் இருந்த பிரகாசமான விளக்கின் வெளிச்சத்தில் முகத்தில் சிரிப்போடு பிரபாகரன் நின்றார்.

கொல்கரை நோக்கி பிரபாகரன் தனது வலது கையை நீட்டினார். கொல்கர் இருகரம் கூப்பி தமிழில் “வணக்கம்” என்றான். நீட்டிய வலது கையை வேகமாகத் திசைதிருப்பி இரு கரம் கூப்பி அவரும் சிரிப்புடன் “வணக்கம்” என்றார். பின்னர் இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

அடுத்தது நான். கொல்கர் பாணியிலேயே வணக்கம் சொல்லி கைகுலுக்கிக் கொண்டேன். 'நீங்கள்தான் அவருக்கு வணக்கம் சொல்லிக் குடுத்திருக்கிறீங்கள் போலை இருக்கு' பிரபாகரன் சிரித்தபடியே என்னைக் கேட்டார்.

எங்களை அவர்கள் முழுதாக நம்பினார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்தவித சோத னைகளும் எங்களுக்கு அங்கே இடம் பெறவில்லை. அது விருந்தினரைக் காயப்படுத்தி விடுமோ… என்ற நிலையாகக் கூட இருக்கலாம்.

ஒரு வெளிநாட்டவரைச் சந்திக்கும் முறையிலேயே பிரபாகரன் வந்திருந்தார். உள்ளே நோட்டம் விட்டேன். ரேகா, அன்ரனி உட்பட சிலர் அங்கே இருந்தனர். நீண்ட பெரிய மேசை. எல்லோரும் இருக்கையில் அமர்ந்து கொண்டோம்.

வெண்புறாவில் எங்களது செயற்பாடுகளை அன்ரனி பிரபாகரனுக்குச் சொன்னார். தனக்குப் பொருத்தப் பட்டிருக்கும் காலுடன் ஒரு நடை போட்டுக் காண்பித்தார்.

இப்பொழுது கால் லேசாக இருக்கிறது. இதைப் போட்டு நடக்கிற பொழுதுதான் தெரியுது, இவ்வளவு காலமும் இரும்பைக் கட்டிக் கொண்டு நடந்திருக்கிறன் எண்டு…' அன்ரனி சொல்வதைப் பிரபாகரன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அன்ரனியின் பேச்சு காலை விட்டு கொல்கரிடம் தாவியது. „ஆள் இப்ப எங்களிலை ஒருத்தன் மாதிரி. சாரம் கட்டுறான். கையாலை சாப்பிடுறான்“

அன்ரனியின் பேச்சை இங்கே இடை மறித்தேன். „ஒரு நிமிசம்… அவனும் எங்களைப் போலை வாயாலைதான் சாப்பிடுறான். கத்தி, கரண்டி இல்லாமல் கையைப் பாவிச்சுச் சாப்பிடுறான்“ பிரபாகரன் சிரிக்க ஆரம்பித்தார். அவர் இப்பொழுது ஒன்று புரிந்திருப்பார். வந்திருப்பவர்கள் பிரமுகர்கள் இல்லை தனது நண்பர்கள் என்று.

அன்ரனி கொல்கர் புராணத்தைத் தொடர்ந்தார். „இன்னும் கொஞ்சக்காலம் எங்களோடை இருந்தால் தமிழ் கதைக்கத் தொடங்கீடுவான்'

„பார்த்தனான். அவன் வணக்கம் சொல்லக்கை „ண' வில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் சொன்னான். நீங்களோ.. அவனுக்கு எல்லாம் சொல்லிக் குடுக்கிறிங்கள்?“ பிரபாகரன் மீண்டும் என்னைப் பார்த்துக் கேட்டார்.

„சொல்லிக் குடுக்கிறதென்று சொல்ல முடியாது. அவன் கேட்டுத் தெரிந்து கொள்கிறான் எண்டு சொல்லுறதுதான் சரியா இருக்கும்” என்றேன்.

கையில் இருந்த பத்மநாப ஐயரின் `கண்ணில் தெரியுது வானம்´ புத்தகத்தைப் பிரபாகரனிடம் கொடுத்தேன்.

„வெறும் கையோடு உங்களைச் சந்திக்க விரும்பேல்லை. அதாலைதான் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தனான். முக்கியமான எழுத்தாளர்களின்ரை கதையள் இந்தப் புத்தகத்திலை இருக்குது' என்றேன். மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார்.

உரையாடல்கள், பலதையும் தொட்டுச் சென்றன. திருதிருவென முழிக்க விடாமல் எல்லாவற்றையும் கொல்கருக்கு மொழி பெயர்த்தேன். பிரபாகரனுக்கு கொல்கரை பிடித்துப் போயிற்று.

திடீரென எழுந்து வெளியே சென்றார்.

ஏன் சென்றார் என்ற கேள்வி எனக்கு வந்தது போல் மற்றவர்களுக்கும் வந்திருக்கும்.

ஒருவேளை அவருக்கான மதிப்பைக் கொடுக்காமல் இயல்பாகக் கதைத்தது அவருக்குப் பிடிக்கவில்லை யோ? சில விநாடிகள்தான். பிரபாகரன் திரும்பி வந்தார்.

இப்பொழுது அவரது கையில் துப்பாக்கி. மனம் ´திக்` கென்றது. சந்திப்புக்கு வந்த இடத்தில் துப்பாக்கிக்கு என்ன வேலை.

பிரபாகரன் நேராக என்னை நோக்கி வந்தார். எனது கையை எடுத்து, உள்ளங்கையில் தனது துப்பாக்கியை வைத்தார்.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh   

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை