நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23

எல்லாம் ஓரளவு தயாரானது. இம்முறை பயணத்தில் எங்களது இரு மகன்களும் இணைந்து கொண்டார்கள். டுசுல்டோர்ப் விமான நிலையத்தில் ஆனந்தண்ணை, கொல்கர், ஸ்ராலின் மூவரையும் சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு.

டுசுல்டோர் பிற்கு போகுமுன் ஸ்வெற்றா நகரத்துக்குச் சென்று றாடமாகர் குடும்பம் மற்றும் சங்கர், அவருக்கு உதவிய நண்பர் ஆகியோரைச் சந்திக்க வேண்டி இருந்தது. றாடமாகர் குடும்பம் எங்களை அன்போடு வரவேற்றார்கள். தாங்கள் தந்து விடும் பொருட்களை அழகாகப் பொதி செய்து வைத்ததும் அல்லாமல் அவற்றின் விபரங்கள், அவை எந்த எந்தப் பொதிகளுக்குள் இருக்கின்றன என்ற தகவல்கள் எல்லாவற்றையும் அச்சிட்டு விபரமாக பேப்பர்களில் தந்தார்கள். அவர்கள் தந்த பொதிகளின் அளவு மட்டும் 65 கிலோவிற்கு மேலாக இருந்தது. ஆகவே எனது ஒரு மகனின் பயணச் சீட்டை தாங்களே பொறுப் பெடுப்பதாகச் சொன்னார்கள். இனியவாழ்வு இல்லக் கட்டிடம் கட்டுவதற்காக 2100யூரோக்களையும் ஒரு உறையில் போட்டுத் தந்தார்கள். வாடகைக் காரை வரவழைத்து டுசுல்டோர்ப் வரை போக ஏற்பாடும் அவர்கள் செய்தார்கள்.

நன்றி சொன்னோம். இது ஒரு மனிதாபிமானப் பணி. ஒருவருக்கொருவர் நன்றிகள் சொல்லிக் கொண்டாலும் தொடர்ந்து செய்வோம் என்று சொல்லி அன்போடு வழி அனுப்பி வைத்தார்கள்.

டுசுல்டோர்ப் விமான நிலையத்தில் கொல்கர் எங்களுக்காகக் காத்து நின்றான். முன்னர் அவனிடம் இருந்த அதே சிரிப்பு. மகிழ்ச்சியுடன் எங்களை எதிர் கொண்டான். செல்வாவிற்குப் பொருத்த வேண்டிய இலத்திரன் கையை மிகப் பாதுகாப்பாக , ஒரு குழந்தையைப் போல தனது கையில் அணைத்து வைத்திருந்தான்.

நாங்கள் சென்ற சில நிமிடங்களில் ஆனந்தண்ணையும், ஸ்ராலினும் பெரிய பெரிய பொதிகளோடு வந்து சேர்ந்தார்கள்.

கோப்பி குடிப்போமா? என்று ஆனந்தண்ணை இம்முறை கேட்கவில்லை. நேரம் போதாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

சென்ற முறை பயணம் தந்த அனுபவம் இம்முறை சரியாகச் செயற்பட உதவியது. பொதிகளை ஒப்படைத்தோம். பயணத்திற்கு அனுமதிக்கப்படும் எடையை விட அதிகமாக இருந்ததால் செரோலியன் அமைப்பு மூலமாக கொண்டு செல்ல வேண்டிய பொருட்களிற்காக மேலதிகமாகப் பணம் செலுத்த வேண்டியதாக இருந்தது.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சம்பிராதயங்கள் முடிந்து வெளியே வந்தோம்.

தமிழர் புனர் வாழ்வுக்கழகச் சின்னம் பொறித்த வாகனம் ஒன்று விமான நிலையத்திற்கு வெளியே எங்களுக்காகக் காத்து நின்றது.

அன்று இரவே எங்களது வன்னிக்கான பயணமும் இருந்ததால், நாம் தங்குவதற்கான இடம் தமிழர் புனர் வாழ்வுக் கழக கொழும்புக் கிளையில் ஏற்பாடாகி இருந்தது.

„உன் அண்ணணை எப்போ சந்திக்கலாம்?' கொல்கர் என்னிடம் கேட்ட பொழுதுதான் நானும் அண்ணனைப் பற்றிய நினைவுக்கு வந்தேன்.

இம்முறை செயற்பாட்டுக்கான நாட்கள் ஒரு கை யின் விரல்களில் அடங்கி இருந்தன. நேரத்தை பார்த்துத்தான் செலவிட வேண்டி இருந்தது. அது கொல்கருக்கும் தெரிந்திருந்தது.

'வன்னி போய் திரும்பி வரும் பொழுது எனது அண்ணனை ச் சந்திப்போம்' என்றேன்.

„திரும்பி வரும் பொழுதும் சந்திப்போம்' என்றான்.

கொண்டு சென்ற பணத்தை இலங்கை ரூபாவிற்கு மாற்ற வேண்டி இருந்தது. பெண்கள் புனர்வாழ்வு நிலையத்திற்கு தருவதாக ஒப்புக் கொண்ட தையல் இயந்திரங்கள் வாங்க வேண்டிய தேவையும் இருந்தது.

தமிழர் புனர் வாழ்வுக் கழக கொழும்புக் கிளையின் அருகிலேயே சிங்கர் கொம்பனி இருந்ததால் தையல் இயந்திரங்களை கொள்வனவு செய்வது எளிதாகிப் போனது.

கொல்கரின் விருப்பத்தின் பேரில் இருந்த சொற்ப நேரத்துக்கு எனது அண்ணனைச் சந்தித்து வரலாம் என்று தொலைபேசியில் அழைத்தேன்.

„வன்னிக்கு இரவுதானே பயணம். போவதற்கு முன்னர் இரவுச் சாப்பாட்டுக்கு வாருங்கள்“ என்று அங்கிருந்து அழைப்பு வந்தது.

கொல்கர் மகிழ்ச்சியோடு, தோளில் மாட்டிய பையோடு அண்ணன் வீட்டிற்கு வந்தான். அண்ணனைக் கண்டதும் கொல்கர் முகத்தில் பூரண நிலவு. மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. கொல்கர் தனது பையில் இருந்து தான் கொண்டு வந்த மதுவை எடுத்து அண்ணனிடம் கொடுத்தான். மறந்து விடாத மது தந்த நட்பு அது.

அதிக நேரம் அண்ணனிடம் இருக்க வாய்ப்பில்லை. உணவு எடுத்துக்கொண்ட பின் வன்னிக்குப் பயணமானோம்.

வவுனியாவிலும் தமிழர் புனர் வாழ்வுக் கழகக் கிளை இருந்தது. காலையில் அங்கே இளைப்பாறிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

சோதனைச் சாவடிகளில் இறங்கி, ஏற வேண்டிய தேவைகளோ, பெட்டிகளை திறந்து, மூட வேண்டிய தேவைகளோ இருக்கவில்லை. முக்கியமாக அல்பா, ஆழ்வாப்பிள்ளை அங்கலாய்ப்புகள் அறவே இருக்கவில்லை.

குழி விழுந்த வீதிகளைக் காணவில்லை. தார் போட்டுச் சீராக்கி இருந்தார்கள். வீதியோரங்களில் புதிது புதிதாகக் கடைகள் பூத்திருந்தன. புதிய வர்ணங்களோடு கட்டிடங்கள் பொலிவாகி இருந்தன.

வன்னி செழித்து, சிரித்து எங்களை வரவேற்றது. வெண்புறா நிலையத்திலும் புதிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. கைத்தொலைபேசிகளுக்கு கதைக்கவும் கேட்கவும் இப்பொழுது இயலுமாக இருந்தன. இம்முறை பயணம் அதிக அலுப்புத் தராததால் நாங்களும் பழுதில்லாமல் புத்துணர்வோடு இருந்தோம். ஆனாலும் ஏதோ குறைந்திருந்ததை உணர முடிந்தது.

மே மாதத்தில் வெண்புறாவிற்கு நாங்கள் வந்திருந்த பொழுது அவர்களிடம் இருந்த மகிழ்வும், உற்சாகமும் இப்பொழுது அங்கே காணாமல் போயிருந்தன. வெண்புறா தொழில் பட்டறைக்குள் சென்ற கொல்கர் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வந்தான். முழுதாக ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருந்தன.

மறுநாள் காலையில் செல்வாவுக்கு கை பொருத்திப் பார்க்கும் வேலையும், அந்தக் கையை அசைப்பதற்கான பயிற்சி கொடுக்கும் வேலையும் கொல்கருக்கு இருந்தன. இம்முறை கொல்கருக்கு உதவியாக ஸ்ராலின் நிற்பதால் எனக்கான சுமை இல்லாமல் இருந்தது.

நாங்கள் சென்றிருந்த நேரம் தமிழர் புனர் வாழ்வுக் கழக இணைப்பாளர் றெஜி வன்னியில் இல்லை. வெளி நாடுகளுக்கான செயற்பாடுகளுக்காக அவர் ஐரோப்பா சென்றிருந்தார். இனியவன்தான் எங்களுக்கான தமிழர் புனர் வாழ்வுக் கழகத் தொடர்பாளராக இருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமான அரசியல் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த முக்கியமான நேரம். அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் செய்வதற்காக வன்னிக்கு வந்திருந்தார். அரசியல்துறை அலுவலகத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை.

நின்று நிதானமாக வணக்கம் சொல்லக் கூட யாருக்குமே நேரம் இருக்கவில்லை. நாங்களும் யாருக்கும் இடைஞ்சல்கள் தர விரும்பவில்லை.

சென்ற தடவை போல் இம்முறையும் அரசியல்துறைக்கு எங்கள் வருகையைத் தெரிவித்துவிட்டு வந்து விட்டோம்.

அன்று மாலையே பெண்கள் புனர் வாழ்வு நிலையத்திற்குச் சென்று தையல் இயந்திரங்களைக் கையளித்தோம். வெளிநாடுகளில் இருந்து பல தமிழ் உறவுகள் வந்து அவர்களுக்கு உதவி செய்திருந்ததை அங்கே அவதானிக்க முடிந்தது. முன்பிருந்த எதிர்பார்ப்பும், வரவேற்பும் அங்கே குறைந்திருந்தன. பல தொப்புள் கொடி உறவுகள் உதவிகள் செய்ய அடிக்கடி வந்து கொண்டிருந்ததால், ஒரு சம்பிரதாய முறையிலான அணுகுமுறையைத்தான் இப்பொழுது அவர்களிடம் காணக் கூடியதாக இருந்தது. அவர்களின் தேவைகள் நிறைவேறுவதில் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சி அவர்களிடமும் நிறைந்து இருந்து.

- (தொடர்ச்சி)

- மூனா    

Quelle - Ponguthamizh

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை