நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் – 20

மறுநாள் காலை

இன்று எந்தவிதமான வேலைகளும் இல்லை. எடுத்து வந்த வேலை சிறப்பாக முடிந்ததில் மனது நிம்மதியாக இருந்தது.

நவீனமுறையிலான யேர்மன் தொழில்நுட்பத்தில் செயற்கைக் கால் செய்வதற்கான பயிற்சியை பெறுவதற்கு ஒருவரை அதுவும் யேர்மன் மொழி தெரிந்தவரை கொல்கரிடம் சேர்க்க வேண்டும். அப்படி ஒருவரைக் கண்டு பிடித்து விட்டால் வெண்புறா நிறுவனத்திற்கான எனது வேலைத்திட்டம் நிறைவடைந்து விடும். அதன் பின்னர் நான் எனது மற்றைய பணிகளைத் தொடங்கலாம். அதே நேரம் ஒக்ரோபரில் செல்வாவிற்கு கை பொருத்தும் வேலை இருக்கிறது. அதற்கான பணம்?

தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக்கிளையில் போதுமாமானளவு பணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். தமிழர் புனர்வாழ்வுக்கழக யேர்மனிக் கிளையின் வங்கிக்கணக்குக்கு நிலையாக வந்து கொண்டிருக்கும் பணத்துக்கு வழமையான வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. இப்பொழுது செல்வாவிற்கு கை போடுவதற்கு பணத்துக்கு என்ன வழி? இந்தக் கை போடும் வேலையைப் பற்றி யேர்மனியில் அறிவிக்கும் பொழுது அங்கே என்ன மாதிரியான விளைவுகள் இருக்கப் போகின்றன.

சிந்தனையில் இருந்த என்னை வெண்புறா வாசலில் வந்து நின்ற வாகனம் கவனிக்க வைத்தது.

வாகனத்தில் இருந்து இறங்கி இருவர் வந்தார்கள். ஒருவர் இரு அஞ்சல் உறைகளைத் தந்தார். ஒன்றை உடைத்துப் பார்த்தேன். நேற்றிரவு பிரபாகரனுடனான சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்கள் வர்ணத்தில் இருந்தன. மற்றைய உறை கொல்கருக்கு உரியது என்றார்கள்.

வன்னியில் எல்லா வேலைகளும் துரிதகதியில் நேர்த்தியாக நடந்து கொண்டிருந்ததைப் பார்க்கும் பொழுது மகிழ்வாக இருந்தது.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அரசியல்துறைச் செயலகத்தில் இருந்து ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். தனியாக என்னுடன் கதைக்க வேண்டும் என்றார்.

'சொல்லுங்கள்' என்றேன்.

'அண்ணனின் பாதுகாப்பு விடயமாக தீபன் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். இது ஒரு பாதுகாப்பு நிமித்தமான செயற்பாடு. அது நீங்கள் விரும்பினால் மட்டும் தான். உங்களிடம் சொல்லி உங்கள் பதிலை அரசியல்துறைப் பொறுப்பாளர் வாங்கிவரச் சொன்னார்' என்று வந்தவர் சொன்னார்.

'வரச்சொல்லுங்கள் அவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சியே என்றேன்' அரசியல்துறையில் இருந்து வந்தவர் நன்றி சொல்லி விட்டுப் புறப்பட்டார்.

சிறிது நேரம் போயிருக்கும். „தீபன் உங்களுக்காக வெண்புறா வரவேற்பறையில் காத்திருக்கிறார்” எனத் தகவல் வந்தது.

வரவேற்பறையில் தீபன் மடிப்புக்கலையாத இராணுவச்சீருடையில் நின்றார். அறிமுகம் செய்து கொண்டார். 'இராணுவச்சீருடையில் இங்கே வருவதற்கு தடை. ஆனால் எனக்கு நேரம் மட்டு மட்டு. அன்ரனி கண்டால் கத்துவார்'

'அன்ரனி நாளை காலையில்தான் வருவார். நேற்று இரவே தன் குடும்பத்தைக் காண முல்லைத் தீவுக்குச் சென்று விட்டார்' என்றேன்.

'அரசியல்துறை நான் உங்களைச் சந்திக்க வருவதை அறிவித்ததுதானே?'

'அறிவித்தது. ஆனால் விளக்கமாகச் சொல்லவில்லை'

'அண்ணன் பாதுகாப்பு சம்பந்தமானது. அவருடைய பாதுகாப்பாளர் ஒருவரது விபரம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அது விடயமாகத்தான்... ஏனென்றால் அண்ணனின்ரை பாதுகாப்பிலை ஒரு சின்ன விசயமும் வெளியிலை தெரியக் கூடாது. அதுதான்...'

தீபன் சொல்லும் பொழுதே, எனது அதிகப்பிரசங்கித்தனமும், அவசரக்குடுக்கைத்தனமும் புரிந்து போனது. தீபன் சில கேள்விகளைக் கேட்டார். பதில் சொன்னேன்.

சந்திப்பு திருப்திகரமானதாக இருந்தது என்று நன்றி சொல்லி விட்டு தீபன் விடைபெற்றார். அவர் போனதன் பின்னரே அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்திருக்கலாமே என்ற நினைப்பு வந்தது.

நான் அங்கிருந்த பொழுதுகளில் பலர் என்னை வந்து சந்தித்தார்கள். எங்களுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்பதற்காக அநேகமாக அவர்கள் மாலைப்பொழுது விடைபெறும் நேரங்களிலேதான் வருவார்கள். அப்படிச் சந்தித்தவர்களில் புலித்தேவனும் ஒருவர். அவரைக் கூட எனது கமரா பதிந்து வைக்கவில்லை என்ற கவலை எனக்கிருந்தது.

பத்து மணிக்குத்தான் செல்வா வருவதாக இருந்தது. ஆனால் பத்து மணிக்கு சற்று முன்னரே ரேகாவின் வாகனம் வந்தது. செல்வாவும், அவளுக்குத் துணையாக இன்சுடரும் அந்த வாகனத்தில் இருந்தார்கள்.

யேர்மனியர்கள் நேரத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று எனக்குத் தெரியும். வன்னியில் நேரத்தை மட்டுமல்ல சொல்வதையும் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள், காக்கிறார்கள் என்பதை நேரிலேயே கண்டேன். இதை கொல்கரும் எனக்குப் பல தடவைகள் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தான்.

நேற்று இரவு எங்களுக்குப் பரிமாறப் பட்ட உணவின் ருசி என் மனைவியைக் கவர்ந்திழுக்க அதை எப்படிச் செய்வது? யார் செய்தது? என்று பிரபாகரனைக் கேட்டிருந்தார். பலன் இன்று கிடைத்தது.

அந்த உணவை எப்படித் தயாரிப்பது என்று எனது மனைவிக்கு செய்து காண்பிக்க, அதைத் தயாரித்த புகழோவியனையும், நிமலனையும் பிரபாகரன் அனுப்பி வைத்திருந்தார். அவர்கள் இருவரும் அரசியல்துறை அலுவலகத்துக்குச் சொந்தமான சமையலறையில் காத்திருப்பதாக ரேகா எனது மனைவியிடம் சொன்னார்.

செல்வாவின் தோள் பட்டையுடன் சேர்த்து அச்சு எடுக்க வேண்டி இருப்பதால் எனது மனைவியும் கொல்கருக்கான மொழி பெயர்ப்பில் இருப்பது நல்லதாகப் பட்டது. அன்றைய பகல் நேரம் அதற்கு முற்றாகத் தேவை என கொல்கர் கூறியதால், புகழோவியனையும் நிமலனையும் இரவு சந்திப்பதாக எனது மனைவி சொன்னார்.

அன்று இரவுவரை அவர்கள் காத்திருந்து உணவு தயாரிக்கும் முறையை காண்பித்தது மட்டுமல்லாமல் செய்முறையை எழுதியும் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

செல்வாவின் கை அளவு எடுக்க வேண்டி இருந்ததால் இரணைமடுவுக்குப் போவது அடுத்த நாளுக்குத் தள்ளிப் போயிருந்தது.

மறுநாள் ரெஜியுடன் சேர்ந்து இரணைமடுக்குளத்துக்குப் போனோம். அமைதியான, இதமான காலநிலையுடன் அந்த இடம் இருந்தது.

கொல்கருக்கு அந்த இடம் மிகமிகப் பிடித்துப் போயிற்று. „இப்படியான ஒரு இடத்திலேயே வாழ விரும்புகிறேன்” என்று தனது ஆசையை அவன் வெளியே சொன்னான்.

மரங்களைச் சுற்றி வட்டம் வட்டமாக கட்டப்பட்டிருந்த இடங்கள் அமர்வதற்கு ஏற்றவையாக இருந்தன. நீண்ட நேரமாக மரநிழல்களின் கீழ் இருந்து உரையாடினோம். இடையில் நானும் ரெஜியும் கிளிநொச்சிக்குப் போய் இளநீரும், பாலைப்பழமும் வாங்கி வந்தோம். அன்று ரெஜியுடன் நீண்ட நேரங்களைச் செலவழிக்க முடிந்தது.

எங்களை அடிக்கடி சந்திக்க வரும் நண்பர்களிடம் நாங்கள் ஏற்கெனவே விடை பெற்று விட்டோம். மிகுதியான இரு நாட்களையும் வெண்புறாவில் உள்ள உறவுகளோடு செலவழிப்பது என்று முடிவு செய்திருந்தோம். மாலையில் எல்லோரும் கூடிக் கதைத்து மகிழ்ந்திருந்தோம். முதல்நாள் பயணக்களைப்பு இப்போது மெதுவாக வெளிவரத் தொடங்கியிருந்தது. வழமையை விட நித்திரைக்கு நேரத்துக்குச் சென்றோம்.

ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை வெளியே இருந்து வந்த சத்தங்கள் விழிப்புக்குக் கொண்டு வந்தன. படுக்கையில் இருந்த படியே அவதானித்தேன். ஜெனரேட்டர் இயங்கும் சத்தம் கேட்டது. நாங்கள் நித்திரைக்குப் போகும் பொழுது நிறுத்தப் பட்டிருந்த ஜெனரேட்டர் எதற்கு இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது.

அன்ரனி அங்கே இல்லாததால் அவரவர் தங்கள் விருப்பத்துக்கு நடந்து கொள்கிறார்களோ? கேள்விகளுடன் இருந்த பொழுதே கதவு தட்டப்பட்டது. ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்று உறுதியாயிற்று.

எழுந்து கதவைத் திறந்தேன். கதவைத் தட்டியது சுந்தரம். எதுவுமே அவர் சொல்லவில்லை. வெண்புறா முற்றத்தில் வெளிச்சம் பரவியிருந்தது. கூட்டமாக நான்கு பேர் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அந்த நால்வரில் ஒருவனாக கொல்கர் நின்றான்.

இரவு வணக்கம் சொல்லி படுக்கைக்குப் போனவன் எதற்காக அங்கே நிற்கிறான்? மனதுள் கேள்வி மேல் கேள்வி.

கொல்கர் நின்ற இடத்தை நெருங்கினேன். அவனது கையில் வீடியோ கமரா. வட்டமாகச் சுற்றி வந்து நிலத்தில் இருந்த எதையோ படம் பிடித்துக் கொண்டிருந்தான். என்னவாக இருக்கும்? நெருங்கிப் போய் நின்றேன்.

தங்களுக்கு நடக்கப் போவதை அறியாமல் நாக்கை அடிக்கடி நீட்டுவதும், உள்ளிழுப்பதுமாக வேட்டைக்காரன் கட்டுக்குள் இரண்டு உடும்புகள் தரையில் கிடந்தன.

'முழுநாள் வேட்டை. கொஞ்ச நேரத்துக்கு முதல்தான் பூநகிரியிலை பிடிச்சனாங்கள். பிடிச்ச உடனை அங்கை அறிவிச்சனாங்கள்' உடும்புகளை வேட்டையாடிக் கொண்டு வந்த இருவரில் ஒருவர் வேட்டையின் வெற்றியைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

'யேர்மன்காரனுக்குக் கொண்டு போய்க் காட்டச்சொல்லி அண்ணன் சொன்னவர்'

கொல்கருக்கு அவர்கள் சொல்வதை மொழிபெயர்த்தேன். அண்ணனுக்கு தனது நன்றியைச் சொல்லும் படி கொல்கர் அவர்களைக் கேட்டுக் கொண்டான்.

கொல்கரின் முகத்தில் பிரகாசம். அவன் விருப்பம் ஒன்று பிரபாகரனிடம் கேட்டு 24மணி நேரத்துக்குள் நிறைவேறுகிறது. அந்தக் காலகட்டத்தில் உடும்பு பிடிக்க வாய்ப்பில்லை என்று அங்கே எல்லோரும் சொல்லியிருந்த போதிலும் விருந்தினரின் விருப்பத்தை அவர்கள் ஈடேற்றி இருக்கிறார்கள். அவர்கள் மேலான மதிப்பு அவனிடம் மேலும் உயர்ந்தது.

'நாளைக்கு உடும்புக்கறி சாப்பிட யேர்மன்காரனைத் தயார இருக்கச் சொல்லுங்கோ' சொல்லியபடியே இரண்டு உடும்புகளையும் சாக்குக்குள் போட்டுக் கொண்டார்கள். விடைபெறும் பொழுது அவர்களுக்கும் தனது நன்றியை மனப்பூர்வமாக கொல்கர் தெரிவித்துக் கொண்டான்.


- (தொடர்ச்சி)

- மூனா  

Quelle - Ponguthamizh   

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை