நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19

ஒரு சில நிமிடங்களில் மீண்டும் வெளிச்சத்திற்குள் நின்றோம். இடையில் விளக்குகள் அணைந்ததால் நாங்கள் பேசிக் கொண்டிருந்த விடயங்களும் விடுபட்டுப் போயின.

கதை இப்பொழுது நவம் அறிவுக் கூடத்தில் நாங்கள் கண்ட நம்பிக்கை தளராத உள்ளங்களைப் பற்றிச் சுழன்று கொண்டிருந்தது.

பிபிசி தமிழ்ச் சேவையில் விவரணம் ஒன்றின் போது உறுதியோடு பேசிய, 14 வயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த பெண்ணைச் சந்திக்க வேண்டுமென்பதில் எனது மனைவிக்கு ஆர்வம் இருந்தது. நவம் அறிவுக்கூடம் போயும் அவளைச் சந்திக்க முடியாது போய் விட்ட ஆதங்கத்தை மனைவி பிரபாகரனிடம் சொன்னார்.

„நீங்கள் சொல்லுறது செல்வாவை எண்டு நினைக்கிறன். அவ நவம் அறிவுக் கூடத்திலை இல்லை. இங்கை கிட்டத்தான் இருக்கிறா.

„அந்தப் பிள்ளையை சந்திக்க வாய்ப்பிருக் கோ?“ எனது மனைவி கேட்டவுடன்

„இப்பவே சந்திக்கலாம். பத்து நிமிசத்துக்குள்ளை ஆள் வந்திடும்“

பிரபாகரன் தனது பாதுகாவலர்களிடம் அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்.

அவர் சொன்ன படி பத்தாவது நிமிடத்தில் கையில்லாத போதும் மனவலிமையோடு வாயாலும், காலாலும் எலெக்ரோனிக் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் செல்வா தனது பெண் உதவியாளருடன் அங்கே நின்றார்.

செல்வாவுக்கு கை போட்டால் என்ன..? அது முடியுமா..? என்ற கேள்விகள் எம்முள் எழ அது பற்றி கொல்கரிடம் கேட்டோம்.

'மிகவும் சிரமமான விடயம். எலெக்ரோனிக் சம்பந்தப்பட்டது. காலைப் பொருத்துற மாதிரி ஒன்றும் இலகுவான வேலை இல்லை. நரம்புகளைக் கண்டறிஞ்சு, வயருகள் பொருத்தி, பயிற்சி எடுத்து எக்கச்சக்கமான சிக்கல் பிடிச்ச வேலை“ என்று கொல்கர் சொன்னான்.

„சிக்கலாகவே இருக்கட்டும். இரண்டு கையில்லாத பெண்ணுக்கு ஒரு கையாவது கொடுப்போம்“

„பயிற்சி எண்டிறது ஒரு நாளிலை இல்லை. கொம்பியூட்டருக்குள்ளாலை செய்யிறது. அதுக்குக் கன நாட்கள் தேவை. மற்றது அந்தப் பெண்ணுக்கும் கொம்பியூட்டர் அறிவு இருக்கோணும்'

„பயிற்சி செய்யிறதை இஞ்சை ஆருக்காவது சொல்லிக் கொடுத்தால் அவர் அதை நடைமுறைப் படுத்துவார்'

கொல்கர் என்னைப் பார்த்த பார்வையில் அவனது எரிச்சலும், கோபமும் தெரிந்தது.

„ஒரு கையின்ரை எடை குறைஞ்சது ஏழு கிலோ வரும். அதைத் தோள்பட்டையிலை பொருத்தி அந்த எடையைத் தாங்குறதே சிரமம்“

„அவர்கள் இஞ்சை எவ்வளவோ தாங்கீட்டீனம். அந்தப் பிள்ளை இதையும் தாங்கும்“

„நீ நான் சொல்லுறதை விளங்க மறுக்கிறாய். சரி விடு. ஒரு கையின்ரை விலை எவ்வளவு தெரியுமே? 35,000 யூரோவிலிருந்து 40,000 யூரோ வரும்“

„பணம் இங்கை பிரச்சனை இல்லை. நீ செய்வியோ என்பதுதான் கேள்வி“

எனது இடைவிடாத நச்சரிப்புக்குப் பின் கொல்கர் சொன்னான் „செய்யலாம். புது ரெக்னிக் வந்திருக்கும். அதை எல்லாம் நான் புதுசா படிக்கோணும். நீ வற்புறுத்துறதாலை நான் இதற்கு ஒத்துக் கொள்ளுறன்“ கொல்கர் எங்கே மறுத்து விடுவானோ என்ற பயம் எனக்குள் இருந்தது. கொல்கர் இல்லா விட்டாலும் இன்னொருவரைக் கொண்டு கை பொருத்துவதை நடைமுறைப் படுத்த முடியும். ஆனால் கொல்கர் போல் வருமா? அவன் சம்மதித்ததால் சிரமங்கள் இல்லாது போனது.

நானும் கொல்கரும் நீண்ட நேரம் உரையாடியதை பிரபாகரன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். பிரபாகரனிடம் கொல்கர் சொன்னதைச் சொன்னேன்.

„ஏழு கிலோதானே! அது பழகீடும். இதுக்கான சகல செலவுகளையும் நான் தாறன்“

„பணம் ஒரு பிரச்சனையாக இல்லை. அதை யேர்மனிப் புனர்வாழ்வுக்கழகம் பார்க்கும்“

அந்தப் பிள்ளையின் கை நரம்புகள் இன்னும் வேலை செய்கிறதா. செயற்கைக் கையை தோள்ப்பட்டையில் பொருத்த வாய்ப்பிருக்கிறதா என, தான் பார்க்க வேண்டுமென்று கொல்கர் சொன்னான். அதை பரிசோதிப்பதற்காக கொல்கரை அனுமதித்து விட்டு கூடத்துக்கு வெளியே நாங்கள் நின்றோம். கொல்கருக்கு உதவியாக செல்வாவுடன் வந்திருந்த பெண் உதவியாளரும் எனது மனைவியும் நின்றார்கள்.

„மெத்தக் கடைக்கு சின்னனிலை அடிக்கடி வாறனான். அவையள் எங்கடை நெருங்கின சொந்தக்காரர்'

கூடத்துக்கு வெளியே நிற்கும் பொழுது சிறு வயதில் தந்தையுடன் பருத்தித்துறைக்கு தான் வந்த சில விடயங்களை பிரபாகரன் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

கொல்கர் செல்வாவை பரிசோதித்து விட்டு வெளியே வந்தான். அவன் சொல்லப் போகும் வார்த்தையிலேயே எங்கள் நம்பிக்கை இருந்தது.

„செய்யலாம்“

அந்த வார்த்தை எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

இப்பொழுது அடுத்த கேள்வி „எப்பொழுது இந்த வேலையை ஆரம்பிப்பது?“

இந்த வருடத்திற்கான எனது வருடாந்த விடுமுறையில் மிகுதியாக இன்னும் ஐந்து நாட்களே இருந்தன. செல்வாவின் கை பொருத்தும் வேலை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போனால் எடுத்துக் கொண்ட வேலையில் ஈடுபாடு குறைய வாய்ப்பிருக்கிறது. எல்லாவற்றையும் யோசித்து விட்டு இந்த வருடத்துக்குள் செய்து முடிக்க வசதி இருக்கிறதா என கொல்கரைக் கேட்டேன்.

குறைந்தது ஆறுமாதங்களாவது தனக்கு வேண்டும் என்றான்

அவன் கேட்ட ஆறுமாதங்களாயின் அது நவம்பர் மாதத்தில் வருகிறது. நவம்பர் தாயகத்தில் மாவீரர்களைக் கௌரவிக்கும் மாதம். அந்த மாதம் வந்து இங்குள்ளவர்களுக்கு இடைஞ்சல்கள் கொடுக்க விரும்பவில்லை.

ஒக்ரோபர் மாதக் கடைசியில் வசதிப்படுமா என கொல்கரைக் கேட்டேன். யோசித்து விட்டு சரி என்றான். “நாங்கள் கை கொண்டு ஒக்ரோபரில் வருகிறோம்” என்று பிரபாகரனிடம் சொன்னேன்.

“நல்லது. ஒக்ரோபரிலை அவவுக்கு கை கிடைக்கிறது. சந்தோசம்” என்றார். செல்வாவுக்கும் அது மகிழ்ச்சியைத் தந்திருந்தது. நன்றியோடு அண்ணனைப் பார்த்தாள்.

இங்கு நான் ஏன் அண்ணன் என்று குறிப்பிடுகிறேன் என்றால் அங்கே அவரை அண்ணன் என்றே பாசத்துடன் அழைப்பார்கள்.

எழுபதுகளின் பிற்பகுதியில் தம்பியாக அழைக்கப்பட்டவர் இன்று அண்ணன் என்று பாசம் பொங்க அழைக்கப் படுகிறார். தம்பிக்கு வயது கொஞ்சம் ஏறி விட்டது.

அவர்களுக்கு அவர் அண்ணன். எனக்கு?

சமய குறவர்களுக்கு தந்தையாக, தோழனாக, தலைவனாக ஆண்டவன் இருந்தார் எனச் சொல்வார்கள். இங்கு ஆள்பவன் எனக்கு நண்பனாக நின்றார். அவரின் பேச்சில் என்னிடம் காட்டிய உரிமையில் அதை நான் கண்டேன். அன்று நான் எதிர்பார்த்ததை விட எல்லாம் இனிமையாக நடந்தேறின.

„'வாருங்கள் போட்டோ எடுத்துக் கொள்வோம்“ என்று பிரபாகரன் அழைத்தார்.

„எங்கள் கமராவையும் பயன்படுத்தலாமா?“ என மனைவி கேட்டார்.

„தாராளமாக“ என்று அனுமதி தந்தார்.

என் மனைவி கமராவை பிரபாகரனின் பாதுகாவலர் ஒருவரிடம் கொடுத்து படம் எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதைப் பார்த்து கொல்கரும் தனது கமராவைத் தூக்கிக் காட்ட பிரபாகரன் சிரித்துக் கொண்டே தனது இன்னுமொரு பாதுகாப்பாளரிடம் „அதை வாங்கி போட்டோ எடு” என கண்களால் ஜாடை காட்டினார்.

மூன்று கமராக்கள் ஒளித்தன. எந்தப் பக்கம் பார்ப்பது என்பது சற்று தடுமாற்றமாக இருந்தது.

„செல்வாவின் கை அளவுகள் தேவைப்படுகின்றன. மற்றும் தோள்பட்டையை plaster of paris இல் அச்சு எடுத்துக் கொண்டு சென்றால் யேர்மனியில் அந்தக் கையை வடிவமைக்கலாம்” என கொல்கர் சொன்னான். அடுத்தநாள் பத்து மணிக்கு அதற்கான நேரம் குறிப்பிடப் பட்டது.

படங்கள் எடுத்து விடை பெறும் நேரம். „அடுத்த முறை வரக்கை பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வாங்கோ“ என்று உரிமையுடன் எனது மனைவிக்கு பிரபாகரன் சொன்னார்.

விடை பெற்றோம்.

கொல்கர் விடைபெறுவதற்கு பிரபாகரனை நெருங்கிச் சென்ற பொழுது „நன்றி மீண்டும் வருக“ என பிரபாகரன் சொல்ல, பாடமாக்கி வைத்திருந்த வார்த்தைகள் மறந்து போக வெறும் „நன்றி“ மட்டும் சொல்லி கை கொடுத்து கொல்கர் விடை பெற்றான்.

வாகனத்தில் மீண்டும் வெண்புறா நோக்கிய பயணம். நேரம் நன்றாகப் போய் விட்டது. பயண அலுப்போ தூக்கமின்மையோ தெரியவில்லை. பிரபாகரனுடனான சந்திப்பையே மனது அசை போட்டது. நித்திரை கொண்டால் எல்லாம் கனவு என்ற நிலை ஆகி விடுமோ என்று ஒரு பயம். ஆகவே கண்கள் விழித்திருந்தன.

வாகனத்துக்குள் பார்த்தேன். யாரும் தூங்கவில்லை. பார்த்த விழிகள் பார்த்தபடி இருக்க அவர்களது எண்ணங்களும் எங்கேயோ போய் விட்டிருந்தன.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை