நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25

வாகனத்தின் மேற்கம்பிகளைப் பிடித்து எம்பி வெளியே குதித்து, சிரித்தபடி ஒரு இளைஞன். அட அது பிரபாகரன். இராணுவச் சீருடையோ, பிரமுகர்களைச் சந்திக்கும் பிரத்தியேக உடையோ அணியாமல் சாதாரண கோடு போட்ட சேர்ட்டுடனும், சாம்பல் நிற நீள் காற்சட்டையுடனும் சிரித்துக் கொண்டே வந்தார்.

இருக்கையில் இருந்து எழுந்து கொண்டோம்.

„முதலிலை மன்னிக்கோணும். அரை மணித்தியாலம் லேற்றாப் போச்சு“

ஒரு தலைவனின் பேச்சின் கண்ணியம் தெரிந்தது.

„பொடிபில்டிங் செய்யிறீங்கள் போலை' எனது மூத்த மகனைப் பார்த்துக் கேட்டார்.

எனது இரு மகன்களும் தங்கள் வாழ்வில் இப்படி ஒரு தருணம் வரும் என்று எதிர்பார்திருக்க மாட்டார்கள். இங்கே அவர்களுக்கு அருகில் இருந்து கொண்டு அவர்களது வயதுக் கேற்ப சமீபத்தில் வெளி வந்த ஆங்கிலப் படங்கள், இசை அல்பங்கள், விளையாட்டுக்கள் என அவர்களுடன் பிரபாகரன் உரையாடிக் கொண்டிருந்தார்.

மீண்டும் சந்திப்பதலான மகிழ்ச்சியை கொல்கர் பிரபாகரனுடன் பகிர்ந்து கொண்டான்.

கையோடு கொண்டு வந்த செல்வாவின் கையை அவர் முன்னால் இருந்த மேசையில் வைத்து அதன் செயற்பாடுகளை விளக்கினான். கொல்கர் சொல்வதை ஸ்ராலின் மொழி பெயர்த்து பிரபாகரனுக்குச் சொன்னான்.

„கனக்கப் பேர் இஞ்சை வந்திருக்கினம். அது செய்யிறம் இது செய்யிறம் எண்டு சொல்லிப் போட்டுப் போவினம். பிறகு ஆக்களைக் காணக் கிடைக்காது. நீங்கள் விதிவிலக்கு. சொன்ன நேரத்துக்கு வந்திருக்கிறீங்கள். சொன்னதைச் செய்து கொண்டும் வந்திருக்கிறீங்கள்“

தனது மகிழ்ச்சியை பிரபாகரன் வெளிப்படுத்த, அந்த வார்த்தைகள் எனது உச்சியில் போய் நின்று உடலெல்லாம் குளிர வைத்தன.

„கொல்கர் வாறான் எண்டால் இஞ்சை „வாறான்“ எல்லாம் ஓடி ஒளிஞ்சிடுதுகள்“ கொல்கரைப் பார்த்து நகைச்சுவையோடு பிரபாகரன் சொன்னார்.

„வாறான் „ என்ற வார்த்தையை மறக்காமல் அவர் வைத்திருந்தார்.

„நீங்கள் பகிடிக்காரன் எண்டு கஸ்ரோ சொன்னான்“ சிரித்துக் கொண்டே என்னைக் கேட்டார்.

„நீங்கள் சொன்ன „வாறான் „ பகிடியை கஸ்ரோ கேட்டால் உங்களையும் பகிடிக்காரன் எண்டுதான் சொல்லுவார்“

சிரித்துக் கொண்டே சொன்னார், „வாங்கோ சாப்பிடுவம்'

மண்டபத்தில் வெண்புறா உறவுகளுக்கு உணவு உட்கொள்வதற்கான இடம் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.

பிரபாகரன், தமிழ்ச் செல்வன், கொல்கர், எனது குடும்பம் இணைந்து சாப்பிட இடம் தனியாக ஏற்பாடாகி இருந்தது.

சாப்பிடும் பொழுது பலதைப் பேசிக் கொண்டோம்.

தங்களுக்குத் தரப்பட்ட மாம்பழத்துண்டுகளையும், பலாப்பழச் சுளைகளையும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த எனது இளைய மகனின் தட்டில் பிரபாகரனும், தமிழ்ச்செல்வனும் மாறி மாறி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

„எல்லாத்தையும் அவனுக்குக் குடுத்தால் உங்களுக்கு...?'

„எங்களுக்கு எப்பவும் இது கிடைக்கும்“

„யேர்மனியிலை கிடைக்கிறதுக்கு வாய்ப்பிருக்காது“ என ஆளாளுக்கு காரணம் சொன்னார்கள்.

சர்க்கரை வருத்தம் இருவருக்கும் இருப்பது எனக்கும் தெரியும். பழங்களை அவர்கள் தவிர்த்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

„நீங்கள் தன்னை வந்து பாக்கேல்லை எண்டு சூசை குறைப் பட்டுச் சொன்னான். நாளைக்குப் போய்ப் பாருங்கோ. அதற்கான ஏற்பாட்டை ரேகா செய்வான். பிரபாகரன் இன்னும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

அரசியல் பேச்சுக் குழுவை சந்தித்து வழி அனுப்பும் வேலை பிரபாகரனுக்கு அன்று இருந்தது. சாப்பாடு எடுத்துக் கொண்டதன் பின்னர் தமிழ்ச்செல்வனை அவர்களிடம் செல்லும் படியும் தான் பின்னர் வருவதாகவும் சொன்னார்.

தமிழ்ச் செல்வன் எங்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டார்.

„வாங்கோ. உங்களோடை கதைக்கோணும்' என்னைத் தனியாக பிரபாகரன் அழைத்தார்.

பிரபாகரனும் நானும் ஒரு அறைக்குள் சென்றோம்.

„கொல்கர் என்ன சொல்லுறான்?'

„எதுவுமே சொல்லேல்லை. ஆனாலும் இது அவன் எதிர்பார்க்காதது. அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் இது ஏமாற்றமாகத்தான் இருக்கு'

„எனக்கு இந்த விசயம் முதலிலை தெரியாது. பிரச்சினை எண்டு வந்தாப் போலைதான் எனக்கு சொல்லிச்சினம். இப்ப உங்களிட்டை சொல்லச் சொல்லி என்னைக் கேட்டிருக்கினம்'

„நாட்டுக்கு சேவை செய்யிறதுக்கு எல்லோருக்கும் பங்கிருக்கு. அதிலையும் சிக்கல் சிதறல் சீண்டல்கள் இல்லாமல் செய்யோணும்'

„லண்டனிலை இருந்து வந்து பட்டறை ஒண்டு வைக்கினம் எண்டுதான் எனக்கு முதலிலை தகவல் வந்தது. ஆனால் வெண்புறா நிறுவனம் எண்டு ஆரம்பிச்ச பிறகுதான் சிக்கல் என்னவெண்டு தெரிய வந்தது“

„கால் பொருத்துற எங்கடை செயற் திட்டத்தை யேர்மனியரிட்டையும் கொண்டு செல்லவதற்கான வேலைத்திட்டங்களையும் நாங்கள் ஆரம்பிச்சிட்டம். போன தடவை நாங்கள் இஞ்சை வந்து செய்த சேவையைப் பற்றி யேர்மனியப் பத்திரிகைகளிலையும் வந்திருக்கு. எல்லாம் ஒழுங்கா போய்க் கொண்டிருக்கக்கை ஒரு தடங்கல் வந்திருக்கு“

„நீங்கள்தான் இதுக்கு ஒரு முடிவு சொல்லோணும்“

பிரபாகரன் என்னை அப்படிக் கேட்டதும் எனக்கு நினைவுக்கு வந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

1990இல் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கான சேவைகளை நாங்கள் மேற் கொண்டிருந்த பொழுது, பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது `தமிழர் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்´ மூலமான சேவைகளும் ஐரோப்பிய நாடுகளில் மேற் கொள்ளப் பட்டிருந்தன. தமிழர்களுக்கு இரண்டு புனர்வாழ்வு நிறுவனங்கள் அதுவும் சிறு அளவிலான பெயர் மாற்றத்துடன் சேவை செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும், ஒருங்கிணைந்த பங்களிப்புகள் சிதறிப் போகும் வாய்ப்புகளையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அறிவித்திருந்தோம். தமிழர் புனர் வாழ்வுக் கழகம் பேராசிரியருடன் உரையாடிய பொழுது நிலைமையைப் புரிந்து கொண்ட அவர் தனது அமைப்பின் செயற்பாட்டை தானகவே உடனே நிறுத்திக் கொண்டார்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது அன்றைய நிலைப்பாட்டை பிரபாகரனிடம் நினைவூட்டி விட்டுச் சொன்னேன், „பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் சொன்ன வழிதான் பிரச்சினை இல்லாதது. அதைத்தான் நாங்களும் செய்யோணும்“

„அப்பிடியெண்டால்..?'

„டொக்டர் மூர்த்தியே செய்யட்டும். நாங்கள் ஒதுங்கிக் கொள்ளுறம்“

நான் அப்படிச் சொன்னது பிரபாகரனுக்கு கவலையைத் தந்திருக்கலாம்.

„அப்பிடிச் சுலபமா விடேலாது' என்றார் பிரபாகரன்.

„சுலபமில்லைத்தான். வெண்புறா நிறுவனம் 1995இலை யாழ்ப்பாணத்திலை இருக்கக்கையே நாங்கள் யேர்மனியிலை வெண்புறாவுக்கான வேலைத்திட்டத்தை தொடங்கிட்டம். நீண்டகாலச் செயற்பாடு எங்களுடையது. இதுதான் யேர்மனிக் கிளையின் முக்கியமான செயற்பாடாகவும் இருந்தது. இவ்வளவு தூரம் எங்கடை செயற்பாடு வளர்ந்த பிறகு திடீரென மாற்றம் வந்தால் எங்களது செயற்பாட்டில் ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

லண்டன் TRO கிளிநொச்சியில் கால் பொருத்திற வேலையைச் செய்தால் நாங்கள் முல்லைத்தீவிலை செய்யலாம் எண்டுதான் முதலிலை நினைச்சனாங்கள். ஆனால் வெண்புறா என்ற ஒரு குடைக்கு கீழை இரண்டு செயற்பாடு சரிவராது. ஆகவே மூர்த்தியரே அதைச் செய்யட்டும். அவருக்கு ஐபிசி றேடியோ மூலமாக ஐரோப்பா முழுதும் இதைப் பிரச்சாரம் செய்யிறதுக்கும் உதவிகள் பெறுறதுக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கு“

„அப்ப நீங்கள் என்ன செய்யப் போறீங்கள்?'

„இப்போதைக்கு செல்வாக்கு கை பொருத்திற வேலை இருக்கு. அது முடிய ஏதாவது ஒண்டு செய்வம்“

எனக்கிருந்த கவலையை நான் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அது பிரபாகரனின் முகத்தில் பிரதிபலித்தது.

வெண்புறா நிறுவனத்திற்கான உழைப்பு என்னுடையது மட்டும் அல்ல. பலரது உழைப்பு அங்கே இருக்கிறது. ஒரு விடயத்தை ஆரம்பிப்பது வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால் அதற்கான ஆயத்தங்கள், திட்டமிடல்கள், செயற்பாடுகள், நடைமுறைப்படுத்தல்கள் என ஏகப்பட்ட சிரமங்கள் இருக்கின்றன. ஓடும் குதிரைக்கு மேல்தானே எல்லோரது பார்வையும். அதில் ஏறிச் சவாரி செய்யும் ஆசை பார்ப்பவர்களுக்கு வருவதுதானே இயல்பு.

சிறிது நேரம் பிரபாகரன் பேசாமல் இருந்தார்.

„நீங்கள் புதுசா ஏதாவது செயற்திட்டத்தை ஆரம்பிக்கிறதுக்கு பணஉதவி தேவை எண்டால் நான் தாறன்' பிரபாகரன் அப்படிச் சொல்வார் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எனது சேவையை அவர் விரும்பி இருக்கிறார் என்பது அப்பொழுது எனக்குப் புரிந்து போனது.

பிரபாகரன் சொன்னது போல் நின்று விடாமல் நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

„எந்த நேரமும் சேவைகள் செய்ய நீங்கள் இங்கு வரலாம். உங்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம். கொல்கர் போன்றவர்களின் சேவையும் இங்கு அவசியமானது. அவரையும் சமாதானம் செய்யுங்கோ. அவர் நொந்து போகக் கூடாது“

நாங்கள் பேசிக் கொண்டதில் பிரபாகரன் திருப்பதி அடைந்தாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் வில்லங்கங்கள் என்றால் தூர ஓடிவிடும் எனது குணம் அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

நாங்கள் கதைத்தக் கொண்டிருந்த இடத்தில் இருந்த மேசையில் இருந்த தமிழ் கார்டியன் பத்திரிகையை பிரபாகரனிடம் காட்டி அதற்கு நான் கார்டூன் வரைவதை அவரிடம் சொன்னேன்.

லண்டனில் மாதம் இருமுறை வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை அது. அதன் புதிய பதிப்புதான் அங்கே இருந்தது. வன்னிக்கு நான் வர வேண்டி இருந்ததால் அவசரமாக நான் வரைந்து கொடுத்திருந்த கார்டூனில் ஒரு பிழை இருந்தது. அதை நான் பிரபாகரனிடம் சொன்னேன்.

அரசாங்கத்தை படகுபோல் வரைந்திருந்தேன். ஜனாதிபதியான சந்திரிகா கையில் சாட்டை வைத்திருக்கிறார். படகின் துடுப்பை பிரதமராக இருந்த ரணில் வலித்துக் கொண்டிருக்கின்றார். நான் வரையும் பொழுது சந்திரிகாவின் வலது கையில் இருக்க வேண்டிய சாட்டையை தவறுதலாக இடது கையில் வரைந்திருந்தேன். இதைத்தான் பிரபாகரனிடம் சொன்னேன். பத்திரிகையைப் புரட்டிப் பார்த்த பிரபாகரன், „அடிச்சடிச்சு அம்மையாருக்கு கை நொந்திருக்கும். அதுதான் இப்ப இடது கைக்கு மாத்திட்டா போலை“ எனது தவறை சுட்டிக் காட்டாமல் ஒரு விமர்சனத்தில் சரியாக்கி விட்டிருந்தார்.

புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

பாலாண்ணையவையள் பாத்துக் கொண்டிருப்பினம். பிறகு சந்திப்பம்' என்று வாகனத்தில் ஏறிக் கையசைத்து விடை பெற்றுக் கொண்டார்.

- (தொடர்ச்சி)

- மூனா  

Quelle - Ponguthamizh   

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை