நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21

உடும்பைப் பற்றிய நினைவுகளோடு இனி கொல்கர் நித்திரை கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தது.

நான் நினைத்தது போலவே அவனது நிலைமை இருந்தது. நேற்றைய மிகுதி இரவில் தான் எடுத்த வீடியோவை திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்ததாக அடுத்தநாள் காலையில் அவன் சொன்னான்.

"இரண்டு உடும்புகள்தானே கிடைத்தது. அதை எப்படி இங்கை இருக்கிற 32 பேரும் சாப்பிடப் போறம்?"

கொல்கரின் சந்தேகத்துக்கு விடை அரசியல்துறையில் இருந்து வந்தது. அன்று இரவு எங்களுக்கான உணவு கண்காணிப்பு அலுவலகருடன் இடம்பெறும் என்பதே அந்த அறிவிப்பு.

கொல்கருக்கு நினைவூட்டினேன். „இரவு உணவுக்கு கட்டைக் காற்சட்டையுடன் வந்து என்னைக் குறை சொல்லாதே“ என்று. சிரித்துக் கொண்டான்.

இரவு உணவுக்காக கண்காணிப்பு அலுவலகர் தங்கியிருந்த ஹொட்டேலுக்குப் போனோம். கட்டிடத்தின் உள்ளே எல்லாமே சிறப்பாக இருந்தன. ஐரோப்பியாவில் நான் பார்த்த ஹொட்டேல்களுக்கு இணையாக காணும் இடமெல்லாம் அழகாக இருந்தன. மாடிப்படிகளில் ஏறும் பொழுது பெரிய படத்தில் இருந்த பிரபாகரன் எங்களை வரவேற்பது போல் இருந்தது. "வன்னியில் இப்படி ஒரு ஹொட்டேலை தான் எதிர்பார்க்கவில்லை" என கொல்கர் சொன்னான்.

உள்ளிருக்கும் பொழுது யேர்மனியில் ஏதோ ஒரு ஐந்து நட்சத்திர ஹொட்டேலில் இருப்பதான பிரமையே வந்து போனது. நாங்கள் செய்த சேவைக்கு மேலாக இவர்கள் எங்களை உபசரிக்கிறார்கள் என கொல்கர் சொன்னான்.

இரவு உணவுக்கான நேரம். இருக்கைகளில் அமர்ந்தோம். உடும்பு இறைச்சி என்று இனம் காண முடியாதவாறு உணவைத் தயாரித்திருந்தார்கள். எலும்புகளை நீக்கி இறைச்சியைக் கட்லட் போல் தயாரித்துப் பரிமாறினார்கள். கொல்கர் ரசித்துச் சாப்பிட்டான். கண்காணிப்புக் குழுவின் பொறுப்பாளரும் எங்களுடனேயே இரவு உணவை மேற்கொண்டார்.

எங்களது சேவைகளைப் பற்றி அவர் விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். தொடர்ந்து உங்கள் சேவையைச் செய்யுங்கள் என்று சொல்லி அது வெற்றி பெற வாழ்த்தும் தந்தார்.

கொல்கரின் வாறான் உண்ணும் ஆசை ஒருவாறு அன்று தீர்த்து வைக்கப்பட்டது. இன்னும் ஒரு நாள்தான் இருந்தது. நாளை மறுநாள் வன்னியை விட்டுப் புறப்படப் போகிறோம் என்று நினைத்த பொழுது மனது பாரமாகிப் போனது. சில வாரங்களாக இயற்கைக்குள் இருந்து விட்டு மீண்டும் இயந்திர வாழ்வுக்குள் கலந்து விடப் போகிறோமே என்ற கவலையும் கூடவே வந்து சேர்ந்தது.

நாங்கள் இரவு உணவை முடித்து விட்டு வெண்புறா சென்ற பொழுது அன்ரனி முல்லைத்தீவில் இருந்து திரும்பி இருந்தார். அவருடன் சிறிது உரையாடினோம். நவீன முறையில் யேர்மனியத் தொழில்நுட்பத்தில் செயற்கைக்கால் பொருத்தும் செயற்திட்டத்தில் அவருக்கு மிகத்திருப்தியாக இருந்தது.

மறுநாள் வெண்புறாவின் பிற்பகுதியில் கொஞ்சம் ஆரவாரமாக இருந்தது. என்ன என்று பார்க்கப் போன என்னைப் போக வேண்டாமென சுந்தரம் தடுத்து நிறுத்தினார்.

„ஏன்?“ என்று கேட்டேன். „மாடு அடிக்கினம்” என்று சுந்தரத்திடம் இருந்து பதில் வந்தது.

ஏன், எதுக்கு என்று கேட்க எனக்குத் தோன்றவில்லை. சுந்தரமே அதையும் சொன்னான்.

„உங்களுக்காகத்தான்“

“எங்களுக்காகவோ? எதுக்கு?“

“யேர்மனிக்குக் கொண்டு போறதுக்குத்தான்“

“யேர்மனியிலை போதுமான அளவு இறைச்சி இருக்கே“

„இது வத்தல் போடுறதுக்கு. கனகாலம் வைச்சிருந்து பாவிக்கலாம்“

நேற்று இரண்டு உடும்புகள் இறந்து போயின. இன்று ஒரு மாடு.

எங்களுக்கு ஏதாவது தருவதற்கு அவர்கள் விரும்பி இருக்கிறார்கள். அவர்கள் மகிழ்வோடு தருவதை வாங்கிக் கொள்வதுதானே மரியாதை.

அன்று தமிழ்செல்வனைச் சந்தித்தேன்.

“நாளைக்குக் காலைமை RED GROSS வாகனம் வரும்” என்று நினைவூட்டினார்.

வன்னியில் நாங்கள் தங்கியிருந்த காலங்களில் எங்களுக்கு செய்த உதவிகளுக்கு அவரிடம் நன்றி தெரிவித்து விடை பெற்றுக் கொண்டேன். தமிழ்செல்வனிடம் இருந்து வெண்புறாவிற்கு வரும் வழியில் லோரன்ஸ் திலகரையும் சந்தித்துக் கதைத்து விட்டு அவரிடமும் விடை பெற்றுக் கொண்டேன். மாலையில் ரெஜி வந்தார். முற்றத்தில் கதிரைகளை வட்டமாக அடுக்கி எல்லோரும் அமர்ந்து கொண்டோம். சில நாட்களானாலும் ஒரு குடும்பமாகவே பழகி இருந்தோம். பிரியப் போகிறோம் என்ற நிலையே எல்லோருக்கும் கவலையைத் தந்தது. ஆனாலும் ஆளாளுக்கு சிரித்துக் கொண்டே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

நாங்கள் எடுத்து வந்த சேவையின் நன்மையை ரெஜி பாராட்டிச் சொன்னார். ஒரு சகோதரன் போலப் பழகிய கொல்கருக்கு நன்றி சொல்லி கொல்கரின் சேவைக்காக தமிழர் புனர்வாழ்வுக் கழக முத்திரை பதித்த தங்கப்பதக்கத்தை அணிவித்துக் கௌரவித்தார். கொல்கர் எல்லோருக்கும் „நன்றி” சொன்னான். ஜெனரேட்டர் அன்று இரவு 10மணிக்கு மேலேயும் இயங்கிக் கொண்டிருந்தது. பொழுது விடிந்து விடும் எனும் நிலைமை வருகையிலே நித்திரைக்குப் போனோம்.

காலையில் கண்ணனின் பால்தேநீர். இனி நாளையிலிருந்து அந்த சுத்தமான பாலுடன் கூடிய தேநீர் அதுவும் கண்ணனின் அன்போடு கிடைக்க வாய்ப்பில்லை.

வழமையாக தான் அமரும் மரத்தின் நிழலில் கொல்கர் சிறிது நேரம் அமர்ந்து கொண்டான். மெதுமெதுவாக பயணத்துக்கு ஆயத்தமானோம். பொதிகள் எல்லாம் வெண்புறாவின் வரவேற்பறைக்கு வந்து விட்டன. வெண்புறாவில் இருந்த அத்தனை பேரும் குழுமியிருந்தனர்.

சொன்ன நேரத்துக்கு வாகனம் வந்தது. ஒவ்வொருத்தராக சந்தித்து விடைபெற்றுக் கொண்டோம். மீண்டும் ஒக்ரோபரில் வருவோம் என்று நம்பிக்கை கொடுத்து விட்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். கொழும்பில் தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டை மேம்படுத்துவதற்காகவும், தமிழர் புனர்வாழ்வுக் கழக அனைத்துலக செயற்பாட்டாளர் டொக்டர் மகேஸ்வரனைச் சந்திப்பதற்காகவும் ரெஜியும் எங்களுடைய கொழும்புப் பயணத்தில் இணைந்து கொண்டார்.

தமிழீழச் சோதனைச்சாவடியை தாண்டி சிறீலங்கா சோதனைச்சாவடியில் வாகனம் நின்றது. நாங்கள் வாகனத்துக்குள்ளேயே இருந்தோம். வாகனச்சாரதி சில படிவங்களை சோதனைச்சாவடி அலுவலகரிடம் காண்பித்து அனுமதி பெற்று வந்தார். பயணம் தொடர்ந்தது.

மதிய உணவை வவுனியா விருந்தினர் விடுதியில் எடுத்துக் கொண்டோம். உணவருந்தும் பொழுது வேண்டுமானால் பியர் எடுத்துக் கொள் என்று கொல்கரிடம் சொன்னேன். நாங்கள் வருவதை உனது சசோதரனுக்கு அறிவித்து விட்டாய்தானே. அவர் எனக்காக காத்துக் கொண்டிருப்பார். இப்பொழுது தேவை இல்லை என்றான்.

வழியில் தெருவோரங்களில் விற்பனைக்கு இருந்த விளாம்பழங்களை வாங்கிக் கொண்டோம். விளாம்பழத்தின் தடித்த ஓடு கொல்கருக்கு வியப்பைக் கொடுத்தது.  "இதுவும் ஒருவகை அப்பிள்தான். மரத்தால் தோல் செய்து மூடி இருக்கிறோம்" என்றேன். ஒன்றை உடைத்துச் சாப்பிடக் கொடுத்தேன். சிறிதளவை கையால் எடுத்து சுவைத்து விட்டு திருப்பித் தந்து விட்டான்.

யேர்மனியில் இருந்து வந்த பொழுது கொழும்பில் நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீடு இம்முறை கிடைக்கவில்லை. ஹொட்டேலில் அறை எடுத்துக் கொண்டோம்.

ரெஜி எங்கள் மூவரிடமும் விடை பெற்றுக் கொண்டார். இன்னும் சில தினங்களில் டொக்டர்.மகேஸ்வரன் யேர்மனிக்கு வர இருப்பதாகத் தகவல் தந்தார். கொழும்பில் தமிழர் புனர்வாழ்வுக்கழக சேவை சரியாக இயங்கத் தொடங்கிய பின் தான் யேர்மனிக்கு வருவதாகச் சொன்னார். அவருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்து விடைபெற்றுக் கொண்டோம்.

நீண்ட நாட்கள் பியர் இல்லாமல் விரதம் இருந்த கொல்கருக்கு அன்று தீர்த்தத் திருவிழா.

அடுத்தநாள் அண்ணன் குடும்பத்துடன் இணைந்து ஒரு சிறிய சுற்றுலா சென்றோம்.

பேருவளை என்ற இடத்திற்கே யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவார்கள். அவர்களுக்குச் சொந்தமான உணவகங்கள், விடுதிகள் அங்கே இருக்கின்றன. கொல்கரை அங்கே அழைத்துப் போனோம். கடலில் நீச்சலடித்தான். காணும் யேர்மனியருடன் அரட்டை அடித்தான். மொத்தத்தில் மகிழ்ச்சியாக இருந்தான்.

அதன் பின்னர் கண்டி, நுவரெலியா எனக் காண்பித்து தேயிலை தயாரிக்கும் முறையையும் காண்பித்தோம். தலதா மாளிகையில் அமைதியான புத்தரில் லயித்திருந்தான்.

கொழும்பு திரும்பினோம். அடுத்த நாள் பயணம். ஆனந்தண்ணையிடம் எங்கள் வருகையை உறுதி செய்தேன்.

“நீங்கள் வாற அண்டு தமிழர் புனர்வாழ்வுக் கழக பொறுப்பாளர்களுடன் கூட்டம் ஒண்டு ஒழுங்கு செய்திருக்கிறன். டொக்டர் மகேஸ்வரனும் வாறார். யேர்மன் TRO தொண்டர்களுக்கும் அழைப்பு குடுத்திருக்கிறன்” என்றார்.

பயணத்துக்கு முதல், தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டோம். டுசுல்டோர்ப் விமான நிலையத்தில் ஆனந்தண்ணை எங்களுக்காகக் காத்து நின்றார்.

- (தொடர்ச்சி)

- மூனா  

Quelle - Ponguthamizh   

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை