நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22

போகும் பொழுது டுசுல்டோர்ப் விமான நிலையத்தில் இருந்த சங்கடங்கள் வரும் பொழுது இல்லை. ஆனந்தண்ணையும் நலமாக இருந்தார்.

தமிழர் புனர் வாழ்வுக் கழக யேர்மன் கிளை அமைந்திருந்த வூப்பெற்றால் நிலைய மண்டபத்திலேயே கூட்டத்திற்கான ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. கொல்கரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு கூட்டத்திற்குப் புறப்பட்டோம்.

பயணிக்கும் பொழுதே வன்னியில் எங்களது வெண்புறா திட்டத்தின் முழு விபரங்களையும் ஆனந்தண்ணைக்கு விபரமாகச் சொல்லிக் கொண்டேன். கூடவே செல்வாவிற்கு இலத்திரன் கை பொருத்துவது பற்றியும் சொன்னேன்.

„அதிகச் செலவாகுமா?' என்று கேட்டார்.

„முப்பதில் இருந்து நாற்பது ஆயிரம் யூரோக்கள் வரலாம்'

„அவ்வளவா?'

எங்கே இன்னும் ஒரு தடவை கீழே விழுந்து துடிக்கப் போகிறாரோ என்றொரு பயம் வந்து போனது.

“வங்கியிலை அவ்வளவு பணம் இல்லையே“ அவரது வார்த்தை முடிவு ஆலாபனை பாடியது.

„ஆறு மாதங்கள் இருக்கு. அதுக்குள்ளை முழுப் பலத்தோடையும் நம்பிக்கையோடையும் செயற்படுவோம். சரி வரும்“

„இந்தச் செயற்பாட்டை இண்டையான் கூட்டத்திலை அறிவியுங்கோ',  „வெண்புறா செயற்பாடு பற்றி சொல்லக்கை நீங்களே சொல்லி விடுங்கோ' ஆனந்தண்ணை பிரச்சனையை என்னிடமே விட்டு விட்டார்.

வூப்பெற்றால் சென்றடையும் பொழுது கூட்டம் ஆரம்பிக்க வேண்டிய நேரம் போய் விட்டிருந்தது. மண்டபத்தில் இருந்த அத்தனை பேருக்கும் எரிச்சல் அதிகமாக இருந்திருக்கும்.

ஐரோப்பிய நாடுகளுக்கான தமிழர் புனர்வாழ்வுக் கழக அமைப்பாளர்களுடன் சர்வதேச தமிழர் புனர்வாழ்வுக் கழக இணைப்பாளர் டொக்டர் மகேஸ்வரனும் அங்கே இருந்தார்.

ஒவ்வொரு நாட்டுக்கான அமைப்பாளர்களும் தாங்கள் எடுத்துச் செய்யும் புனர்வாழ்வுச் செயற்திட்டங்கள் பற்றி அங்கே விளக்கம் அளித்தார்கள். யேர்மனி சார்பாக நான் பேச வேண்டி இருந்தது. எங்கள் செயற்திட்டம் தற்பொழுதுதான் நாட்டிற்குச் சென்று சூடாக விமானம் ஏறி வந்து இறங்கியிருந்தது. ஆகவே சொல்வதற்கு ஏராளம் என்னிடம் இருந்தன.

வெண்புறா நிலையத்தில் பார்த்தவைகள், சேகரித்த தகவல்கள், யேர்மன் தொழில் நுட்பத்தில் வெண்புறாவில் அறிமுகம் செய்து வைத்த வேலைத் திட்டம் என்று எல்லாவற்றையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னேன். நான் பார்த்து வந்த இனிய வாழ்வு இல்லம், நவம் அறிவுக் கூடம், பெண்கள் புனர்வாழ்வு அபிவிருத்தி நிலையம், குருகுலம் என எல்லாவற்றையும் புள்ளி விபரங்களுடனும், அவர்களது தேவைகள் எதிர்பார்ப்பகள் பற்றியும் எடுத்துச் சொன்னேன்.v „நீங்கள் எடுத்து வந்த செயற்திட்டம் அளப்பரியது. இந்தத் திட்டத்திற்கு உழைத்த அனைத்து TRO தொண்டர்களுக்கும், நிர்வாகத்துக்கும் எனது வாழ்த்தையும், நன்றியையும் உங்கள் மூலமாகத் தெரிவிக்கிறேன்'“ என்று பிரபாகரன் சொன்ன செய்தியையும் எனது பேச்சில் குறிப்பிட்டேன்.

பிரபாகரன் என்ற சொல்லே ஒரு ரொனிக் மாதிரி. அவருடை வாழ்த்துச் செய்தியும் சேர்ந்து வந்தால் எப்படி இருக்கும் என்று அன்றைய கூட்டத்தில் தெரிந்தது. தொண்டர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

அடுத்து செல்வாவின் இலத்திரன் கை பற்றிச் சொன்னேன். அதைச் செய்வதற்கான முழு ஒத்துழைப்பும் தங்களிடம் இருந்து கிடைக்கும் என்று அனைவரும் உடன்பட்டுச் சொன்னார்கள்.

கூட்டத்தில் பேசி முடிந்ததன் பின்னர் அவதானித்தேன், டொக்டர் என்.எஸ்.மூர்த்தி அவர்களின் சிந்தனை எங்கேயோ சிதறிப் போயிருந்தது. அவரது அந்தச் சிந்தனை பின்னாளில் எங்களது செயற்பாட்டில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப் போவது அப்பொழுது எனக்குத் தெரியாமல் போயிற்று.

விடுமுறை முடிந்து விட்டது. வாழ்க்கையை பழைய நிலைமை நோக்கி திருப்ப வேண்டிய கட்டாயம். தாயகத்தின் நினைவுகள் என்னோடு இருந்தாலும் எனது அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டு வார இறுதிநாட்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகச் செயற்பாடுகளைக் கவனித்துக் கொண்டேன்.

தாயகத்தில் இருந்த புனர்வாழ்வு இல்லங்களைப் பற்றி நான் வூப்பெற்றால் கூட்டத்தில் குறிப்பிட்டதை குறிப்பெடுத்து வைத்திருந்த சங்கர், ஒருநாள் என்னை தொலைபேசியில் அழைத்து அந்த இல்லங்களைப் பற்றி மேலதிக விபரங்களைக் கேட்டார்.

முதலில் சங்கரைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்.

„அடித்த பாம்பை எரிக்காமல் விட்டால் அது காத்துக்கு உயிர்த்து விடும்' என்று ஊரில் அப்பொழுது சொல்லிக் கொள்வார்கள். அது உண்மைதானா என்ற ஆராய்ச்சியில் எல்லாம் நான் ஈடுபட்டதில்லை. சங்கரைக் காணும் பொழுதெல்லாம் அடித்துப் போட்ட பாம்பும், வீசும் காற்றும் என் நினைவுக்கு வரும். இந்திய இராணுவம் எங்கள் மண்ணில் நிலை கொண்டிருந்த நேரம், தங்களுக்கு ஏதாவது இழப்புகள் நேர்ந்தால் கண்ணில் காணும் இளைஞர்களைப் பிடித்து துவம்சம் செய்து விடுவார்கள். ஒரு நாள் பருத்தித்துறைக் கடற்கரையில் இந்திய இராணுவத்தால் துவம்சம் செய்யப் பட்டு இறந்து விட்டான் என்று போடப் பட்டவன்தான் சங்கர்.

ஆனால் உயிர்த்து விட்டான். கடற்கரைக் காற்றுப் பட்டதால்தான் அந்த உயிர் வந்ததா? என சங்கரைக் காணும் பொழுதுகளில் நான் கேட்பதுண்டு.

உயிர்த்து விட்ட சங்கர் யேர்மனிக்கு இடம் பெயர்ந்து வந்து விட்டான். வயதில் சிறுவனாக இருந்த சங்கரை ஸ்வெற்றா நகரத்தில் இருக்கும் றாடமாகர் குடும்பம் தங்கள் மகனாகப் பொறுப்பேற்றுக் கொண்டது.

இப்பொழுது யேர்மனியில் தனது வேலை நேரம் போக, கிடைக்கும் மிகுதி நேரங்களில் எல்லாம் யேர்மனிய தமிழர் புனர் வாழ்வுக் கழக கணக்காளராக சேவை செய்து கொண்டிருக்கின்றான்.

இயற்கையிலேயே உதவும் குணமுடைய றாடமாகர் குடும்பம், ஆபிரிக்க நாட்டில் இருக்கும் செரோலியன் என்ற நகரத்து மேம்பாட்டுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். அதற்காக செரோலியன் என்ற அமைப்பை யேர்மனியில் நிர்வகித்தே செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

சங்கர் எங்கள் மண்ணில் இருக்கும் புனர்வாழ்வு இல்லங்களைப் பற்றி அவர்களிடம் தெரிவிக்க, பார்வையற்றவர்களுக்கும், செவிப்புலனற்றவர்களுக்கும் உதவ அவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அதற்காகத்தான் இப்பொழுது சங்கர் அந்த இல்லங்களைப் பற்றிய முழு விபரங்களையும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

இனியவாழ்வு இல்லம் மற்றும் நவம் அறிவுக் கூடத்திற்கான சில பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்கும், இனியவாழ்வு இல்லத்திற்கு அவர்கள் கேட்ட கட்டிடத்தை கட்டிக் கொடுப்பதற்கும் விருப்பம் இருப்பதாக சங்கர் சொன்னான்.

கரும்பு தின்னக் கூலியா? என்னிடம் இருந்த எல்லா விபரங்களையும் சங்கருக்குக் கொடுத்தேன். செயற்கைக் கால் பொருத்தும் யேர்மனியத் தொழில் நுட்பத்தைப் பயில ஒரு இளைஞன் விருப்பம் தெரிவித்தான். அவன் பெயர் ஸ்ராலின். அவனை கொல்கரிடம் ஆனந்தண்ணை இணைத்து விட்டார். முதற் கட்டமாக தங்கள் நிறுவனத்தில் ஸ்ராலின் ஆறுமாதப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என கொல்கர் அறிவுரை சொன்னான். இனி வரும் காலங்களில் ஸ்ராலின் கொல்கருடன் இணைந்து தாயகம் சென்று யேர்மனிய தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொள்ளும் வெண்புறா திட்டத்தை நடைமுறைப் படுத்துவான். அந்தத் திட்டத்திற்கான நிதியை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதே எங்களது அடுத்த வேலையாக இருந்தது.

ஆனாலும் செல்வாவின் கை செய்வதற்கான நிதியை ஏற்பாடு செய்ய வேண்டிய ஒரு கடமை நிலுவையில் இருந்தது.

ஆனந்தண்ணையிடம் இருந்து ஒரு நாள் அழைப்பு வந்தது.

„செல்வாவின் இலத்திரன் கை செய்யும் பணியில் தாங்களும் இணைந்து கொள்ளலாமா என அமெரிக்காவில் இயங்கும் தமிழர் புனர்வாழ்வுக் கிளை கேட்டிருக்குது' மகிழ்ச்சியோடு சொன்னார்.

„செங்கம்பளம் விரித்து வரவேற்க வேண்டிய விசயம். ஓமெண்டு சொல்லுங்கோ'

„நான் ஏற்கனவே ஓமெண்டு சொல்லிட்டன். இப்ப உங்களுக்கு தகவலை தந்திருக்கிறன்' என்றார்.

இலத்திரன் கை செய்வதற்காக தமிழர் புனர்வாழ்வு அமெரிக்கக் கிளையினர் பதினைந்தாயிரம் யூரோக்களை தந்து உதவினார்கள்.

நான் எடுத்து வந்த விடயங்கள் ஈடேறிக் கொண்டிருப்பது எனக்குள் ஒரு பதினாறு வயது இளைஞனை உருவாக்கி விட்டிருந்தது.

இடைப்பட்ட நேரங்களில் என்னால் முடிந்த வரையில் செஞ்சோலை மற்றும் இதர இல்லங்களுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டேன்.

- (தொடர்ச்சி)

- மூனா    

Quelle - Ponguthamizh

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை